January 22, 2007

ZOZO

zeestudio வில் zozo என்ற திரைப்படத்தை , ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு பிறகு, பார்க்க நேரிட்டது.இணையம் வேலை செய்யாதபோது ரிமோட்டால் தொலைக்காட்சியை ஒரு வலம் வந்தபோது ஆங்கில மொழியாக்கத்துடன் ஓடிக் கொண்டிருந்த அப்படம் இருநிமிடங்களிலேயே இது ஒரு நல்லபடம் என்பதை உணர்த்தி தொடர்ந்து பார்க்க வைத்தது.

zozo என்கிற 12 வயது பையன் லெபனனின் சிவில் போருக்கு நடுவில் ஒரு சாதாரண வாழ்வு வாழ்ந்து கொண்டு உறவுகளின் நட்புகளின் அணைப்பில் கனவுகள் காண்பவனாக இருக்கிறான். ஒரு நாள் அவன் குடும்பத்தில் எல்லோரையும் இழந்து தனியாகிறான். அவனுடைய
தாத்தா பாட்டி சில வருடங்களுக்கு முன்னமே நடுநிலை நாடான ஸ்வீடன் போய் குடியிருப்பதால், தாத்தாவின் ஸ்வீடன் பற்றிய வர்ணிப்புகளின் ஈர்ப்புடன் அவன்
ஸ்வீடன் செல்லுகிறான் .

ஸ்வீடன் செல்லும்முன் ஒரு சிறு பெண்ணுடன் அவனுக்கு
நட்பு கிடைக்கிறது. அவள் அவனுடன் வரத்தயாராகும் போது பெரியவர்களால் தடுக்கப்படுகிறாள். பெற்றோரை இழந்த அவனுக்கு அடுத்த பிடியாக கிடைத்த அப்பெண்ணையும் இழந்து ஒரு ஆபிசரின் கருணையால் தான் ஸ்வீடன் செல்கிறான்.

அவன் நினைத்தது போல் அந்த நாடு அவனுக்கு நிம்மதியளிக்கவில்லை . ஒரு நாட்டில் அகதியைப்போல் சென்றவனுக்கு ஏற்படும் அனைத்து துயர்களையும் அவன் படுகிறான்.நட்பு கிடைக்காமல் பள்ளியின் மற்ற மாணவர்களின் புறக்கணிப்பு மற்றும் தாக்குதலுக்கு ஆளாகிறான்.

அடிக்கடி பழைய நினைவுகளால் கனவில் மூழ்கி அம்மாவுக்கு ஏங்கி வாடுகிறான்.
தாத்தாவின் முயற்சியால் அவன் பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வருகிறான். ஒரு நட்பு கிடைத்து அவன் மீண்டும் ஒரு சிறுவனுக்குரிய மகிழ்ச்சியில் சிரிக்கிற காட்சியுடன் முடிகிறது.

குண்டுமழை பொழியும்போது அம்மாவின்கைப் பிடித்து
போவதும், அண்ணன் ஒளித்து வைத்து காப்பாற்றுவதும்,
ஒருவரும் இன்றி அவன் கோழிக்குஞ்சிடம் நட்பு கொள்வதும்,ஸ்வீடன் பள்ளியில் புறாவிடம் என்பெயர் zozo உன்பெயர் என்று நட்புக்கு ஏங்குவதுமாக
நெகிழ வைக்கும் அற்புதமான திரைப்படம்.

பள்ளியில் நட்பினை பெறுவதற்கு அவன் பென்சிலும் ரப்பரும் அழகாக இருக்கிறது என்று சொன்ன பையனுக்கு அதை பரிசாக தந்து விடுகிறான். உடனே மற்ற எல்லாரும் அவனை சூழ்ந்துகொண்டு எனக்கு எனக்கு என்பதும் இன்னும் என் அம்மாவுக்கு எனகேட்போருக்கெல்லாம்
அவன் தருவதாக சொல்வது அவன் நட்புக்கு ஏங்கு வதை
அழகாக சித்தரிக்கிற காட்சிகள்.

zozoவின் தாத்தா அவனை தைரியமாக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியாக அவனை அடித்த மூன்று சிறுவர்களில் ஒருவன் வீட்டுக்கு சென்று மூன்றுபேர் எப்படி ஒருவனை அடிக்கலாம் வா இப்போது நேருக்குநேர் எனும்போது அவரின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தாலும் அதுதான் அவனுக்கு தைரியமளிக்கும் என்கிறபடி எடுக்கப்பட்டிருக்கிறது.

தாத்தா பார்க் பெஞ்சில் அமர்ந்து, நான் சிறுவயதில்
இப்படி வீரமாக இதை செய்தேன் அதை செய்தேன் என்று
உற்சாகமாய் விவரிப்பதும் சரி, மருத்துவ மனையில்,
என்பையன் இறந்துவிட்டான் என்கால் உடைந்து விட்டது இருந்தாலும் நான் அழவில்லை. என்போல ஏன் நீ
இருக்ககூடாது என்று சொல்லும்போதும் சரி,
ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார்.

நல்ல நடிகர்கள்,லெபனனிலிருந்து குடிபெயர்ந்த முதல்
தலைமுறையை சேர்ந்த இயக்குனர் josef fares.
2005ல் வெளியாகி பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதாக வலையில் இங்கு
புகைப்படம் இணைக்க தேடியபோது அறிந்து கொண்டேன்.

5 comments:

பங்காளி... said...

தகவலுக்கு நன்றி லக்ஷ்மி...

அவசியம் பார்க்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பங்காளிஜி.

என் பெயரை லட்சுமி என்றே
உபயோகிக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.பதிவர் ராமசந்திரன் உஷா
வின் பின்னூட்டப்பெட்டி மூலம் லக்ஷ்மி...என்று வேறுஒரு பதிவர் இருப்பதாக அறிகிறேன்.

துளசி கோபால் said...

அப்பப்ப இணையம் வேலை செய்யாம இருக்கக் கடவது:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா,துளசி.சரியாச் சொன்னீங்க.
நல்ல ஆசிர்வாதம்.உங்க அண்ணனும்
கோச்சிக்காம இருப்பார்.

oosi said...

தகவலுக்கு நன்றி லட்சுமி !!!