August 12, 2010

இயக்குனர் ஜனநாதன் அவர்களுடன் ஒரு பேட்டி

முதல் படமான இயற்கையிலேயே தன்னால் வித்தியாசமான படங்களை அளிக்கமுடியுமென மக்களை திரும்பிப் பார்க்கவைத்த , ஈ, பேராண்மை என்று தொடர்ந்து நல்ல படங்களை தந்துவரும் இயக்குனர் ஜனநாதன் அவர்களுடன் ஈழநேசன் வாசகர்களுக்காக கண்ட பேட்டி.

கேள்வி: இயற்கை படம் காதலைப் பேசினாலும் வித்தியாசமாக இருந்தது. அதே போல ஈ மற்றும் பேராண்மை அதனதன் கருத்தில் தங்களை ஒத்த மத்த படங்களிலிருந்து தனித்தே தெரிந்தது. பார்த்து முடிக்கும்போது இது, அது மாதிரி இல்லாத புது மாதிரி .. என்று சாதாரண சினிமா ரசிகர்களுக்கும் தோன்றும்படி இருக்கிறது. அப்படியாக வித்தியாசத்தை எவ்வாறு கொண்டுவருகிறீர்கள்?

பதில்: அப்படி வித்தியாசமா எடுக்கனும்ன்னு முயற்சி எதுவும் எடுக்கறதில்லை.. தனியா அதற்காகன்னு யோசிக்கவும் இல்லை.ஆனா ஒவ்வொரு படத்துக்கும் முன்னால் எனக்கு நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டி இருக்கிறது. இயற்கை படத்தை எடுத்துக்கிட்டா, உலகத்திலேயே மிகப்பெரிய வியாபாரம் ஷிப்பிங்க் தானாம். அதப்பத்தி எடுக்க நிறைய விவரங்கள் தேவைப்பட்டது. கடல்பத்திய படத்துல பொதுவா கடற்கரை மக்கள் மீனவர்கள் இப்படி கடற்கரையோடையே கேமிரா நின்றுவிடுகிறது. கடலைதாண்டிப் போனவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக்கிட்டதாலேயே அந்த படம் வித்தியாசப்பட்டது. முதல்ல எனக்கு கிடைச்ச தேசிய விருதே யுனிக்கா இருந்ததுன்ற காரணத்துக்காகத்தான் கிடைச்சது.கேள்வி: அந்த விருதை நீங்க எதிர்பார்த்தீங்களா?


பதில்: இல்லை. எதிர்ப்பார்க்கவே இல்லை.. ஆர்ட்டைரக்‌ஷன் மற்றும் போட்டோகிராபிக்காக கிடைக்கும் என்று தான் நினைத்தேன்.. போட்டோக்ராபி கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு. தண்ணீர்க்குள்ளே லைட் ஹவுஸ் செட் செய்திருந்தோம். சண்டை மாஸ்டர் வந்து இறங்கியதும் அதை நிஜம் என்றே நினைத்துவிட்டார். விருது கிடைக்காததற்கு ஒருவேளை அது செட்டுன்னே தெரியாம இருந்திருக்கலாம்..கேள்வி: இயக்குனர் தன்னுடைய கருத்துக்களை எப்படியாவது படத்தில் புகுத்தி எதாவது மெஸேஜ் கொடுக்கனும் என நினைக்கிறீங்களா?

பதில்: ஆமா, என் வேலையாகவே அதை நினைக்கிறேன்.. எவ்வளவு அதிகமா விசயத்தை சொல்லமுடியும்ன்னு பார்ப்பேன். அதேபோல பெயர்கள். மருதுக்கு மருது என்கிற சிங்காரவேலன்னு வச்சிருப்பேன். அவர் தான் முதல்ல மே தினம் கொண்டாடியவர் .. அவர் ஒரு மீனவர். க்ளாரா பல்கலைக்கழகம் (க்ளார பெண்கள் தினம் முதலில் கொண்டாடியவர் ), ரோஸா (பெண்ணியவாதி) கல்லூரி போன்று பெயர்களை அமைத்திருப்பேன். பேர் வைக்கிறதுலயும் கூட முடிந்தவரை எதையாவது நினைவுபடுத்தறமாதிரி வைக்க நினைப்பது வழக்கம்..கேள்வி: ஈ படம் போலவே இன்றும் மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து ஊழல்கள் வெளிவருகிற்தே?


பதில்: ஆமாம். உண்மையில் வெளீநாட்டுல தடை செய்யப்பட்ட பல மருந்துகள் நம்ம ஊருகளில் கடையில் விக்கப்படுகிறது. டாக்டர்களும் எழுதித்தராங்க. இதெல்லாமே ஒரு பெரிய ப்ரச்சனை தான் மக்கள் மேல் நடத்தப்படற பரிசோதனை தான். நான் எடுக்கும் போது எதோ அதிகமாத் தெரிந்தது. ஆனா ஆந்திரால குழந்தைங்க இறப்பு, இங்க மருந்து ஊழல்கள் , நாள் முடிந்து போன மருந்துகள், மருந்துக்கு பதிலா சுண்ணாம்பு பௌடர் என்று மருந்துகளில் நம்ம ஊரில் பெரிய ஊழலே நடந்துக்கிட்டிருக்கும் போது ஈ யை எல்லாருக்கும் இவை ஞாபகப்படுத்துது.கேள்வி: பேராண்மை போன்ற வித்தியாசமான ஒரு நல்ல முயற்சியில் எதற்காக இரட்டை அர்த்த வசனங்கள் அதுவும் பெண்கள் மூலமாக என்பது பலருடைய வருத்தமாக இணையத்தில் பதிந்திருந்தாங்க .. அதுக்கு உங்க பதில் என்ன?

பதில்: இந்த விசயத்தை இப்படி பேசுவதே ஆணாதிக்க மனோபாவம் . பெண்கள் தனியாக இருக்கும்போது உடல்பற்றிய விசயங்களை பேசிக்கலாம்ன்னே நான் சொல்வேன். இதெல்லாம் ஒரு சில பொருளாதாராச் சூழ்நிலையில் மாறிபோன விசயம் தான். உடல்பற்றிய விசயங்களை பெண்கள் பேசுவதில் தவறுன்னு சொல்பவர்கள் ஆண்கள் தான். அவங்க கூட பழைமையில் ஊறிப்போய் இருப்பவங்களா இருப்பாங்க. கற்புன்னா என்னன்னு ஒரு பெண் கேக்கறமாதிரி வச்சிருப்பேன். கற்பு போன்ற விசயங்கள் எல்லாம் கூட ஆணாதிக்க சிந்தனையால் உருவான சொல் தான். என்னிடம் பெண்கள் யாரும் திட்டலைங்கறது மட்டுமில்ல சிலர் அதனை பாராட்டியும் இருந்தாங்க.கேள்வி: இன்றைய தினத்தில் வாழ்வினை ஒட்டிய படங்கள் அதிகமாக வருகின்றன அவைபற்றி என்ன நினைக்கிறீங்க?


பதில்: இருப்பதை அப்படியே பதிவு படுத்துவது என்பது ஒரு விசயம். அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து அதற்குமேல் ஒரு சினிமா காமிக்கனும்ன்னு நான் முயற்சிக்கிறேன். அப்படியே பதிவு செய்வதுக்கு பதிலா என் படங்கள் யதார்த்தக்கு மேல் இருக்கறமாதிரி இருக்கும். கொஞ்சம் ஃபிக்சன்ன்னா கூட இருக்கலாம். ப்ரசண்டேசனில் சொல்யூசனை நோக்கிப் போகிறது என்று நகர்த்த முயற்சிக்கறதா இருக்கும். உதாரணமா பேராண்மையில் ஹீரோ ஒரு ஆசிரியர் மாணவிகளை சமூகத்திற்காக பயிற்சி கொடுத்து தயார் செய்யவேண்டிய கதாபாத்திரம், அதை ப்ராக்டிகல் பாடமா சொல்லிக் கொடுத்திருக்கிறார். இது கொஞ்சம் ஃபிக்சனா யதார்த்ததுக்கு மேலானதாகவே இருக்கும்.கேள்வி: நோர்வே திரைப்படவிழா அனுபவம் எப்படி இருந்தது?


பதில்: நோர்வே போய்வந்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். மைனஸ் 15 டிகிரி குளிர் ஒரு புது அனுபவம். சென்னையிலேயே திரைப்படத்துறையிலேயே இருந்தாலும் இந்த பயணத்தில நான், மிஸ்கின், சமுத்திரக்கனி, சசிக்குமார் எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு உருவானது. உலகத்திலேயே முதல் முறை நார்வேயில் தமிழுக்கு மட்டுமேன்னு இந்த திரைப்படவிழாவை வசீகரன்கறவர் நடத்தினார். இது ஒரு சிறப்பான விசயம். புலம்பெயர்ந்த தமிழர்களால் தயார் செய்யப்பட்ட தமிழ் படங்கள், நார்வே, கனடா என்று உலகில் பல இடங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட படங்கள் அங்க திரையிடப்பட்டது. தமிழ் சினிமாங்கறது தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் இருந்து மட்டுமே வரனும்ங்கறது இல்லாம உலகம் முழுக்க தமிழ் ரசிகர்கள் இருக்காங்க அதுபோல உலகம் முழுதுலேர்ந்தும் தமிழ்சினிமா உருவாக வாய்ப்பு இருக்கு. அது தமிழ்நாட்டிலும் திரையிடப்படனும் . இது அநேகமா நடக்கலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.கேள்வி: மாற்று சினிமா ஒன்று வர்த்தகரீதியாக வெற்றியடையாதபோது அக்குறைபாடு மக்களிடமா அல்லது இயக்குநர் மக்கள் இரகசிக்கும் படியாக அப்படத்தை கொடுக்கதவறிவிட்டார் என்பது சரியாகுமா?


பதில்: இல்லை இல்லை. உருவாக்கறவங்க தான் கவனம் எடுக்கனும். மக்கள் ரசிக்கத்தெரியாதவங்க இல்லை. டாக்குமெண்ட்ரி குடுக்கறதா இருந்தா கூட பார்க்கவைக்கிறமாதிரி குடுக்கறது ஃப்லிம் மேக்கரோட வேலை தான். நீ பாக்கலை நீ பாக்கலைன்னு சொல்றது தவறு. இப்ப இது நிரூபிக்கப்பட்டுட்டு தான் வருது. இப்ப எங்க படம் மத்த ஸோ கால்ட் படங்களிலிருந்து வித்தியாசமா இருந்தாலும் மக்கள் அதை ஜெயிக்க வச்சாங்க. அதைத்தாண்டி இப்ப அங்காடி தெரு வந்தது. பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றிருக்காங்க.. படம் சரியாப்போகலைன்னா மக்கள் தப்புன்னு இல்லை. குடுக்கறவங்க முறையில் தான் இருக்கு நிச்சயமாக.கேள்வி: உங்கள் படத்தில் உங்களையே ப்ரதிபலிக்கிறமாதிரி எதும் கதாப்பாத்திரம் இருந்திருக்கிறார்களா?


பதில்: நேரடியாக அப்படி இல்லைன்னாலும் எல்லாக் கதாபாத்திரத்துக்குள்ளயும் நான் கொஞ்சம் நுழைந்திருப்பேன். அப்படி நுழையக்கூடாது. அதான் சினிமாக்கலை என்று சொல்றது. ஆனா நான் கொஞ்சம் நுழைஞ்சு வெளியே வருவேன். பேராண்மையில் ஒரு ஊனமுற்ற இளைஞன் பேசும்போது உள்ள வந்திருப்பேன் .ஹீரோ பேசுறதுல ,பெண்கள் பேசறதுல கூட எங்கெல்லாம் என் கருத்து நுழைக்கமுடியுமோ அங்க தோன்றி மறைவேன். இதை நான் பயன்படுத்திகிறேன் .படம் எடுக்கும் நான் சமூகத்தைப் பற்றிய என் கருத்தை கதாபாத்திரத்தின் மூலமா காண்பிக்கிறேன். மக்கள் விரும்பும்படியா கருத்தைக் கொடுக்க நினைக்கிறேன்.கேள்வி: கிராமப்புற குழந்தைகளுக்கு சினிமா பற்றீய கல்வியை தர முயற்சி செய்வதாக இருந்த திட்டம் எந்தளவில் இருக்கிறது?


பதில்: இப்போ எவ்வளவு முயற்சி செய்து சினிமா எடுத்தாலும் ஒரு விசயத்தை நான் ஒரு கோணத்தில் பார்ப்பேன். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியோ ஒடுக்கப்பட்ட மக்களோ அவங்களைப் பற்றிய விசயங்களை அவங்க பார்வையிலேயே எடுக்கும்போது அந்த கோணத்தில் வித்தியாசம் இருக்கும். உதாரணமா பாரதியார் ஒரு கதையில் முஸ்லீம் ஒருத்தர் தன் மனைவியோட தங்கச்சியையே கல்யாணம் செய்ததா எழுதி இருக்கார். சாதரணமா முஸ்லீம் ஒருத்தர் இத்தனை பெண்களை கலயாணம் செய்துக்கலாம்ன்னு இருக்குன்னு மட்டும் தான் நமக்குத்தெரியும். அப்பறம் தான் அவருக்கு தெரிந்தது, முஸ்லீம் சமூகத்துக்குள்ள பார்த்தா மனைவியோட அக்கா தங்கச்சியை கல்யாணம் செய்யற வழக்கம் இல்லை. அதனால் ஒரு இஸ்லாத்தை வாழ்நிலையை நான் எடுக்கறதுக்கும் ஒரு முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனே எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கும் நிச்சயமா. கலாச்சாரத்தை அது தான் சிறப்பா பிரதிபலிக்கமுடியும். அதனால் ஒடுக்கப்பட்ட மக்களிடமே கலை போய் சேரும்போது அது வேற கோணத்தில் வேறு விதமான சினிமாவே உருவாக வாய்ப்பிருக்கு. அதைத்தான் செய்ய விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை எடுத்துக்கிட்டிருக்கேன். முறைப்படி செய்வதற்க்கு மிகப்பெரிய குழுவே தேவைப்படுது. நிச்சயம் அந்த வேலையை முழுமையாகச் செய்வேன்.கேள்வி: தமிழ்சினிமா நம் கலாச்சாரத்தில் ஒன்றாக மாறிவிட்டதா?


பதில்: முதன்மையாக இருக்கிறது. ஓன்றாக கூட மட்டும் இல்லை நம்பர் ஒன்னாக இருக்கிறது. கோடம்பாக்கம் தான் உலகம் முழுக்க தமிழர்களை ப்ரதிபலிக்கிற கண்ணாடியாக இருக்கிறது. தமிழர்கள் வாழ்வை தமிழ்சினிமா ப்ரதிபலிப்பதாக உலகமே நினைத்துக்கொண்டிருக்கிறது. அதனாலேயே கவனமெடுக்கவேண்டியது அவசியம். சின்னக்குழந்தைகள் அதுவும் வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் தமிழ்நாட்டில் பூங்காக்களில் காதலன் காதலி பாட்டு பாடி நடனமாடுவார்கள் போல இருக்கு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு நாட்டு படங்களில் அது நடப்பதில்லையே.கேள்வி: இணையத்தில் விமர்சனங்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க ? அதுவும் பேராண்மையை வித்தியாசமான முயற்சி இதுல குறைகளை பெரிசாக்காமல் பேசப்பட வேண்டியது என்று கூட பதிந்திருந்தார்கள்.


பதில்: ஆமா இணையத்தில் பலர் எழுதுகிறார்கள் . சில விமர்சனங்களில் அதிகம் பேர் கவனிக்காத நுட்பமான விசயங்களைக்கூட பேசறாங்கன்னு நினைக்கிறேன். படங்களை விமர்சிக்கிறவங்க பற்றிய பார்வையைப்பற்றி கூட எழுத எனக்கு ஆசை. ஒரு படத்தை எல்லாரும் எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பற்றி எழுதனும். இணையம் , பத்திரிக்கை எல்லாமே இந்த முயற்சிக்கு பாராட்டுத்தெரிவித்து இருந்தாங்கதான்.கேள்வி: நீங்கள் தமிழ் ஈழம் மேல் இருந்த ஆர்வத்தால் அப்பெயரில் ஒரு தேநீர்க்கடை ஆரம்பித்தீர்களாமே?


பதில்: ஆமாம். சின்னவயசிலிருந்தே திராவிடக்கட்சியில் இறங்கி வேலை செய்யறவங்க எங்க குடும்பம். நான் மட்டும் தான் கொஞ்சம் படித்திருந்தேன்..தமிழ் முழுமையா படிச்சிட்டேனான்னு தெரியலை ஆனா தமிழ் இனவுணர்வு இருக்கிறதுங்கறது நியாயம் தானே. குட்டிமணி போன்றவர்கள் இறந்த காலகட்டத்தில் பெரிய எழுச்சி இருந்தது. அந்த சூழ்நிலையில் தமிழீழம்ன்னு ஒரு தேநீர் விடுதி அண்ணனுக்காகத் தொடங்கினோம். ஒருவருடம் நடத்தினோம்.கேள்வி: தற்போது ஈழத்தில் நிகழ்ந்துவருகின்றவற்றை நீங்கள் கவனித்து வருகிறீர்களா? அரசியல் தீர்வுக்காக முயன்று வரும் இன்றைய நிலை பற்றி உங்கள் கருத்து?


பதில்: எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் இது. உலகம் முழுதும் இதுபோன்ற இனப் போராட்டங்கள் நடந்துகிட்டிருந்தாலும் தமிழ் தேசியப்போராட்டம் என்பதுமிகப முக்கிய போராட்டமா நினைக்கிறேன். பல தேசியபோராட்டங்கள் விவாதிப்பு நிலையில் அல்லது ஓட்டெடுப்பு நிலையே வராம கூட இருக்கு. என்னுடைய கணக்குபடி வட்டுக்கோட்டை தீர்மானம் தந்தை செல்வா தலைமையில் நடந்தது அப்போதே தமிழ் ஈழம் தான் சரியான தீர்வுன்னு மக்களின் சிந்தனை வெளிபடுத்தப்பட்டுவிட்டது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுவிட்டது. பத்து பதினைந்து கோடி கொண்ட தேசிய இனத்தின் கோரிக்கை நிறைவேறாமல் எப்படி இருக்கிறது? இவ்வளவு போராட்டத்திற்கு பிறகும் சர்வதேசத்தால் அங்கீகாரப்படலை. சாத்தியப்படலைங்கறதால் இன்னமும் கவனமெடுக்கவேண்டி இருக்குகேள்வி: ஈழத்தை பின்புலமாக வைத்து எதுவும் படைப்பு உங்களிடமிருந்து வரக்கூடுமா?


பதில்: என்னை பலரும் கேட்டிருக்காங்க, ஈழத்தமிழர்களே கூட நோர்வேயில் கேட்டாங்க.. முன்பே சொன்னமாதிரி தான் இன்னமும் தமிழகத்திலேர்ந்து உருவாகும் இயக்குனர்களே பத்து பேர் கூட அதுவும் தமிழகத்தை வாழ்க்கை முறையை முழுமையாக ப்ரதிபலிக்கிறமாதிரி படம் எடுக்கலை. ஈழங்கறது உலகத்தின் மிகப் பெரிய விசயம். அதனை அத்தனை சரியாகவும் நுட்பமாகவும் அவங்க பார்வையில் ஈழத்து இளைஞர் எடுக்கும் போது சிறப்பா வரும். என்னுடைய வேலையாக , சினிமா என்பது பெரிய படிப்பு. அதனை ஒரு ஈழத்து இளைஞருக்கு கற்றுகொடுத்து சிறப்பான ஒரு படைப்பு வெளிவர உதவலாம் என்பதுஎன் கருத்து. பண்ணமாட்டேன் என்று சொல்லவில்லை. நான் அந்த சூழ்நிலையில் வாழலை. என்னைவிட அவங்க சிறப்பாக செய்ய முடியும் என்று தான் சொல்றேன். உதாரணமா இப்ப நார்வே திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட ’1999’ , ’மீண்டும்’ போன்ற ஈழத்து இளைஞர்கள் எடுத்த படங்களைப் பார்த்த நம்பிக்கையில் இதை சொல்கிறேன். அவங்களால் முடியும். அவர்களைப் போன்றவர்கள் தயாரிக்கின்ற படங்கள் இங்கே தமிழ்நாட்டிலும் திரையிடப்படனும்னு நினைக்கிறேன். உலக தமிழ் நடிகர்கள் , உலக தமிழ் சூப்பர்ஸ்டார் கூட உருவாக வாய்ப்பிருக்கிறது.கேள்வி: பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டிருக்காங்களே?


பதில்: எங்கம்மா பேருகூட பார்வதிதான். அவர்களை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஒரு ஆட்சியில் சில தடைகளை உருவாக்கி வைத்திருந்தால், அடுத்த மாற்று ஆட்சிக்கு மக்கள் ஓட்டு போட்டு கொண்டு வந்திருக்கும்போது ,அவர்கள் அந்த தடைகளை தொகுத்து அதை சரி செய்து வைக்கவேண்டும்.. இப்பொழுது பார்வதி அம்மாவிற்கு அனுமதி மறுக்க முந்தைய ஆட்சி அவற்றின் ஜி ஓ க்கள் தடை என்றால் அவைகள் முன்பே களையப்பட்டிருக்கவேண்டும். தொடர்ந்து அதைக்காரணமாகக் காட்டிக்கொண்டிருப்பது எப்படி சரியாகும் என்பது தான் என் கேள்வி. அடுத்த ஆட்சி வந்தபின் குழு ஒன்று அமைத்து சீர் செய்யப்பட்டிருக்க வேண்டிய விசயங்கள் இது.நன்றிங்க..

தொடர்ந்து ரசிகர்களுக்கு நீங்கள் வித்தியாசமான நல்ல படங்களைத் தரனும் என்று வாழ்த்துகிறோம்


நன்றி நன்றி.. வித்தியாசமான நல்ல படங்களைத் தொடர்ந்து தருவேன் என்று நானும் உறுதி தருகிறேன்.


ஏப்ரல் மாதம் ஈழநேசனுக்காக எடுத்த பேட்டி சேமிப்புக்காக இங்கே...
நன்றி: ஈழநேசன்.

26 comments:

ஆயில்யன் said...

இயக்குனர் ஜனநாதன் - மக்களின் சமூக பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களினை எடுத்து வெளியிடவேண்டும் என்ற துடிப்போடு இயங்கும் இயக்குனர் - சோழமண்டலம் திருத்துறைப்பூண்டி சொந்த ஊர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ! காவிரி பற்றிய ஒரு டாக்குமெண்டரி படம் எடுக்கும் முயற்சியில் முன்பு இருந்ததாக செய்திகளில் படித்ததுண்டு ஆனால் அதன் விவரம் இப்பொழுது தெரியவில்லை ! மேலும் நல்ல படங்களினை தருவித்திட, இயக்குநருக்கு வாழ்த்துக்கள்!

settaikkaran said...

இயக்குனர் ஜனநாதனுக்கு, நேர்த்தியாகப் பேட்டி கண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்! :-)

KarthigaVasudevan said...

இயற்கையும் பேராண்மையும் அருமையான படங்கள்,பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி .

புவனேஸ்வரி ராமநாதன் said...

பேட்டி அருமை. நன்றி.

கோபிநாத் said...

நல்லதொரு பேட்டி...வாழ்த்துக்கள் அக்கா ;)

மங்கை said...

//இந்த விசயத்தை இப்படி பேசுவதே ஆணாதிக்க மனோபாவம். பெண்கள் தனியாக இருக்கும்போது உடல்பற்றிய விசயங்களை பேசிக்கலாம்ன்னே நான் சொல்வேன்//
:)... உண்மை உண்மை

பிரபல பேட்டியாளர் முத்துலட்சுமி எனக்கு ஃப்ரெண்டு..:))

சாந்தி மாரியப்பன் said...

அருமையான பேட்டி முத்துலெட்சுமி.. மென்மேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள்.

செல்வநாயகி said...

வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

பேட்டி நல்லா இருக்கு

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி said...

வாழ்த்துகள் அக்கா. கேள்விகள் ஸ்பெசிஃபிக்காக நல்லா வந்திருக்கு.

தமிழ் சினிமாங்கறது தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் இருந்து மட்டுமே வரனும்ங்கறது இல்லாம உலகம் முழுக்க தமிழ் ரசிகர்கள் இருக்காங்க அதுபோல உலகம் முழுதுலேர்ந்தும் தமிழ்சினிமா உருவாக வாய்ப்பு இருக்கு. அது தமிழ்நாட்டிலும் திரையிடப்படனும் . இது அநேகமா நடக்கலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.//

வரவேற்கப்பட வேண்டிய விஷயம் இது.

ரோகிணிசிவா said...

you hav focussed wel on ur questions , good ,keep rocking

எஸ் சம்பத் said...

பேட்டியில் கேள்விகள் அமைத்திருந்த விதம் அருமை
வாழ்த்துக்கள்

அம்பிகா said...

இயக்குனர் ஜனநாதனுக்கு, நேர்த்தியாகப் பேட்டி கண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்! :-)

Thekkikattan|தெகா said...

முத்து முதலில் இந்தாங்க வாழ்த்து உங்களுக்கு. பெரிய பெரியா ஆட்கள் கூட எல்லாம் கேள்வி கேட்டு குடையுற அளவிற்கு வளர்ந்திட்டீங்க. அதுவும் கேள்விகளனைத்தும் நிறைய விசயங்களை வெளிக் கொணர்வதாக அமைந்திருக்கிறது.

நமக்கு இயக்குனர் ஜனநாதன் போன்ற சுயமாக சிந்திக்கும் ஆட்கள் வேண்டும். சினிமாவை ஒரு பொழுது போக்கு மற்றும் பணம் காய்ச்சி மரமாக மட்டுமே எடுத்துக் கொண்டு அணுகாமல் அதன் மூலமாக சமூக கருத்துக்களையும் வழங்குவதின் அவசியத்தை உணர்ந்தவராக படுகிறார், ஜனநாதன். அவர் மென்மேலும் பல படிகளை தொட வாழ்த்துக்களுடன், தெகா!

பேட்டிக்கு நன்றி!!

அப்பாதுரை said...

நீங்க குறிப்பிட்டிருக்கும் படங்கள் எதுவும் பார்த்ததில்லை; உங்க பேட்டியைப் படிச்சதும் பாக்கணும் போல் தோணுது

ராமலக்ஷ்மி said...

அருமையான கேள்விகளைக் கேட்டு அசத்தலான பேட்டியினை வழங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி. இயற்கை பலமுறை பார்த்திருக்கிறேன். மிக நல்ல படம்.

சென்ஷி said...

இயக்குனர் ஜனநாதனுக்கு, நேர்த்தியாகப் பேட்டி கண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்! :-)

சென்ஷி said...

//
பிரபல பேட்டியாளர் முத்துலட்சுமி எனக்கு ஃப்ரெண்டு..:))//

:))))))))

Hai said...

அதிகமாக திரைபாடங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அது பற்றி ஆர்வம இல்லாமலே போய்விட்டது. எனினும் சில சமயம் பேசப்படும் படங்களை பார்ப்பதுண்டு. இவரை பற்றி அறிந்து கொள்ள உதவியது. இவரிடமிருந்து இனியும் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறேன்.

CS. Mohan Kumar said...

நல்ல கேள்விகள். வாழ்த்துக்கள். சிறந்த படங்கள் தரும் ஜன நாதனுக்கு பாராட்டுகளும்

சிங்கக்குட்டி said...

அருமையான பேட்டி.

நன்றி முத்துலெட்சுமி

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு பேட்டி...வாழ்த்துக்கள் அக்கா

தருமி said...

வித்தியாசமான இயக்குனர். நல்ல கேள்விகள். நல்ல பதில்கள்.

இருவருக்கும் வாழ்த்துகள்.