February 27, 2007

புறாக்கூடு

தில்லி வந்த புதிதில் புறாக்கள் புதிய அனுபவம். எங்கள் ஊரில் கோயில்களில் மசூதிகளில் சர்ச்சுகளில் தான் அதிகம் இருக்கும் .ஊரில் காக்கைகளுக்கு உணவு வைப்பது வழக்கம் தான். குருவிகள் அத்தனை வராது. இங்கே தில்லியில் எல்லாரும் ஒரு மண்பாத்திரத்தில் உணவும் இன்னொரு மண்பாத்திரத்தில் தண்ணீரும் வைத்து புறா மற்றும் குருவிகளுக்கு என்று வெளியில் வைத்திருக்கிறார்கள். நானும் வைத்தேன். தில்லி போன்ற நகரத்தில் குருவிகளை ரசிக்க முடிகிறதே என்று தோன்றியது.




இங்கே வீடுகளின் சன்னல்களில் கூட கூடு கட்டி வாழ்கின்றன். எங்கள் குளியறை சன்னலில் சல்லடைக் கதவுக்கு வெளியே கண்ணாடிக் கதவு சாய்ந்த வாக்கில் இருக்கும் .இடையில் குளிருக்கும் வெயிலுக்கும் வாகாக கூடுகட்டும். வருடத்தில் பாதி நாட்கள் 'குகூ' குகூ' எனும் சத்தம் வீட்டில் கேட்டுக் கொண்டிருக்கும்.




கூடு கட்டி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவது என்று எல்லா காட்சிகளையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தேன். சமயத்தில் அதனுடன் பேசுவேன். அந்த அறையின் சத்தத்திற்கு அடைகாக்க ஆரம்பித்த காலத்தில் புறா பயப்பட்டு நடுங்கும். "இல்லை எதுக்கு பயப்படற நான் என்ன செய்தேன் உன்னை" கொஞ்ச நாளுக்கப்புறம் பழகியது போல் நம்மை கண்டுகொள்ளாமல் இருக்கும்.



சில வருடங்களுக்கு பிறகு வேறு வீடு வாங்கிய பின் இந்த
இனிய அனுபவம் ஒரு சோக அனுபவமாக மாறிவிட்டது.
அங்கே கூலருக்கு மேலே கூடு கட்டிக் கொண்டு இருந்தன புறாக்கள் இரண்டு . குஞ்சு பொரிக்கும் காலம் வரும் வரை கண்ணில் படாத பூனையார் வந்து அம்மா அப்பா குஞ்சுகள் என்று கபளீகரம் செய்துவிட்டார். துர்நாற்றம் , ரத்தம் என்று மனதை கலக்க வைத்தது புறாக்களின் மிச்சம்.




மீண்டும் ஒருமுறை கட்டியது அதே இடத்தில். கலைக்கலாம் என்றால் வயிற்றில் பிள்ளையோடு இருக்கிறாய் கலைக்காதே என்றார்கள் அம்மா. ஆனால் புறா அது உயிரோடு இருக்காதே என்று ஒரே கவலை. சரி என்று உயரத்தில் ஒரு ஆணியை அடித்து ஒட்டை பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றை மாட்டி அதில் மணல் இட்டு நிரப்பி கூட்டைக் கலைக்காமல் அதில் போட்டு வைத்தோம்.




இந்த முறையும் குஞ்சு பொரிக்கும் வரை ஒன்றும் இல்லை. குஞ்சு பொரித்து சில நாட்களில் வந்தார் பூனையார் எங்கிருந்து எப்படித்தான் தாவியதோ தெரியவில்லை . புறாவின் குடும்பத்தில் இறகுகள் தான் மிச்சம். எல்லோரும் பூனைக்கு உணவு புறா நீ ஏன் வருத்தப்படுகிறாய் ? என்று சமாதானப் படுத்தினார்கள்.
ஆனால் வீட்டினருகில் வசித்த ஒரு குடும்பத்தை அல்லவா இழந்துவிட்டேன் மனம் சமாதானம் அடையவில்லை.




அதற்கு பிறகு அடிக்கடி கட்டுகிறது. அது கட்ட முயற்சிக்க
நான் கலைத்துப் போட இது அடிக்கடி நடக்கிறது. ஒரு இடத்தில் கட்டும் பின்னர் கலைத்து விட்டு அதனுடன் பேசுவேன் வேண்டாம் போய் விடு . அது மீண்டும் பக்கத்தில் வேறு இடத்தில் கட்டும். குறைந்தது மூன்று முறை கட்டி கட்டி பிரித்துப் பால்கனியின் கட்டைச் சுவற்றில் வைத்து எடுத்துப் போ என்பேன். அதற்கு பிறகு தான் அது போகும்.




இப்போது என் மகனும் வந்து 'காக்கா' (புறாதான் அவன் பாஷையில்) 'நோ நோ' 'டோண்ட் டோண்ட்' (செய்யாதே )
என்கிறான். மகளோ "எனக்கு புறா பாஷை தெரிந்தால் அதுகூட பேசி இங்க கட்டினா பூனை வந்து சாப்பிட்டுடும் என்று சொல்லித் தருவேன்" ., என்கிறாள்.

9 comments:

துளசி கோபால் said...

அடக் கடவுளே............ பாவம் புறா.

( இன்னும் 29தான் இருக்கு)

வடுவூர் குமார் said...

இங்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க கொஞ்சம் நாகரீகமாக "விஷ உணவு வைக்கப்படுகிறது"- முக்கிய காரணம் காரின் மீது இது ஏகத்துக்கு அசிங்கம் பண்ணிவிடுகிறதாம்.
காக்கைக்கு (கொஞ்சம் புத்திசாலி போல் இருக்கு!) கன் தான்.

அபி அப்பா said...

ஆமாம். நான் உங்க கருத்தோட ஒத்துபோகிறேன். அது கூடு கட்டி குடும்பத்தோடு பலியாவதை விட வேறு எங்காவது போய் நல்லா இருந்தா சரிதான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன துளசி நமக்கு வர்ரதே கொஞ்சம் அதுலயும் கவுண்டவுன் வேறயா...என்னமோ போங்க.
புத்தனைப்போல ஞானம் வந்துடுச்சு.
பின்னூட்ட ஆசை ஒழி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னமோ நிறைய வரப்போற மாதிரி குரூப்பா பின்னூட்டம்போடறேன்னு
நினைச்சுக்காதீங்க. நன்றிக்கு தனி தனியா போட்டா கேவலமாம். என்ன பண்ண ..

வடுவூர்குமார் அய்யோ பாவம் உங்கூரு புறாக்கள் பறவைகள். மனிதன் காட்டை அழித்து நாட்டுக்குள் வரும் விலங்கு பறவை எல்லாவற்றையும் கூண்டுக்குள் வைத்து பார்க்கிறான் ஒருபக்கத்துல நம்ம வசதிக்கு அதெல்லாம் செய்ய வேண்டி இருக்கு . தனியா ஒரு பணக்காரர் சொத்து வைத்துட்டு போறதும் நடக்குது ஒரு பக்கத்துல.


ஆமா அபி அப்பா,புறாக்களே
எங்கிருந்தாலும் வாழ்க என் கண்முன்னால சாகத அவ்வளவு தான்.

சீனு said...

நாங்கள் சைதையில் இருந்த பொழுது, ஒரு அறையில் புறா ஒன்று கூடு கட்டியிருந்தது. அது 'முழுகாம' இருந்ததான், நாங்களும் தாய் பாசத்தோட அனுமதித்தோம், முக்கியமா நான், பின்னால் அதுவே எனக்கு பிரச்சினையாகிப் ஆவது தெரியாமல். சில நேரங்களில், அந்த அறைகதவின் சன்னல்களை அறியாமல் மூடிவிடுவோம். பின் அலுவல் முடிந்து வந்து பார்த்தால், அந்த தாய் பறவை அந்த சன்னலுக்கு வெளியே சோகமாக அமர்ந்திருக்கும்.

முதலில் ஒரு புறா அம்மையார் முட்டை போட்டு குஞ்சு பொரித்தார். சரி! இருக்கட்டும் என்று பார்த்தால், அதற்கு அடுத்து அந்த இடத்தை இன்னொருவருக்கு உள் வாடகை கொடுக்க, இப்படியே ரிலே ரேஸ் ஆனது. அதுவும், அந்த அறையில் மேலே இடுக்கும் ஸ்லாப்பில் இருந்ததால், அந்த அறையே நாறிப் போனது. என் நண்பர்களும் எனக்காக விட்டு வைத்தார்கள்.

பின் நாளாக நாளாக அவைகளின் தொல்லை அதிகமானது. காலையில் தூங்க விடாது. அதுவும் நைட் சிஃப்ட் போய் வந்து காலையில் தூங்குவேன், அப்பொழுது அதன் சத்தமே நம்மை தூங்கவிடாது. பின் பொருமை இழந்தவர்களாக என் பெர்மிஷனுக்கு காத்திருந்த என் அறை நண்பன் ஒருவன், நான் ஒத்துக் கொண்டதும், ஒரு நாள் அந்த அறையில் இருந்த புறாக்களை விரட்டிவிட்டான் :(

//என்ன துளசி நமக்கு வர்ரதே கொஞ்சம் அதுலயும் கவுண்டவுன் வேறயா...என்னமோ போங்க.//

B-)

சங்கர் கணேஷ் said...

புறா பாஷையும் தெரியுமா உங்களுக்கு..?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\முதலில் ஒரு புறா அம்மையார் முட்டை போட்டு குஞ்சு பொரித்தார். சரி! இருக்கட்டும் என்று பார்த்தால், அதற்கு அடுத்து அந்த இடத்தை இன்னொருவருக்கு உள் வாடகை கொடுக்க, இப்படியே ரிலே ரேஸ் ஆனது.//

சீனு, உள்வாடகையா புறாக்களா
ரொம்ப அநிநாயமா இருக்கே.
அதுகூட தெரியாத
அப்பாவி ஓனரா இருந்திருக்கீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\Sankar said...
புறா பாஷையும் தெரியுமா உங்களுக்கு..? //

தெரிந்திருந்தால் பரவாயில்லை.
இங்கே கட்டாதே ஆபத்துன்னு
சொல்லி இருக்கலாம்.
பயப்படாதே என்று பேசினேனே
முன்னாடி அப்ப அது புரிஞ்சு
சும்மா இருந்ததா ..இல்ல
சும்மாவே சும்மா இருந்ததோ
தெரியலை.