March 30, 2009

40 நாள் குழந்தைக்கு ஆப்பரேசன்

2005 பிப்ரவரி தில்லி.
குழந்தைங்க டயப்பர் மாத்தறப்ப காலை தூக்கி அப்படி இப்படி ன்னு அவங்களைப்படுத்தினால் கொஞ்சம் பிடிக்காம அழத்தான் செய்வாங்க.. என் மகனும் அப்படித்தான் துணி நாப்கினை மாத்தும் போது அழுவான். ஆனா தொடர்ந்து கொஞ்ச நாளா ( ரெண்டு நாள் அல்லது மூணு நாள்) கூடவே கொஞ்சம் அழறாப்பல இருந்தது.. ஆனா எந்த மாற்றமும் எங்களுக்கு தெரியல.

பின்னால் ஒரு நாள் விடாமல் அழறான் , பூச்சிக்கடிச்சிருக்குமோ , சூ போக முடியலையோ .. நல்லவேளை 38 நாள் ஆன பையன்னு என் அம்மாவும் அப்ப கூட இருக்காங்க.. நாங்க நினைச்ச எதுவுமில்ல.. அவன் அழறதை விடவும் இல்லை..இது வழக்கப்படி இல்லை என்று உணர்ந்து வீட்டில் அணிந்திருக்கும் உடையோடே குளிராடையை உடுத்திக்கொண்டு குழந்தை டாக்டரிடம் ஓடினோம்.

அங்கே கடைசி ஆளாக ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். தனியாள் . கம்பவுண்டரை கேட்டால் காத்திருக்க சொல்கிறார். குழந்தையோ அழுகிறான்.சண்டையிட்டு உள்ளே சென்றால் டாக்டர் பார்த்த அடுத்த விநாடி .. எமர்ஜென்ஸி ..ஆப்பரேசன் தேவை .. நான் எழுதித்தரும் டாக்டரிடம் காட்டுங்கள்.. இந்த மருத்துவமனைக்கு செல்லுங்கள்..

ஓட்டமாய் மருத்துவமனை அடைந்தால் .. எமர்ஜென்ஸி வார்டில் , என்ன ஏது அந்த பெட்ல போடுங்க.. நீங்க சொல்கிற டாக்டருக்கு போன் செய்துட்டோம் .. அவங்க காலையில் வருவாங்க.. ஐசியூவில் அட்மிட் செய்துடலாம்..அதுவரை தாய்ப்பால் குடுக்காதீங்க.. குழந்தை அழுவதற்கு தடை செய்ய ஒரு வழியும் செய்யாமல் அடுக்கிக்கொண்டே போகிறார்கள். அது அப்படித்தான் அழும்..ஒரு நம்பிக்கை வார்த்தையில்லை..சமாதானமில்லை. எத்தனை பாத்திருக்கோம் என்று நகரும் டாக்டர்கள் இளவயதுக்காரர்கள்..

ஆப்பரேசன் ஆகிய உடம்பு அழக்கூட எனக்கு தெம்பில்லை.. பிப்ரவரி மாதத்துக்கு குளிர் உடலை நடுக்கிறது. அம்மா என்னைவிட உடைந்து அழுகிறார்கள். கணவர் பல சமயம் உடல்நிலைக் கோளாறுகளைக் கண்டால் பதுங்குபவர்கள் அதிசயமாய் தைரியமாய் நடக்கிறார்கள். பணம் கட்டுக்கிறார்கள் .. ஓடுகிறார்கள் பேசுகிறார்கள்..

ஐசியூக்குள் ஒருவர் தான் இருக்கலாம். குழந்தைகளுக்கு என்று தனிப்பிரிவு.உள்ளே நுழைந்ததும் சினிமாவில் வருவது போல உடலெங்கும் ஒயர்களுடன் கருவிகளுடன் சின்னவயசுக்குழந்தைகள்.பதறியது மனம். குழந்தை அழுகிறான். பால் கொடுக்ககூடாது என்ன கொடுமை.நான் வெளியே நிற்கிறேன். கணவர் போன் பேசசென்றிருக்கிறார்கள்.. ஆறுவயது மகள் ஐசியூ இருக்கும் இடத்திற்கு வரக்கூடாது என்று கீழே செக்யூரிட்டிக்கு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறாள்.அம்மா குழந்தைக்கு அருகில்..அம்மாவும் நானும் மாற்றி மாற்றி குழந்தைக்கு அருகில் நின்று வருகிறோம்.

குழப்பம் குழப்பம்..இது என்ன நிலைமை.. நாம் நம்பி குழந்தையை ஓப்படைக்க ஒரு நல்ல வார்த்தை கேட்டோமில்லையே.. திரும்ப உள்ளே நான் நுழைந்த போது குழந்தை அழுகையை சற்றே நிறுத்தி விசும்புகிறான் .. தெம்பு இல்லை.. இனி அவனுக்கு குளுக்கோஸ் ஏறனும் . அம்மாவிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கி மீண்டும் டாக்டருக்கு போன் ..நீங்க சொன்ன டாக்டர் ஒரு நம்பிக்கையும் குடுக்கவில்லை பார்க்க வரவும் இல்லை. குழந்தையோ அழுகையை நிறுத்திவிட்டான் என்று சொல்லவும் சரி நீங்கள் அழைத்து வாருங்கள்.. நாளை விரும்பும் டாக்டரிடம் காட்டிக்கலாம் ..அழுகை நின்றுவிட்டால் ஆபத்து இல்லை என்கிறார்.

மேலே ஓடினால் ,நர்ஸ் "உங்கள் ரிஸ்கில் எடுத்து செல்வதாக கையெழுத்து இடுங்கள்" என்றாள். சரி உன்கையில் குழந்தையை குடுக்க நான் அதையே செய்வேன் என்று கையெழுத்திட்டேன். "கட்டிய காசு 20,000 பிறகு தான் கிடைக்கும்" என்றாள்.. "நன்றி" என்று ஓடியே வந்துவிட்டோம்.

மறுநாள் அவன் பிறந்த மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளுக்கு ஆப்பரேசன் செய்யும் டாக்டரிடம் பேசினோம். அவர் எங்களுக்கு சொன்ன அளவுக்கு இல்லையெனிலும் முதல்மருத்துவமனை டாக்டர் ஒரு வார்த்தையேனும் நான் இருக்கேன் என்று சொல்லி இருந்தாள் அன்றைக்கு அங்கே ஓடிவந்திருக்கமாட்டோம்..

இன்ன இன்ன காரணம்.
குழந்தைகளுக்கு வரும் இங்வைனல் ஹெர்னியா என்பது எந்த வயதிலும் வரக்கூடிய ஒரு உபாதை ஆனாலும், பெரும்பாலும் பிறந்த குழந்தையிலிருந்து, 1 வயது குழந்தை வரை வரலாம்
நல்ல ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளில், 3ல் இருந்து 5 சதவீத குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வரலாம்.குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில், 30% குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வரலாம்.

படங்கள் வரைந்து பாகம் குறித்து.. என்ன என்னவோ எனக்கு இப்ப முழுதாக அதெல்லாம் நினைவில் இல்லை. ..
நான் 14 வயதுக்குள்ளான குழந்தைகளைத்தான் பார்க்கிறேன். குழந்தைக்கு ஜெனரல் அனஸ்தீஸியா தந்து செய்வது என்பதால் யோசித்து சொல்லுங்கள்.. செய்துஆக வேண்டிய கட்டாயம் உண்டு என்றார். நாள் பார்த்து அதற்கு முந்தினநாள் இரவு 8 மணியிலிருந்தே பால்கொடுக்காமல் தூங்கவைத்து காலையில் 9 மணிக்கு வந்தால் ஆப்பரேசன் என்றார்.

இந்த ஹெர்னியாவும் 65 % குழந்தைக்கு வலதும் 25% வருமாம்.. 15 % குழந்தைக்குத்தான் இரண்டுபக்கமும் வருமாம்.. இவனுக்கு இரண்டு பக்கமும் வந்தது.
ஆப்பரேசன் முடிந்தது வெளியே வந்தான் ..மயக்கத்தில்.மயக்கம் தெளிந்தால் அழுவான்.. அவன் நல்லா அழனும்..கதறி அழனும் அப்பத்தான் அவன் முழுதாக மருந்திலிருந்து வெளியே வந்ததாக அர்த்தம்..ஒரு ஸ்பூனில் தண்ணி மட்டும் உதட்டுக்கு பக்கம் பிடிக்கனும்..தானாக அதை நாக்கால் ருசித்தால் தான் பின்னர் தாய்ப்பால் என்றார்.

ஊம் ஊம் என்று தலையாட்டினேன்..கை இத்துனூண்டு அதில் குளுக்கோஸ் ஏத்த இடம் ஏது?மணிக்கட்டில் ஒரு தெர்மக்கோல் அட்டை ஸ்கேல் அளவுக்கு முட்டுக்கொடுத்து இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிகிறான்.அழத்தெம்பில்லாதவனாக அழுகிறான். ஒவ்வொரு முனகிய மெல்லிய விசும்பலுக்கும் எனக்குள் ஓராயிரம் வலிகள் .. நான் அழுகிறேன் . அடக்கமுடியாமல். டாக்டர் உள்ளே நுழைந்தவர் என்னைப்பார்த்த கோபத்தில் கத்துகிறார். என்னப்பா உன் மனைவிக்கு என்ன பையித்தியமா?

அவன் எத்தனை அழறானோ அத்தனை அவளுக்குத்தானே நல்லது சொல்லு லக்ஷ்மியை அழாதேன்னு சொல்லு.. ன்னு கத்தறார்.
நான் வீட்டுக்குக்கூட போகாம காரில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துட்டு திரும்பவும் வந்து நிக்கிறேன் ..இவனுக்காகத்தானே .. அவன் அழட்டும் நல்லா என்கிறார். அழுதான் கதறி அழுதான் தானாக தண்ணீர் குடித்தான். பசித்து பால் குடித்தான். பிழைத்தான்.

அடுத்த திங்கள் வரை நோ குளியல்.. நீங்களாகவே வயிற்றின் இருபுறமும் இருக்கும் ( அருணாக்கொடிகட்டும் இடம்) பிளாஸ்திரியை எடுத்துவிடுங்கள்.. என்னிடம் ப்ரச்சனை இருந்தால் வரலாம். ஆனால் ஒன்றுமிருக்காது. எனக்கு விடைகொடுங்கள் என்றார்.

சாதரண விரலுக்குப்போடும் ப்ளாஸ்திரி தான். பிரித்தால் .. வலது இடது பக்கத்தில் ஒவ்வொன்றும் ஒரு இஞ்ச் இடைவெளி வெட்டுக்கள்..தையலே போட அவசியமில்லாத வயது. ஒருவாரத்தில் தானாக இணைந்து விட்டதாம்.
நினைத்துப்பார்த்தால் எத்தனை பெரிய புயல் அது.. போன பதிவில் அவன் ஒரு செல்லமாக வளர்ந்ததுக்கு இதுவும் காரணமாக இருக்குமோ என்று தோன்றியது பதிவிட்டேன்.. ஹ்ம்.

வானவில் இற்றைகள் (அப்டேட்ஸ்?)

முன்பு புதுமொழின்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.. இப்பவும் சில புதுமொழிகள் பேசுவார் எங்க பையன். தமிழும் ஹிந்தியும் கலப்பதும் அவருக்கு இன்னும் ப்ரச்சனையாகவே இருக்கிறது. இது இப்பத்தைய புதுமொழி.
வாக்கியத்தில் அமை:
மோசம் - வாசம்( மோந்து/முகர்ந்து பார்க்கும் வாசம்)
புஸ்ஸா= குஸ்ஸா( கோபம்)

1. மோசம் பாத்தேன் இது பூஸ்ட் ..அம்மா நான் டீ இல்லாட்டி காப்பி தான் கேட்டேன்.
2.அம்மா மிட்டாய் தரப்போறயா இல்லையா? எனக்கு புஸ்ஸா வரப்போது.
-------------------
மூணுசக்கர சைக்கிளில் ஒரு பந்தை பின்னால் கீழே அமிழ்த்தி வைத்துவிட்டு ...இது என்னடான்னா? ஸ்டெப்னி டயராம்..
----------------------------------

எதோ யோசனையில் ஆமாம்ன்னு சொல்ல நான் புரிச் புரிச் என்று சத்தம் மட்டும் செய்தேன்.. அம்மா என்ன சத்தம் அது?
எந்த சத்தம்?
புஸ் புஸ் ன்னுசத்தம் போட்டியே
ஆமாம்ன்னு சொன்னேன் அப்படி
ஓ புஸ் புஸ்.. :)
----------------------------
பெரியவனானதும் அதெல்லாம் பாத்துக்கலாம்டா
நான் தான் பெரிய்ய்ய்ய்ய்யவனாகிட்டேனே..
(குனிந்து காலிலிருந்து தலை வரை இரண்டு கையாலும் தடவியபடி )
--------------------------------------------------

கலரடிக்கிறேன்னு ஏண்டா எல்லத்தையும் வெளியே வரும்படி செய்யற ..மேடம் திட்டபோறாங்கன்னு சொன்னா..இதை நான் என்ன ஸ்கூலுக்கா கொண்டுபோகப்போறேன்..
வீட்டுல தான் சரியா வராது. அங்க எனக்கு நல்லா கலர் செய்யவரும்.
--------------------------------------
சபரி போதும்ப்பா விளையாடியது வந்து சாப்பிடு!!
குட் பாய் தானே!
ஆமா... ஆனா நீ விளையாட விடலை .. அதனால் பேட் கேர்ள்.
------------------------------
குளிக்கவான்னா ஓடுவார்.. தலையில் அழுக்கு இல்லை .. தலையில் ஊத்தாதே ப்ளீஸ் ப்ளீஸ் ... ஆயிரம் ப்ளீஸுக்கு அப்பறமும் தலையில் தண்ணிய என்னிக்காச்சும் ஊத்தும் ராட்சஸி நான்..
இரண்டு பொம்மைகளைக் குளிப்பாட்ட வா என்றதும் ஓடிப்போய் இரண்டு பொம்மையோட வருவான்.. அதற்கும் சோப்புப் போட்டு அழாமல் குளிச்சிட்டு வெளியே வந்து தானே உடைகளைப்போட்டுக்கொண்டு .. தயாராகிறார். ஒன்றாம் தேதியிலிருந்து பெரிய பள்ளிக்கு செல்ல இருக்கிறார்.
பஸ்ஸில் ஒழுங்காய் அமர்ந்து போவானா? மேமிடம் பணிவோடு இருப்பானா? கேள்விகள் கேள்விகள்....

March 26, 2009

சாரு ன்னா ச்சோர் (திருடன்)

நான் எப்பவும் கருமணியில் தான் தாலி போடறது. தில்லிக்கா போற? கல்யாணம் செய்துன்னு அப்பவே தில்லி என்பது கொள்ளைக்காரங்க நகரம்ன்னு எல்லாருக்கும் பதிஞ்சு போய் இருந்தது.
கருமணி செட்ல இருந்த லெக்ஷ்மி டாலரை கழட்டிட்டு தாலியை அதுல கோர்த்து போட்டுக்கிட்டேன். என் பொண்ணு எப்பவும் அதுல தான் விளையாடுவா.. அதனால் அது அடிக்கடி அந்து போகும்..தங்க வளையல் தங்க செயின்ல விளையாட விடறேயேன்னு திட்டுவாங்க தான் ...பெரியவங்க சொல்றதை நாம என்னைக்கு கேட்டிருக்கோம்.. என் பிள்ளைக்கு இல்லாததான்னு ஒரு எண்ணம்.

மாயவரம் போகும்போதேல்லாம் பத்தர் கிட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வச்சிக்கிட்டு அதை ஒட்டிக்கிவேன்.. பின்ன தில்லியிலும் ஒரு பத்தர் பாத்து வச்சிக்கிட்டேன் பத்து ரூபாய்க்கு ஒட்டித்தருவார்... இப்படித்தான் ஒருமுறை அது அறுந்து அறுந்து ஒட்டி ஒட்டி குட்டியாபோச்சுன்னு அம்மா ரிப்பேர் செய்துவைக்கிறேன்னு வாங்கிவச்சிட்டாங்க.. கணவருக்கு கல்யாணத்துக்குப் போட்ட மைனர் செயினை எடுத்து அதில தாலியக் கோத்து வச்சிருந்தேன். கணவர் ஒரு மைனரும் இல்லை நகையும் போடறதில்ல என்பதால் அது பளபளன்னு இருந்தது.

நான் ஆறேமுக்காலுக்கா பிக் ஷாப்பரை எடுத்துக்கிட்டு சந்தைக்கு கிளம்பினேன். என்னைத்தாண்டி ஒரு பையன் வேகமாப் போனான். நான் என் தோழி வீட்டுக்குப் போய் ஒரு விசயம் சொல்லிட்டு சந்தைக்கு போறதா திட்டம். தோழிவீட்டுத்தெருவில் நடமாட்டமே இல்லை. நான் அங்கே திரும்பும் முன்ன வேகவேகமாப்போன பையன் திரும்ப வந்தான். நானும் நம்மளைப்போல ஒரு ஆளு போல..எதை மறந்தானோ வீட்டுலன்னு நினைச்சிக்கிட்டேன். முதல் ப்ளோர்ல தோழிவீடு. ரெண்டாவது படியில் நான் நிக்கும் போது முதல் படியில் அந்த பையன் நிக்கிறான். அய்யோ ன்னு ஆகிடுச்சு. மேடம் உங்க பேரு என்னன்னு கேக்கறான்.

என்னடா இது தேர்வுக்குபோறாப்பல அவசரமாப்போனவன் திரும்ப வந்து என்கிட்ட பேரு கேக்கறானே சரி என்னமோ இருக்குன்னு யோசிக்கிறதுக்குள்ள அவன் என் கழுத்து செயினை பிடிச்சுக்கிட்டிருக்கான் . நான் இடதுபக்கம் புடிச்சு வச்சிருக்கேன். அவன் வலதுபக்கம் இழுக்கிறான். அந்த நேரம்ன்னு பாத்து ஆங்கிலத்தில் கத்தவா ஹிந்தில கத்தவான்னு யோசிக்கமுடியல.. தோழியோட பெண் பேரு சாரு .. சாரு சாரு யாராச்சும் வாங்கன்னு தமிழிலேயே கத்தினேன். அவங்கவீட்டுல கொஞ்சமா யாரோ கூப்பிட்டாபல கேட்டுச்சுன்னு அப்பரமா சொன்னாங்க.

சாரு ச்சோர்ன்னு கேட்டிருக்கும்போல எதிர்த்த பில்டிங்காரங்க லைட்டைப்போட்டு விட்டாங்க.. அவன் கத்துக்குட்டி திருடன் போல பயந்து ஓடிட்டான். கையைப்பார்த்தா செயின் கையில் இருக்கு ரெண்டு துண்டா.. மேலே ஏறி தோழிவீட்டுல தண்ணி குடிச்சு ஆசுவாசப்படுத்தும் போது தான் தெரிந்தது கழுத்தில் ரத்தம்.

பிறகு அடுத்தநாள் தெரியவந்தது என்னன்னா.. அவன் வேகமா நடக்கல ஓடி இருக்கான். வேற ஒருத்தங்ககிட்ட திருட முயன்று அவங்க ஆகிருதியா இருந்ததால அவனை தள்ளிவிட்டுட்டாங்களாம்.. அங்கருந்து ஓடியவன் தான் ...ஆகா மாட்டினாடான்னு என்கிட்ட வந்திருக்கான்.

இப்ப ஏன் இந்த கதையா?? செயின் திருடி போரடிச்சிடுச்சாம்... போன வாரம் துப்பாக்கி முனையில் வைரத்தோடு ஒன்றை கழட்டிக்குடுக்க சொல்லிவாங்கிட்டுப் போனானாம் திருடன். இந்த வாரசந்தையில் எல்லாபெண்களும் மங்களகரமான மஞ்சள் கயிற்றோடும். ஹிந்திக்காரர்கள் எல்லாம் வெற்றுக்கழுத்தோடும் வந்திருந்தார்கள்.

கொள்ளைக்கார நகரத்தில் கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே..

March 20, 2009

அல்மோரா -4 சூரியக்கோயில்

மதிய உணவுக்கு பின் கட்டார்மல் செல்ல அடிவாரத்தில் விட்டு விட்டு ... இந்த காட்டில் தனியாக அமர்ந்திருக்க கஷ்டம் . நீங்கள் இறங்கும் போது தொலைபேசுங்கள் என்று தன் நம்பரை எங்களுக்கு கொடுத்தார். என் மொபைலில் அதனை குறித்துக்கொண்டு ஏறத்தொடங்கினோம். அது கடல் மணலைப் போன்ற மணலும்.. சில பாறைகளுமான பாதை. மேலே செல்ல இருப்பது கோனார்க்கைப்போல சூரியனுக்கென்ற சிறப்புக்கோயில்.ஆங்காங்கே ஓய்வெடுத்தபடி நாங்கள் ஏறினோம் ஏறினோம் ஏறிக்கொண்டே இருந்தோம். சிலர் ஆடு மேய்த்துக்கொண்டும் சுள்ளி பொறுக்கியபடியும் ஏறிக்கொண்டிருந்தார்கள். சரியான பாதை தானா என்று கேட்டுக்கொண்டே ஏறினோம். அவர்களோ குறுக்கு வழிகளில் வேகமாக கண்மறைந்தார்கள்.

எங்கள் பொறுமையின் எல்லையை எட்டியபோது அங்கே ஒரு பள்ளியும் சில வீடுகளும் தென்பட்டன. வீட்டின் பால்கனியில் படுத்தபடி வெயில் காய்ந்துகொண்டிருந்த பெரியவர் அதோ தெரிகிறதே அது தான் கோயில் என்றதும் என் கண்களுக்கு .. குழப்பத்தில்.. உச்சியைக் காட்டுகிறாரோ என்று திகிலாகிவிட்டது. பெரியவரின் குடும்பத்தில் இருந்த ஒரு பெண்மணி .. அங்கே போய் என்ன இருக்கு பார்க்க ...பரவாயில்ல முடியலன்னா இறங்குங்களேன் என்று சொல்ல .. சரி குழந்தைகளுக்கும் போகலாம் என்றே தோன்றிவிட்டது.

அப்போது பள்ளிவிடவும் குழந்தைகள் கேமிராவுக்கு தாங்களாகவே போஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் டீச்சர் வெளியே வந்து .. "என்ன கேமிரா? கம்ப்யூட்டரில் போடற கேமிராவா?.. ஏன் திரும்ப போகிறீர்கள்?.. இத்தனை தூரம் வந்துட்டீங்க இன்னும் 20 நிமிசம் தான் ...போகஸ் செய்து பாருங்கள் .. தூரமில்லை. பின்னால் நினைத்துப்பார்த்து மகிழத்தான் செய்வீர்கள். நான் கூட ஒரு முறை புகைப்படமெடுத்து மற்றவர்களுக்கு காட்டினேன். இத்தனை தூரம் வந்த பாதையைக் காட்டிலும் இந்த சிமெண்ட் பாதை ஒன்றும் பெரியதில்லை" என்று ஊக்கமளித்தார்.
ஞாபகத்துக்கு அவருடன் நான் புகைப்படமெடுத்துக்கொண்டேன்.

பள்ளிக்குழந்தைகள் வழிகாட்ட மேலேறினோம். சின்னக்குழந்தைகள்.. இரண்டாவதும் மூன்றாவதும் படிப்பவர்கள் கால்களில் செருப்புமில்லாமல் சர சரவென்று ஏறினார்கள்.. மூக்கு ஒழிகிக்கொண்டு... பேரைக்கேட்டால் வெட்கப்பட்டுக்கொண்டு.. அந்த ஊர்க்காரர்களுக்கு அது ஒரு கோயிலாகப்படுவதே இல்லை போல. பூட்டியகதவுகளுக்கு வெளியே தொல்பொருள் ஆராய்ச்சிக்காரர்களின் ஆள் காவலிருக்கிறார். 45 சிறு கோயில்களுடன் நடுவில் உடைந்த கோபுரத்துடன் சூரியன் கோயில். டோராவின் பாடலான .. வீ டிட் இட் வீ டிட் இட்.. பாடலைப்பாடி ஆடிக்கொண்டோம்.

பாதுகாவலர் அழைத்ததின் பேரில் சாவியுடன் வந்த இன்னொருவர் திறந்து காட்டினார். உள்ளே அழகான சூரிய தேவன் ஏழுகுதிரைகளுடன்.. மற்ற சுற்று வெளி கோயில்களின் தெய்வங்கள் கால் உடைந்து கை உடைந்த நிலையில் அங்கே பாதுகாக்கப்பட்டிருந்தனர்.
அதை முற்றுப்பெறாத கோயில் என்றும் இரவில் கட்டப்பட்ட கோயில் என்று நம்பிக்கை நிலவுகிறது.

இறங்குகையில் வேகம் தான். அறைக்கு திரும்பினோம். வண்டிக்கு பணம் கொடுக்க சென்ற கணவர் அடுத்த நாள் செல்ல இருந்த நந்தா தேவி கோயிலைப் பார்த்து வைத்துக்கொண்டு வந்தார்கள். அது ஊருக்குள் கடைத்தெருவுக்குள் இருக்கிறது.காலையில் முதலில் மாலைப்பேருந்துக்கு டிக்கெட் புக் செய்து விட்டு கடைத்தெரு சென்று நந்தா தேவியை வணங்கிவிட்டு .. நான்கு மணி பேருந்தில் கீழே இறங்கினோம். வரும் வழியெல்லாம் அழகுக் காட்சிகள். நடுவில் நின்ற ஒரு ஊரின் பெயர் ... சுடுதண்ணி..(கரம்பானி) மலை ஏறும் போது முழு நிலா வெளிச்சத்தில் இரவுக்காட்சி , இறங்குகையில் இளவெயில் மாலைக்காட்சி..

இன்னும் அந்த ஊரிலிருந்தபடி பார்க்க பல இடங்கள் இருந்தாலும் எங்கள் திட்டம் மூன்று நாள் என்பதால் அவற்றை பார்க்க இயலவில்லை. பாதாள் புவனேஷ்வர் என்கிற இடம் நல்லதொரு குகைக்கோயிலாம்.. அதனைப்பற்றி கைலாஷி அவர்கள் எழுதிய பதிவைப்படித்துப்பாருங்கள்..


http://www.kmvn.org/ இந்த தளத்தில் நீங்கள் மேல் விவரங்கள் பெறலாம்.

March 19, 2009

அல்மோரா -3 கசார் தேவி

போன பதிவில் தவறுதலாக சூரியக்கோயில் தான் அடுத்த திட்டமென்று எழுதிவிட்டேன். கொஞ்சம் மறதி அதிகம். கோலு தேவியை அடுத்து நாங்கள் காளிமத் என்கிற இடம் சென்றோம். அங்கே கசார் குன்றின் மேல் தேவியின் கோயில் இருக்கிறது.
நுழைவு வாயிலின் அருகில் இருந்த பெரிய பாறையில் ஒரு நாக வடிவம் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. அந்த உருவம் சற்றே பாறையிலிருந்து செதுக்கப்பட்ட வடிவம் போல எம்போஸ் ஆகி இருந்தது. ஆனால் தானாக உருவானதாம். இது போன்றே வேறொரு சாலைப்பணியின் போது ஒரு இடத்தில் அனுமனின் கதை கிடைத்ததாம். அதனை முதலில் கவனிக்கவில்லையாம் . ஒருவருக்கு காயமேற்பட்டு பாதியில் வேலை நின்றபோது தான் அதனை கவனித்தார்களாம். காரோட்டி தெரிவித்த விசயம் இது.

ஏற்றமான பாதையில் சென்று கசார் குன்றின் மேல் அடைந்த போது அங்கே எங்களைத்தவிர யாருமில்லை. அமைதியான அந்த இடமும் பள்ளத்தாக்கின் விரிந்த காட்சியும்... ( வேறு பருவநிலையில் என்றால் தூரத்தில் பனிமலைகளும் தெரியும்) 1750 அடி கடல்மட்டத்திலிருந்து உயர்ந்த அந்த கோயில் 2 வது நூற்றாண்டின் கோயிலாம். விவேகானந்தர் மற்றும் பல ஆன்மீகப் பெரும்புள்ளிகள் அங்கே அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள். குகை போன்ற இடத்தில் தேவி . சுற்றிலும் சிறு அறையாக சன்னிதி.
அந்த இடத்தில் வைத்து மகளிடம் சொன்னது...
" இது போன்ற அமைதியான இடத்தில் தியானம் செய்து கடவுள் தன்மைய உணர்ந்த பெரியவங்க அதை கோயிலாக்கி மத்தவங்களும் உணர செய்திருக்காங்கன்னு '" ( இது தெகாவின் பின்னூட்டத்துக்கு பிறகு நினைவுக்கு வந்தது)

அங்கிருந்து சற்றே மேடான ஓரிடத்தில் சிவன் கோயில். அங்கிருந்து பனிமலைகளை காண அமர்விடமும் உண்டு.

திரும்பி வருகையில் ஒரு குடும்பம் ஏறிக்கொண்டிருந்தார்கள்.. உஃப் அம்மா அப்பா.. ஒரு கார் வரும்படி செய்திருக்கமாட்டார்களா என்றபடி.. குரங்குகள் சிலவும் அங்கே இங்கே அலைந்த படி இருந்தன.. ஆனால் எங்களை தொந்திரவு செய்யவில்லை. நாங்களும் அவர்களை தொந்திரவு செய்யவில்லை.

போன பதிவில் அந்த பைரவரை போட்டோ எடுக்கலை என்று சொன்னதும் ஆயில் ஆதவன் இருவரும் கேட்டதுக்கப்பறம் மீள்பார்வை பார்த்ததில் அந்த ரிஸ்க் எடுத்திருக்கேன் என்றே தெரிகிறது படம் தான் சரியாக வரவில்லை.. இதோ அவர்...

March 18, 2009

அல்மோரா- 2 கோலு தேவி

மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்த இரண்டாவது நிமிடம் அந்த நாய் எங்கள் பின்னாடி வந்தது.. எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நாய்கள் என்றாலே சிம்ம சொப்பனம். அங்கே இருந்தவர்கள் வழக்கம்போல இது ஒன்றும் செய்யாது என்று சொன்னாலும் அது எங்கள் பின்னால் மிக நெருக்கமாக வருவது எங்களுக்கு திகிலாக இருந்தது. முதலில் நான் ஆரம்பித்து வைக்க மகள் தொடர அது கடைசியில் மகன் திரும்பி திரும்பி பார்த்து பயப்பட என்று தொடர்ந்தது.

கணவர் நீங்க திரும்பி பார்க்காமல் வந்தாலே அது ஒன்றும் செய்யாது என்று சொல்ல.. பிறகு கொஞ்ச நேரத்தில் அது சாலை அந்த புறமாக எங்களை தொடர்ந்து வந்தது. எங்கெல்லாம் நாங்கள் சற்றே ஓய்வெடுக்கிறோமோ அங்கெல்லாம் அதுவும் மலை மேலே ஏறியோ அல்லது ஓய்வெடுத்தோ விடாமல் தொடர்ந்தது. பார்த்த போது என்னவோ எங்கள் பாதுகாவலுக்கு வந்தது போலவே இருந்தது. ஜாகேஸ்வரர் கோயிலில் கணவரிட ம் இன்னும் கொஞ்சம் மேலேறினால் குபேரர் கோயில் இருப்பதாக சொன்னார்களாம். சரியாகக் கேட்டீர்களா பசியினால் நாம் மதிய உணவுக்கு திரும்பிவிட்டோமே.. அது பைரவர் கோயிலாய் இருக்குமோ என்று யோசித்தேன்.. பைரவர் தான் இந்த நாயை அனுப்பிவிட்டாரோ என்று :)

உயர உயரமான மரங்களை வேடிக்கைப்பார்த்த போது ஒரு கருமை நிறப்பறவை வித்தியாசமாக இருந்தது. காகத்தைப் போன்ற தோற்றம் ஆனால் நல்ல மஞ்சள் நிற
மூக்கு . படமெடுக்க இயலாதபடி அது தவ்வி தவ்வி கிளைமாறிக்கொண்டிருந்தது. அது மெக்பையோ , ஜங்கிள் குக்கூவோ, எதுவோ தெரியவில்லை. நேற்று ஒரு ஆராய்ச்சி செய்து பார்த்துவிட்டேன். பின்சர் என்கிற பறவைகள் சரணாலயம் ஒன்று இருக்கின்றதாம் அதில் 180 வகையான பறவைகள் உண்டாம். எங்கள் மூன்று நாள் திட்டத்தில் அது இல்லை.

வெளிநாட்டவர் ஒருவர் எதிரில் வந்து கொண்டிருந்தார் எங்களைப் பார்த்து புன்னகையோடு ஹலோ சொன்னார். நான் வீடியோ எடுத்தபடியே நடந்து கொண்டிருந்தேன.மலையை சேர்ந்த ஒரு பையன் எங்களை வேகமாக கடந்து சென்றான். மற்றபடி சாலை அமைதியான ஆற்றின் சலசலப்பு மட்டுமாக இருந்தது. கருப்பு நாய் தொடர்ந்து கொண்டோ முன்னே வழிநடத்திக்கொண்டோ சென்று கொண்டிருந்தது. அதனை நின்று போட்டோ எடுக்க மட்டும் தைரியம் வரவில்ல. வீடியோ மட்டுமே எடுத்தேன்.
வழிகளில் கூட அந்தகோயில்களின் சாயலை ஒத்த சில அமைப்புக்களைக் கண்டோம்.

ஒரு ஜீப் வரும் சத்தம் கேட்டது நின்று கை காட்டியதும் எங்களை கூட்டு ரோட்டில் இறக்கிவிட சம்மதிக்க நாங்கள் அதில் தொற்றிக்கொண்டோம். நாய் சோகமாக திரும்பிக்கொண்டது. கூட்டு ரோட்டில் சற்றே காத்திருக்க நேர்ந்தது. மற்றொரு ஜீப் வந்ததும் அதில் ஏறிக்கொண்டோம். ஜீப் காரர்கள் வேக ரேஸ்கார்களை ஒத்திருக்கிறது. வளைவுகளில் கூட சர்ரென்று எடுக்கும் போது ரோலர்கோஸ்டர்களைப் போல உணர்ந்தோம்.

வழியில் தான் கோலு தேவி கோயில் உள்ளது ஆனால் அது அடுத்த நாளைக்கான திட்டத்தில் இருந்ததால் நாங்கள் நேராக அல்மோராவுக்கே திரும்பினோம். கோலு தேவி கோயில் வரும்போது ஜீப் ஓட்டுபவர் வண்டியில் கட்டி இருந்த மணியை ஒரு அடி அடித்து விட்டு கும்பிட்டு க் கொண்டார்.
அல்மோராவில் மார்க்கெட் பகுதியின் கீழ் சாலையில் இறக்கிவிட்டுவிட்டார் அந்த ஜீப்வாலா. மேல் சாலைக்கு செல்ல எக்கச்சக்கமா படிகள் . ஆனால் அவர்களின் சந்தைகள் , கடைகளைப் பார்க்க நல்ல வாய்ப்பு.

அறைக்கு திரும்பும் வழியில் அடுத்தநாளுக்காக ஒரு வாடகை வண்டியை ஏற்பாடு செய்துகொண்டோம். முழுநாளுக்கான வாடகைக்குத்தான் வண்டி கிடைக்கும் என்பதால் தான் ஜாகேஸ்வர் மட்டுமான தினத்துக்கு நாங்கள் வண்டி எடுத்துக்கொள்ளவில்லை.
அறைக்குச் சென்று நல்ல வெந்நீரை பாதங்களுக்கு கொடுத்து இதமாக்கிக் கொண்டோம். இரவு சாப்பாடு முடித்து களைப்பால் நல்ல உறக்கம்.


மறுநாள் காலையில் வாடகை வண்டி வந்து காத்திருந்தது. முதல் இடமாக ப்ரைட்ஸ் அண்ட் கார்னர் சென்றோம். அங்கே பள்ளத்தாக்கின் அருமையான காட்சி விரிந்து கிடக்கிறது. ராமகிருஷ்ணா குடில் என்று ஒரு புத்தக நிலையம் இருக்கின்றது. நாங்கள் அதற்குள் செல்லவில்லை. மேலிருந்து அந்த காட்சியை மட்டும் கண்டு ரசித்தோம். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் பார்க்க அங்கே கூட்டம் வருமென்று சொன்னார்கள்.

விவேகானந்தர் குறுக்கு சந்து துபாய் மாதிரி இல்லாம நிஜம்மாவே இங்க விவேகானந்தர் வந்திருந்து அமைதியாக தியானம் செய்திருக்கிறார்.

பள்ளத்தாக்கின் நடுவில் ஆறு வற்றிக்கிடந்ததை சுட்டிக்காட்டிய காரோட்டி . மர பயன்பாட்டிற்காக வைக்கப்பட்ட ஷீக் மரங்களால் தண்ணீர் தட்டுபாடும் மழையின்மை, வயல் வேலைகளில் தடங்கல்களும் ஏற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டார்.

காத்கோடகாமைச் சேர்ந்த காரோட்டி பல வருடங்கள் தில்லியில் இருந்துவிட்டு பிறந்த ஊரைப்பிரிந்திருக்க முடியாமல் திரும்பிவிட்டதாகக் கூறினார். முதல் நாளில் ம்யூசியக் காப்பாளரும் இதே போல பனிப்பொழிவே இந்த வருடம் இல்லை. காலநிலை மாற்றம் ரொம்பவும் மோசமாக நிகழ்கிறது என்று வருத்தப்பட்டார்.

ப்ரைட்ஸ் அண்ட் கார்னரிலிருந்து நாங்கள் கோலு தேவி கோயிலுக்கு சென்றோம். அங்கே பித்தளை மணிகளை வேண்டுதல் நிறைவேறியதென்று நன்றியாக சமர்ப்பிப்பது ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த பக்கத்து மக்களுக்கு மிகப் பெரிய தெய்வமாக இருக்கிறாள் கோலு தேவி. செதுக்கபட்ட ஒரு சின்ன சுவற்றோடான மார்பிள் தேவிதான்.

எங்கே பார்த்தாலும் மணிகள் குழந்தைகளுக்கோ மகிழ்ச்சி கொண்டாட்டம். சின்னதும் பெரியதுமான மணிகளை அடித்துக்கொண்டே இருந்தார்கள். கோயிலின் பாதையிலும் கோயிலைச் சுற்றியும் பெரிய பெரிய முறுக்கு கம்பிகளை பொறுத்தி இருக்கிறார்கள் அதில் மணிகளை விருப்பமான இடத்தில் கோர்த்துக்கொண்டே போகலாம்.சமயபுரமாரியம்மன் கோயில் போல கடிதங்களூம் சேர்ந்து கட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள். அதுவும் திறந்த கடிதமாக தாள்கள், கோர்ட் கேஸ் பேப்பர்களின் காப்பிகள் . நானும் ஒரு சிறு மணியை வாங்கி இதுவரை செய்த எல்லா நன்மைக்கும் நன்றி தெரிவித்து இனியும் தேவைப்படுபவைகளை மனதிலேயே ஒரு லிஸ்ட் போட்டு கட்டி விட்டேன். சிவப்பு துணி ஒன்றை தேவியின் பாதத்திலிருந்து மணியில் சுற்றித்தந்தார் பூஜை செய்பவர்.

நம் ஊரில் ப்ரசாத தட்டு போல இங்கே ஒரு சாப்பாட்டு தட்டு குழித்தட்டு போல ஒன்றில் குங்குமம் மஞ்சள் அரிசி போட்டு தருகிறார்கள். தேங்கா சீனி மிட்டாய்கள் நம் விருப்பம். பூஜை செய்பவர் மந்திரங்கள் சொல்லியபடி மஞ்சளைகுழைத்து நெற்றியில் வைத்து பின்னே குங்குமம் குழைத்து அதையும் அது மேலேயே வைத்து இரண்டு அரிசியை ஒட்டவைக்கிறார். மக்கள் அந்த அரிசிபொட்டோடே ஊருக்குள் வலம்வருகிறார்கள்.

பெண்கள் குங்குமத்தை குழைத்து வகிட்டில் பூசுவதுமல்லாமல் மூக்கின் பாதியிலிருர்ந்து தொடங்கி வகிட்டு பாதி வரை பூசி இருக்கிறார்கள். அங்கிருந்து கட்டார்மல் என்கிற மலை கிராமத்திற்கு செல்ல வேண்டும். அங்கே நடக்க வேண்டிய தூரம் அதிகமென்பதால் வழியில் முதலில் மதிய உணவை முடித்துக்கொண்டோம். கட்டார்மல்லில் சூரியதேவ் மந்திர். அடுத்த பகுதியில்.

March 17, 2009

அல்மோரா சுற்றுலா -1

எவரெஸ்டில் கால் பதித்த டென்சிங்கின் வரலாறு , புது இடங்களை தேடி அலைந்து சுற்றுபவர்களைப்பற்றிய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என்று படித்து பார்த்து ஆச்சரியமாய் இவங்களை எது இழுத்திருக்கும் .. என்ன உணர்ந்திருப்பார்கள் .. என்று நினைத்துக்கொள்வேன்.ஆனால் உண்மையில் ரசனையான விசயம் தான்.

தோழி கேட்டாங்க .. என்னங்க விடுமுறைக்கு அல்மோரா போனீங்களாமே.. அது ஒரு கிராமமாமில்ல..
ஆமாங்க மலையில் அது நகரம் தான்..ஆனா நமக்கு கிராமம் .
அங்க போய் என்ன பாத்தீங்க?
2வது நூற்றாண்டுல கட்டின கோயில்கள். மலைஏற்றம். யாருமற்ற பாதைகளில் நடைபயணம்.

அய்யோ அது ரிஸ்க் இல்லையா?

ஹ்ம் இருக்கலாம் ரிஸ்க் இல்லாத எது இருக்கு ? வாழ்க்கையில்..

யாருகூட போனீங்க வேறெ நண்பர்கள் யாரும் வந்தாங்களா?
இல்லை நாங்க நால்வரும் தான்.
என்னப்பா போரடிக்காதா?
இல்லை அங்க தான் நாங்க நால்வரும் ஜாலியா அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் மாதிரி ஜாலியா குடும்பமா இருப்போம்..

சரி பஸ்ஸா ட்ரையினா ... எப்ப புக் செய்தீங்க சொல்லவே இல்லையே?

புக் எல்லாம் செய்யலைங்க... பேருந்து நிலையம் போனோம் பஸ் பிடிச்சு போயிட்டோம்.

அல்மோரா போகனும்ன்னு எப்படி தேர்ந்தெடுத்தீங்க? நெட்லயா பிடிச்சீங்க..
ஹ்ம் முன்னாடி நானித்தால் போனோமில்ல அப்ப அங்கருந்து ராணிகேத் அல்மோரா போகலாம்ன்னு சொல்வாங்க.. தொடர்ச்சியா போக அப்ப விடுமுறை இருக்காததால் இப்ப அல்மோரா இன்னொரு முறை ராணிகேத் போவோம்.
-----------------------
அல்மோரா போவதற்கு டில்லி ஆனந்த்விகார் இண்டர்ஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து இரவில் 8 மணிக்கு ஒன்றும் 9 மணிக்கு ஒன்றும் பேருந்துகிளம்புகிறது. நாங்கள் எட்டு மணிபேருந்திற்கு சென்றோம். வெகுசீக்கிரமே கிளம்பிவிட்டோம் என்றாலும் எக்கச்சக்க ட்ராபிக் ஜாம். மூன்று பேர் சீட்களை எல்லாம் ஒத்தையாட்கள் ஜன்னலைப்பிடித்து உட்கார்ந்து கொண்டார்கள்.எதுக்கா? ராத்திரி நீட்டிப்படுக்கத்தான்.

இரவு 2 மணிக்கு மேல் தான் மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. ஐந்து மணிக்கெல்லாம் அல்மோரா வந்து சேர்ந்துவிட்டோம். தில்லியில் வெயில் அடித்துக் கொளுத்தியது. மலை நெருங்க நெருங்க குளிராடைகள் ஒன்று ஒன்றாய் அணிந்தோம். தொப்பி , மப்ளர் , க்ளவுஸ்.
நடுக்கும் குளிர் இல்லைதான். அல்மோராவில் பேருந்து நிலையம் என்பது ஒரு பேருந்து நிறுத்தம் தான். அங்கிருந்து அந்த காலை நேரத்தில் குமாவுன் ஹாலிடே ஹோமுக்கு நடந்தோம.

முன்பே பேசி வைத்திருந்தபடி அறைஎடுத்தோம்.ஹாலிடே ஹோமிலேயே சமையற்காரர் செய்து தந்த ஆலுபராத்தா சாப்பிட்டுவிட்டு மீண்டும் நடை.மால் ரோட்டில் ( கடைத்தெருங்க)பேருந்து நிலைய எதிரில் இருக்கும் கோவிந்த் வல்லப் பந்த் ம்யூசியம் சென்றோம். அங்கே அல்மோராவின் மிகப்பழமையான கோயில்களின் புகைப்படங்களும் செய்திகளும் சிற்பங்களும், ஓவியங்களும் என இரண்டு சிறிய அறைகளும் .. ஒரு சிறிய அறையில் கோவிந்த் வல்லப் பந்த் ன் வரலாறும் இருந்தன.

அல்மோரா பேருந்து நிலையத்திலிருந்து மினி பஸ் ஒன்றில் ஜாகேஸ்வர் கோயிலிற்கு செல்வதற்காக ஏறிக்கொண்டோம். இந்த மலைக்காரர்களுக்கு இசைமேல் எக்கச்சக்க பிரியம் .அவர்கள் மொழியாகட்டும் ஹிந்தியாகட்டும் பாட்டு கேட்காமல் இருக்கவே மாட்டார்கள்.குமாவுன் மொழிப்பாடல்களோட இசை ரொம்ப நல்லா இருக்கும். ஆனால் அன்றைக்கு போட்ட எல்லா ஹிந்திப் பாட்டும் செம டப்பா பாடல்கள். நீ என் முதல் மழை.. நீ என் முதல் வாய்ப்புன்னோ இல்லாட்டி நீ யாருன்னா என் இதயம் யாருக்காக இறக்கின்றதோ அவள் /அவன் . என்று போய்க்கொண்டிருந்தது.


ஜாகேஸ்வர் கோயிலை ஜோதிர்லிங்கக்கோயில் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அங்கே சிறுதும் பெரிதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. முக்கியமான சன்னிதியில் ம்ருத்யுஞ்சர் , கேதாரேஸ்வர் ,ஜாகேஸ்வர் என்று லிங்கங்கள் உள்ளன.
வழக்கம்போல காசைக்குடுத்தால் நீயே அபிஷேகம் பூஜை செய்யலாம் , அணையா விளக்குக்கு நெய் கொடு என்று பலதும் சொன்னார்கள்.. எங்களுக்கு முன்பு ஒரு குடும்பம் அவர்களே ஆரத்தி காட்டிக்கொண்டிருந்தார்கள்.
மதிய உணவாக ரொட்டி சாப்பிட்டுவிட்டு அல்மோரா செல்ல என்ன வழி என்று விசாரித்த போது .. தற்போது வண்டி எதுவும் கிடைக்காது வேண்டுமென்றால் 3 மைல் நடந்தால் கூட்டு ரோட்டில் ஜீப் கிடைக்கும் என்றார்கள்..

அழகான மலைப்பாதையில் , சரிவில் ஓடிய ஆற்றின் சலசலப்பின் ஓசையை ரசித்தபடி நடையைப் போட்டோம்.

March 12, 2009

நானே செய்த வெடிகுண்டு !!

நானே செய்த வெடிகுண்டு இது .. எப்படி வெடிக்குது பாருங்க.. எவ்வளவு புகை..



ரொம்ப நாள் முன்னாள் செய்த அனிமேசனை பதிவாகப் போட்ட போது குசும்பன் வந்து வெடிகுண்டு செய்யுங்கன்னு சொல்லிட்டு போனப்ப ஆரம்பிச்சது.. பின்ன மறந்தே போனேன்.. அப்பறம் அனிமேசன் எப்படி செய்தேன்னே மறந்துடுச்ச. போன முறை குச்சிக்கால் மனுசனை எல்லாரும் கிண்டல் செய்ததால் ஸ்கெட்சப் ல ஒரு வெடிகுண்டு 3D யில் செய்து விட்டு அதை வைத்து மீண்டும் முதலிலிருந்து அனிமேசனை ஆரம்பித்தேன். ஆனால் ஒரு முறை வெடித்துவிட்டு அது மீண்டும் வெடித்துக்காமிக்கவே இல்லை..

நேற்று தான் லூப் என்ற ஒரு பகுதியை கிளிக்க விட்டுவிட்டீர்கள் என்று நான் ஆதவன் சொன்னபிறகு மீண்டும் செய்திருக்கிறேன்.. இதுவும் ஆரம்பக்கட்ட முயற்சி தான் பெர்ஃபெக்ஷன் எதிர்பார்க்காதீர்கள் ...

ஸ்கெட்ச் அப் ல் வெடிகுண்டு செய்ய முதல் முறையாக ஃபாலோமீ டூல் ஐ கத்துக்கிட்டு செய்தது இது.. ஃபாலோமீ டூல் பற்றி எனக்கு ஒரு பேராசை இருந்தது.. நான் முன்பு மல்டி மீடியா கோர்ஸ் படித்திருந்தேன்.. பரிட்சை வைக்காம ( சொல்லியே ஒழுங்கா குடுக்கல பரிட்சை வச்சிருந்தா) சர்டிபிகேட்டும் குடுக்காம எஸ்கேப் ஆகிட்டாங்க அந்த ஆளுங்க..
ஆனா புத்தகமெல்லாம் மட்டும் குடுத்திருந்தாங்க.. அப்பப்ப அதை மட்டும் ஆசையா பாத்துப்பேன்.. அதுல 3டி ஸ்டுடியோன்னு ஒரு புக்ல விதவிதமா ன படங்கள் செய்து காமிச்சிருப்பாங்க.. இப்பத்தான் முதல் முதலா அதை செய்துபார்க்க ஸ்கெட்ச் அப் கிடைச்சிருக்கு..




vedigundu

March 4, 2009

சிண்ட்ரெல்லா கனவுகள்


சாம்பல் வண்ண கவுனும்
அழுக்கடைந்த வெள்ளை ஏப்ரானும் -
இல்லை
கை நிறைய வீட்டு வேலைகள் -இல்லை
குட்டி திட்டி வேலை வாங்கவும்
யாருமில்லை
மிரட்டி உருட்டி ஒளித்து வைக்கவும்
யாருமில்லை,
வீட்டிலோ எலிகளும் இல்லை
வீட்டுத்தோட்டத்தில் பூசனிக்காயுமில்லை
கனவில் மட்டும் கண்ணாடிக் காலணிகள்
தோன்றித் தோன்றி மறைகின்றன.
இரண்டுமே இருந்தென்ன பயன்?
எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?