
தோழியாக அவார்ட் குடுத்த புதுகைத்தென்றலுக்கு நன்றி . போனமுறை சுவாரசியப்பதிவு என்று பாராட்டவேண்டி இருந்ததால் அவார்டை பிரித்துக்கொடுத்தேன். இது நண்பர்களுக்கான விருது தானே..என் நண்பர்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்பதால் பிரித்துக்கொடுக்கவில்லை.
--------------------------------------
தொடர்பதிவுக்குன்னே இந்த தளத்தை வைச்சிடலாமாங்கற அளவு மக்கள் தொடர்ந்து தலைப்புகளை தந்தவண்ணம் இருக்க.. நானும் அம்மா தலைப்பப் பிடிச்சக் குழந்தையாக போய்க்கொண்டிருக்கிறேன். இப்போ தமிழ்பிரியனின் தொடரழைப்புக்காக என் இளமைக்காலங்களுக்குள்ளே நுழையலாம்...
நான் முதல் முதலில் பள்ளிக்கூடம் போனது ஒன்றாம் வகுப்பு. சிலர் அரைக்ளாஸ் , பேபிக்ளாஸ் எல்லாம் முடிந்து போயிருப்பீர்கள். அது ஒரு சின்னக்கிராமம் திருவெண்காடுன்னு பெயர். ...பள்ளிக்கூடம் பெயர் ... மெய்கண்டார் துவக்கப்பள்ளி. அது இப்போது இடிக்கப்பட்டு சங்கரமடம் வந்திருப்பதாகக் கேள்விபட்டேன். முதல் வகுப்பு ஆசிரியை பெயர் ஜானகியாம் .. அது என்ன ஆம் என்றால், என் அம்மாவிடம் நேற்று கேட்டு நினைவுப்படுத்திக்கொள்ள முயற்சித்தேன்.. அத்தனை நினைவாற்றல். முதல் நாள் வகுப்பறைக்காட்சி மட்டுமே என் மனதில் நிழலாடுகிறது. இருட்டான வகுப்பறையில் மேலிருக்கும் கண்ணாடிவழி ஒளிகசிய அந்த ஒளிக்கற்றைக்கு பின்னால் ஆரஞ்சு வண்ணத்தில் சேலையணிந்த ஆசிரியை.பின் ஒருநாள் நாங்கள் மாயவரத்துக்கு மாறிப்போய்விட்டபின் அவர்களை அவர்கள் வீட்டில் சந்தித்ததாக நினைவு.
இரண்டாம் வகுப்பு சுத்தமாக நினைவே இல்லை.. சோம்பேறியின் ”ஏ நீ ரெண்டாம்ப்பு பாஸ் பண்ணி இருக்கியா நினைவு வருகிறது ” பாஸ் செய்திருப்பேனாத்தான் இருக்கனும். அதற்கு ஒரு ஆசிரியர் பிரம்போடு இருப்பது போன்ற ஒரு காட்சி ஒரு நொடிப்பொழுது வந்து மறைகிறது. அப்போது என்னோடு படித்த என் தோழி ஒருத்தி இன்றும் தொடர்பில் இருக்கிறாள். அவர்கள் குடும்பமே எங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர்கள் ..அந்த ஒரு காரணத்தால் தான் அந்த தோழி இன்னும் நட்பில் இருக்கிறாள். அவள் அடிக்கடி நினைவுபடுத்துவது நாங்கள் இருவரும் சிலேட்டில் எங்கள் மார்க்கைத் திருத்திக் காண்பித்தோமாம்.
மூன்றாம் வகுப்புக்கு நாங்கள் மாயவரம் வந்துவிட்டோம். சர்ச்சை சேர்ந்த ஸ்கூல் ..நர்ஸ் போன்ற வெள்ளை உடையும் தொப்பியுமாக ஜெர்மன் அம்மா தான் தலைமை.
அங்கே பல ஏழைகிராமக் குழந்தைகள் விடுதியில் தங்கிப்படிப்பது உண்டு. மூன்றாம் வகுப்பு சேர்ந்த புதிதில் நோட் வேண்டும் என்று டீச்சர் சொல்லி அதை நான் வீட்டில் சொல்லாமல் விட்டுவிட்டதால் பல நாட்கள் கழித்து புது நோட் வாங்கி என் அம்மாவே எல்லாவற்றையும் எழுத வேண்டிய நிலை வந்ததாக நினைவு. அப்போது தான் இந்த மூன்றெழுத்து ஆங்கில வார்த்தைகள் அறிமுகம்.. தரையோடு ஒட்டிய பலகைகள் நினைவுக்கு இருக்கிறது
நாலாம் வகுப்பு டீச்சரை நினைவுக்கு கொண்டுவர முடிகிறது. ஆனால் பெயர் நினைவில்லை. அவர்கள் தான் முதன் முதலில் எனக்கு கண் பார்வையில் கோளாறு இருக்குமோ என்று சொன்னது. வகுப்புப்பாடங்களை தப்பும் தவறுமாக எழுதிவிட்டு போர்டில் க்ளார் அடிப்பதாகக் குற்றம் சாட்டி வந்தேன்.
ஐந்தாம் வகுப்பு டீச்சரை நல்லா நியாபகம் இருக்கு. நித்யா டீச்சர். அவங்க தலைமை ஆசிரியராவும் இருந்ததால் அவங்களுக்கு பாடம் எடுக்கவே நேரம் இருக்காது. பல நேரம் நாங்க டாக்டர் விளையாட்டு விளையாடுவோம். எப்பவும் சபி முனிசா தான் டாக்டர்.. பசங்க எல்லாம் பெஞ்சுகளில் ஏறி குதித்து விளையாடுவார்கள். அந்த வகுப்பில் படித்த நாலைந்து பெண்கள் கல்லூரியிலும் ஒன்றாக படிக்க நேர்ந்ததால் தொடர்பில் இருக்கிறார்கள். வகுப்பருகில் இருந்த மகிழம்பூ மரம் எனக்கு மிகப்பிடித்தமானது. பலநேரம் அவற்றை தொகுத்து மாலையாக்குவோம்.
பள்ளியில் தோட்டம் இருந்தது வெண்டைக்காய் , அவரைக்காய் போன்றவற்றை அங்கே நாங்களே வளர்த்து பறித்தது நினைவுக்கு இருக்கிறது. வாத்துகள் நிறைந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டுவந்து ஊற்றுவோம். தென்னந்தோப்பிலிருந்து காய்களை இழுத்துவந்து ஓரிடத்தில் குவிப்பது, தென்னை குச்சிகளால் இடங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் கூட செய்திருக்கிறோம். படிப்பைத்தவிர எல்லாம் நினைவுக்கு வருகிறது.
கிருஸ்துமஸுக்காக குழுநடனம் கோலாட்டம் ஆடி இருக்கிறேன். அப்போதெல்லாம் பயிற்சிக்கென்று வகுப்பிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோம். அது மிகப்பிடித்தமானது. அங்கே நடக்கும் கிருஸ்துமஸ் நாடகமென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த தேவதைகளும் வழிகாட்டும் நட்சத்திரங்களும் மேய்ப்பர்களும் நேரிலேயே பெத்தலகேமில் இருந்து பார்த்த உணர்வைத்தரும்.பெத்தலகேம் பிறந்தவரை போற்றி துதி மனமே!!
எனக்கு வகுப்பெடுக்காவிட்டாலும் ஒன்னாப்பு டீச்சரை மட்டும் பள்ளிக்கே பிடிக்கும்..என் தம்பி அவர்களிடம் படித்ததால் பின்னொரு நாள் நாங்களிருவருமாய் போய் பார்த்துவந்தோம். திருமணம் செய்துகொள்ளாமல் பள்ளியிலேயே தங்கி இருந்த அவர்களை பெயர் சொல்லியாருமே அதிகம் அழைப்பதில்லை ஒன்னாப் டீச்சரென்றாலே ப்ரபலம் தான். என் தம்பி மட்டும் பேபிக்ளாஸ் படித்தான். அங்கே ஜெர்மனில் இருந்து வந்த பல விதமான விளையாட்டு ப் பொருட்கள் இருக்கும். பொம்மை பிஸ்கட்கள் இருக்கும். மதியம் பாய் விரித்துத் தூங்குவார்கள். பின்னால் தலை சீவி கையில் பிஸ்கட்களுடன் வெளியே வரும் அவர்களைப் பார்த்து நாம் பேபிக்ளாஸ் படிக்கவில்லையே என்று பல நாள் சோகமாக இருந்திருக்கிறேன்.
பைபிள் க்ளாஸ் உண்டு . அதில் பரிட்சை உண்டு. பரமண்டலத்திலிருக்கிற பரமபிதாவே என்று ஆரம்பித்த ப்ரேயர் உண்டு. ஆற்றுமணலாகக் குவிந்த முன் திடலும் மாமரங்களும் கூரைவேய்ந்த சாப்பாடுகூடமும் நினைவுக்கு வருகிறது. ஒன்றே ஒன்று தான் பள்ளியில் பிடிக்காதது. அது கழிப்பறை. மிகக்கொடுமையானதாக இருக்கும். அத்தனை குழந்தைகளுக்கு அது போதுமானதாக இருந்ததில்லை. மேலும் மிகத்தொலைவும் கூட.
----------------------------------------------
யாருக்கேனும் தொடர ஆசை இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.