எங்க ஊரில் கோயிலையும் சினிமாவையும் விட்டா வேற பொழுதுபோக்கு இல்லை. மேம்பாலம் போகலாமா ன்னு அப்பா கேட்டா குதிச்சுகிட்டு கிளம்பிடுவோம் நானும் தம்பியும். மேம்பாலம் ஊரோட ஆரம்பம். ரயில் பார்க்கறதுன்னா எப்போதும் சின்னவங்க பெரியவங்க எல்லாருக்கும் ஆசை தான்.
அப்பா ஒரு ரேஸ் சைக்கிள் வச்சிருந்தாங்க. எல்லார் அப்பாவும் ஒரே பச்சை கலரில் சைக்கிள் வச்சிருப்பாங்க. இது வித்தியாசமாக சிகப்பு கலரில் ரொம்ப ஒல்லியா இருக்கும். அதுவே எங்களுக்கு பெருமையா இருக்கும்.முன்னாடி இருக்கர குட்டி சீட்டில் தம்பி, நான் பின்னாடி.மேம்பாலம் வந்ததும். நான் மட்டும் இறங்கி பாலத்தின் சுவரினை ஒட்டி போட்டிருக்கும் பாதையில் நடந்து வருவேன். தம்பியை வைத்து அப்பா ஓட்டி கிட்டே மேலே ஏறுவாங்க.
மேலே போனதும் நடைபாதை மேலே சைக்கிளை வைத்துவிட்டு கீழே ரயில் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டே கேள்விகேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த கண்ணாடி போட்ட ரூமில் யாரு இருக்கா? அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா? விளக்கு ஏத்தறது பார்க்கரது கூட சந்தோஷம்.. பெரிய ஏணியில் ஏறி கூண்டை திறந்து விளக்கு ஏத்திட்டு போவார் ஒரு பணியாளர்.
பாலத்தில் ஒவ்வொருமுறை பேருந்து போகும்போதும் பாலம் அதிரும். அது ஒரு விளையாட்டு போல இருக்கும். அப்படியே, வான சாஸ்திரம் கூட..அங்க பார் இந்த நட்சத்திரம் அது இது எல்லாத்தையும் சேர்த்து பாரு இந்த உருவம் போல தெரியுதா? அத பார்த்தியா அதான் துருவநட்சத்திரம். இப்படியே பேசிக்கொண்டு போழுதுபோக்குவோம். இருட்டும் வரை இருந்து பார்த்து விட்டு வருவோம்.
தொலைக்காட்சி இல்லாததால் பல விசயம் பேச நேரம் இருந்தது அப்போது. இப்போது ஊருக்குப் போகும்போது நான் யாராவது இப்படி குழந்தைகளோடு வந்திருக்கிறார்களா என்று..பாலத்தை கடக்கும் போது பார்ப்பதுண்டு. எங்கே எல்லாம் தான் தொடர்களில் மூழ்கி இருப்பார்களே.
இப்போதும் அப்பா போகிறார்கள். அங்கே அவர்கள் வயதினர் குழு இருக்கிறதாம். தம்பியின் கல்யாண வரவேற்பில் அப்பா சிலரை இவர்கள் என் மேம்பாலம் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள். இன்றைய அவசரயுகத்தில் எங்கே நம்மால் நம் குழந்தைகளுக்கு இப்படி செய்ய முடிகிறது. சில சமயம் குற்ற உணர்ச்சியாகக் கூட இருக்கும்.
முடிந்தவரை பூங்கா, காட்சியகங்கள் என்றும் கோளரங்கம் என்றும் அழைத்து சென்றும் மனதை தேற்றிக் கொள்கிறோம்.
17 comments:
\:எங்கே எல்லாம் தான் தொடர்களில் மூழ்கி இருப்பார்களே.\"
இது 100% உண்மை,
சிறு வயது இன்பங்கள்,அனுபவங்கள் எல்லாமே இப்போ இருக்கிற generation miss பண்றாங்க.
லட்சுமி, உங்க பதிவு படிச்சுட்டு, நான் சிறு வயதில் என் அப்பாவின் சைக்கிளில் முன்னால் ஒரு சிறிய இருக்கையில் அமர்ந்து போவது நியாபகம் வந்தது, எத்தனை குதூகலமான தருணங்கள் அவை.
அருமையான பதிவு, வாழ்த்துக்கள்
நன்றி திவ்யா.
இப்போது குழந்தைகளிடம்
பேசி அவர்களுக்கு அன்பை
பகிர்ந்து கொள்ள பழக்காமல், பின்னால் வயதான பின் என் பிள்ளைகள் எந்நேரமும் ஒடிக்கொண்டே இருக்கிறார்கள்.என்னிடம்
பேசவில்லை என்று கவலைப்
படக்கூடாது.இல்லையா?
லக்ஷ்மி...
இது ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் அத நினச்சு பார்கிறப்போ ஏற்படும் சந்தோஷமும், உணர்வுகளும்..
ம்ம்..அனுபவிச்சா தான் தெரியும்...
நமக்காகவே நேரம் ஒதுக்கி நம்முடன் இருந்த பெற்றோர்,,ஹ்ம்ம்ம்..
ஆமாம்,மங்கை.
சில சமயம் என் வாழ்க்கை என் சந்தோசம்ன்னு நினைக்கும் போது
நம்ம அம்மா அப்பா அப்படி
நினைத்து நமக்காக நேரம்
ஒதுக்காமல் போயிருந்தால்
எப்படி இருக்கும்ன்னு
நினைச்சுபாக்கறது உண்டு.
என்னோட குட்டி சைக்கிள் நியாபகம் வந்திட்டது !!! சூப்பர்...!!!
நன்றி செந்தழல் ரவி.
லக்ஷ்மி , பரணில் ஏதோ ஒன்றை தேடி எடுக்கும் போது எதிரபாராத விதமாய் நாம பொக்கிஷமா நினைத்த ஒரு மஞ்ச கலர் புகைப்படம் கையில் கிடைச்ச மாதிரி ஒரு அனுபவம் உங்க பதிவு
ரொம்ப நன்றி லக்ஷ்மி.
எங்களோட உங்க நினைவைப் பகிர்ந்து
எங்களையும் மேல்பாலத்துக்கும்,ரயிலடிக்கும் கூட்டிப் போய் விட்டீர்கள்.
பெற்றோர்கள் எடுத்த அத்தனை முயற்சியும் நம்மை எப்படி மேம்படுத்தி இருக்கின்றன!!
அவர்களுக்கு வேறு உலகைத் தேடும் எண்ணமே இருந்ததில்லை.
அதனால் எங்களுக்கும் வெறு உலகம் தெரியவில்லை.
இனி வரும் தலைமுறை எப்படியோ..
இதே மாதிரி சிந்தனை இருந்தால் வரப்போகும் குழந்தைகளும் வளம் பெறுவார்கள் என்று பாசிடிவாக நினைக்கலாம்.:)
நன்றி,தீபா.
நன்றி,வல்லிசிம்ஹன்.
உங்கள் பின்னூட்டம் இரண்டுமே
என்னை ரொம்பவும் நெகிழ
வைத்து விட்டது.
எழுத ஆரம்பித்து இப்படி
பின்னூட்டம் வருவது என்பதெல்லாம்
நினைத்துப்பார்க்காத ஒன்று.
I think you are describing the bridge in Mayiladuthurai.
லக்ஷ்மி,
இன்னிக்குத்தான் இங்கே வர முடிஞ்சது. ரொம்ப அழகா எளிமையா இருக்கு
உங்க எழுத்து. ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலம்கூட ஜோரா இருக்கும்.
அங்கே இருந்து எஞ்சின் புகை போக்கிக்குள்ளே பார்க்கணுமுன்னு ஒவ்வொரு
முறையும் முயன்று கரி மூஞ்சியுடன் வீட்டுக்குப் போவேன்:-))))
நேற்று முழுவதும் உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இடமுடியவில்லை.எங்கு பிராப்ளம் என்று தெரியவில்லை.
ஆமாங்க அந்த மேம்பாலம் எந்த ஊர் என்று சொல்லவில்லையே!என் கண்ணுக்கு படவில்லையோ?
டெல்லியா?
டெல்லியில் ரயில் நிலையத்தில் தான் பார்த்த ஞாபகம்.
//Anonymous said...
I think you are describing the bridge in Mayiladuthurai//.
ஆமாம். சரியாக சொல்லிவிட்டீர்கள்.
//துளசி கோபால் said...
லக்ஷ்மி,
இன்னிக்குத்தான் இங்கே வர முடிஞ்சது.ரொம்ப அழகா எளிமையா இருக்கு
உங்க எழுத்து. //
வாங்க வாங்க .நன்றி.
இங்க வந்ததுல இருந்தே உங்க பின்னூட்டத்த வாங்கணுங்கர ஆசை இருந்தது..நிறைவேறி விட்டது.
//வடுவூர் குமார் said...
நேற்று முழுவதும் உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இடமுடியவில்லை.எங்கு பிராப்ளம் என்று தெரியவில்லை.
ஆமாங்க அந்த மேம்பாலம் எந்த ஊர் என்று சொல்லவில்லையே!என் கண்ணுக்கு படவில்லையோ?
டெல்லியா?
டெல்லியில் ரயில் நிலையத்தில் தான் பார்த்த ஞாபகம். //
காத்திருந்து பின்னூட்டம் இட்டத்தற்கு நன்றி.மாயவரத்து மேம்பாலம் அது.டில்லியில் எங்கெங்கு காணினும் மேம்பாலம் தான்.மேம்பாலங்களின் நகரம்.ஆனால் நின்று அனுபவிக்க கஷ்டம் தான்.ஏதும் பஸ் நடைபாதை மேல் ஏறிவிடக்கூடாது என்று வேண்டிக் கொள்ளணும் வேற.
மாயவரத்துல குடமுலுக்கு, லட்சதீபம், பியர்லஸ் தியேட்டர், ஆரியபவன் உணவகம் போன்றவற்றை மறக்க முடியுமா?
Post a Comment