மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக
December 14, 2010
கருத்தரங்கக்குறிப்பு -கவிதையும் கணினியும்-2
அடுத்த அமர்வாகிய கவிதை இலக்கியத்தினை நெறியாளுகை செய்யவேண்டிய தில்லியைச் சேர்ந்த சிந்துகவி . மா.சேது ராமலிங்கம் அவர்கள் வர இயலாததால் அந்நிகழ்வுக்கு ரவி சுப்ரமணியன் அவர்கள் ஏற்று நடத்தினார். ஒரு கவிதையை அழகிய பாடலாகவே பாடிக்காண்பித்தார்.
1.பிறகு கவிஞர் கலாப்ரியா கட்டுரை வழங்கினார்.
எதிலும் நமக்கு தேவையான ஒரு பகுதியை நமக்குத் தேவையானபடியாக புரிந்துகொள்வது என்பது தவிர்க்கமுடிவதில்லை. மற்றபகுதிகள் மறந்தும் போகும்படி அந்த வரிகள் உள்ளுக்குள் நின்று விடுகின்றன.
அவர் , 70களில் ஆங்கில வார்த்தைகள் சில கவிஞர்களால் சரளமாக உபயோகிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்து. பின்னாளில் அவர்களே தமிழின் மிக முக்கியகவிகளாக பரிணமித்ததாகக் கூறினார்.
ஆக இன்றைய நிலையில் இவர்களெல்லாம் கவிதை எழுதாவிட்டால் என்ன கேடு என்று தலையில் அடித்துக்கொண்டு புதிய முயற்சிகளை தரையோடு நசுக்கப்பார்ப்பவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.
( நான் கூட என் கவிதையை அனுப்பிவைப்பதாகச் சொன்னேன் :) )
முன்காலத்தில் எழுதியவர்கள் அனுபவங்களின் கொந்தளிப்பாகவும் தற்போது மொழியின் பெருங்குகையினுள் நுழைந்தவர்களாக புதிர்மொழியில் கவிதை படைப்பதைக்குறிப்பிட்டார்.
2. மரபுக்கவிதை மறக்கப்படவேண்டியதா ? என்று தலைப்பு வைத்தாலும் வைத்தார்கள். நிகழ்வை ஒரு பட்டிமன்றம் என்று நினைக்கவைக்கும்படியாக சுவையாக ( சிலருக்கு கட்டுரை வாசிப்பு சுவராசியக்குறைவாகத்தோன்றி இருக்கும்பட்சத்தில் இது அவர்களை இலகுவாக்கி இருக்கும்) இருந்தது கவிஞர் முத்துலிங்கத்தின் பேச்சு. நடுநடுவே அவர் குறிப்பிட்ட நிகழ்வுகளைக் கேட்டு அவையோருடன் மேடையில் இருந்தவர்களும் சிரித்து ரசித்து மகிழ்ந்தனர். ஒவ்வொரு கருத்தையும் முன் வைத்துவிட்டு மரபுக்கவிதை மறக்கப்படக்கூடியதா என்று கேட்டீர்களே அது எப்படி மறக்கமுடியும் ’அதற்குத்தான் சொன்னேன்’
என்று முடித்தார். தெரியாமல் வைத்துவிட்டார்களைய்யா என்று சிலரும் அப்படி வைத்ததால் தானே அருமையான வாதங்களை அவர் வைத்தார் எனச் சிலரும் சொல்லிக்கொண்டார்கள்.
முதல் நாள் ப்ரேம் அவர்கள் எல்லாவற்றையும் நாம் பின் சென்று தொன்மத்திலிருந்தே உதாரணம் காட்ட முனைகிறோம் என்று சொன்னதைப்போல இவரும் பல அறிவியல் உண்மைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் அறிந்திருந்ததை எடுத்து வைத்தார். ஆச்சரியம் தான். ’ஓரறிவதுவே உற்றறிவதுவே’ மற்றும் ’புல்லும் பூண்டும் ஓரறிவினவே’ என்று தொல்காப்பிய சூத்திரங்களை முன்வைத்தார்.
தாலாட்டுப்பாடல்கள் கலிப்பா வகையைச்சார்ந்தது. எந்த பள்ளியில் கற்றுக்கொண்டு தாய்மார்கள் இப்படி பாடுகிறார்கள்? என்று அப்பாடல்களை எடுத்து வைத்து கேட்க எல்லாருக்கும் சிலிர்ப்புத்தான். பல நல்ல மரபுகவிதைகளைக்கூறி அவை மறக்கப்படக்கூடியதுமல்ல என்று விளக்கமளித்தார்.
புதுக்கவிதை மலரென்றால் மரபுக்கவிதை வேர் என்றார்.
3 அடுத்து கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் கவிதை என்பது வாழ்க்கையை கட்டமைக்கும் சக்தியிலிருந்தும், மனித அனுபவங்களிலிருந்தும், சமூகட்தின் சூழலிருந்தும் உருவாகுவதால் உள்ள உண்மைத்தன்மையைப் பற்றிக்கூறினார். இந்திய அளவில் நல்ல கவிதைகளை கவிஞர்களைப் பற்றிய குறிப்புக்களை வழங்கி இன்றைய நிலையில் பெண்கவிஞர்களே தமிழ் புதுக்கவிதையின் தலைஎழுத்தாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்..
( நமக்கு வேண்டியது தான் மனதில் நிற்குமென்றேனே:) )
கணினித்தமிழ் நிகழ்வினை திரு ஜான்சுந்தர் அவர்கள் முன்னெடுத்து வைக்க எழுத்துரு தரப்படுத்தல் தலைப்பில் பத்ரி சேஷாத்திரி எல்லாருடனும் சாதரணமாக மேடையின் கீழ் நின்று பேசுவது போலவே ..எழுத்துரு படைப்பில் ஏற்படும் ப்ரச்சனை இது .. என்ன செய்யலாம்? என சிறு சிறு குறிப்புகளாக எல்லாருக்கும் புரியும்வண்ணம் எடுத்துக்கூறினார். என்னை மட்டும் அதற்கான பதவியில் அமர்த்தினால் இரண்டு நாளில் நடத்திக்கொடுக்கிறேன் என்றார். ஒரு ப்ரஸ் மீட் ஏற்பாடு செய்வதாக்கூட யாரோ வாக்களித்தார்கள்.. ”:)
அடுத்ததாகப் பேசிய பேராசிரியர் பெ. சந்திரபோஸ் அவர்கள் கணினித்தமிழ் மொழியாக்கச்சிக்கல்களை சுவைபட பகிர்ந்துகொண்டார்.
பத்ரியும் சரி பேராசிரியரும் சரி இருவருமே முன்வைத்தது ஜப்பான் சீனா போல எங்கள் மொழியில் மென்பொருளையும் எங்கள் மொழியை எளிதாகப்பயன்படுத்தக்கூடிய ஒரு கைபேசி , கணினி என நாம் அதிரடியாக கட்டாயப்படுத்தினால் வியாபாரம் முக்கியமானதாக நினைப்பவர்கள் முயன்று அதனைத்தருவார்கள் . நாம் கேட்காமல் இருப்பதே நமது தவறு என்று தான் சொன்னார்கள். யார் காதிலாவது விழுமோ?
நிகழ்வின் இறுதியில் தில்லி சௌம்யாவின் பாரதியார் பாடல்கள் நிகழ்ச்சி அருமையாக இருந்தது.’ செய்யும் தொழிலே உன் தொழில் காண்’ பாடலை நான் முதல் முறையாக கேட்டேன்.
சுசீலா அம்மாவின் கருத்தரங்கக்குறிப்பு
ச.வீரமணி அவர்களின்
நல்வாழ்வும் நற்பண்பும் இணைந்த நாட்டை உருவாக்குவோம்-தில்லித் தமிழ்ச்சங்கக் கருத்தரங்கில் அப்துல் கலாம் அறைகூவல்
December 13, 2010
தமிழ் 2010 கருத்தரங்க குறிப்புகள் -1
என் தந்தை கட்டுரை வாசிக்கப்போகும் போது ஒரு முறை கல்லூரி கருத்தரங்கத்திற்கு சென்று இருக்கிறேன். அதன் அனுபவத்தை எழுதிவைக்கும் டைரிப்பழக்கம் எனக்கு அப்பொழுது இல்லை. இப்போது அது நினைவிலும் இல்லை. கல்லூரி தவிர எங்கோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெற்றன என்பதையெல்லாம் படித்திருக்கிறேனே தவிர அவை எப்படிப்பட்டதாய் இருக்கும். படைப்பாளிகள் என்று அறியப்பட்டவர்கள் பலர் கூடி இருக்கும் ஒரு அவையும் அதனை வாசிப்பவர்களாகிய பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு எப்படி இருக்குமென்று நேரில் கண்டதில்லை.
முதல் முறையாக தில்லியில் அப்படி ஒரு நிகழ்ச்சி தமிழ் 2010 நடைந்தேறியுள்ளது. ஆரம்பவிழாவைத் தவிர மீதி இரண்டு நாட்களும் நான் முழுமையாக கலந்துகொண்டேன். நிகழ்ச்சியை நடத்திய தமிழ்சங்க குழுவினர் ஒவ்வொருவரையும் மிகப்பாராட்டி நன்றி கூறவேண்டியது அவசியம். அவர்களிடம் நிகழ்வு ஒரு பண்டிகை நாளின் இலை நிறைந்த இனிப்பு வகைகள் போன்றது ஆனால் திகட்டாத ஒன்று என்று நன்றி கூறினேன். இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து அளிப்பார்கள் என்று இவ்விழாவின் வெற்றி நம்பிக்கை அளிக்கிறது. இது ஒரு குழுவின் வெற்றி ஆனாலும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி மற்று ஷாஜஹான் அவர்களுக்கு தனிப்பட்ட நன்றி.
இரண்டாம் நாள் பாரதியின் பிறந்தநாளை ஒட்டி தில்லி தமிழ் கல்விக் கழகப் பள்ளிக்குழந்தைகளின் பாரதி பாடலுடன் தொடங்கியது ..அவர்களின் ஆசிரியர் திருமதி ராஜிரமணி அவர்கள் .
பிறகு தமிழ்சங்கத்தில் திருமதி லலிதா ஆனந்திடம் இசை பயிலும் குழந்தைகளும் பாரதியார் பாடல்களைப் பாடினார்கள்..
திரு மறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்கள் நிகழ்வின் காணொளியை வலையேற்றி இருக்கிறார். நிகழ்விற்கு வர இயலாத பலரும் பயன்பெறும் வகையில் அவற்றை வலையேற்றியதோடு அதனைப்பற்றி உலகமயமாகும் தமிழ் என்கிற தலைப்பின் போது திரையில் காண்பித்தார். நம் வலைத்தளங்களை திரட்டுகின்ற தமிழ்மணம் அன்று ப்ரஜக்டர் மூலம் பெரிய திரையில் தமிழ்ச்சங்கத்தில் ஒளிர்ந்தது மிக மகிழ்ச்சியான தருணம். . நம் தமிழின் குறிஞ்சி முல்லை நிலப்பரப்பைப்போன்று பனிப்ரதேசங்களிலிருந்தும் தமிழ் இன்று எழுதப்படுகிறது என்று அவர் சொல்லும்போது சுவிஸ் ஹேமாவின் கவிதைப்பக்கம் வெளிவந்த காற்றுவெளி இதழ் பற்றிய காட்சிக் காட்டப்பட்டது.
கட்டுரைவாசிப்பாளர்களாகிய படைப்பாளிகள் பழக எளியவர்களாக .. பார்வையாளர்களாகிய எங்களிடம் பழகியது மற்றொரு மகிழ்ச்சி.. செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழ்ச்சங்கத்து நண்பர்கள் குருமூர்த்தியும் , சத்யா அசோகனும் என்னையும் சிலரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். குளிர் காரணமாக என் தொண்டை அடைத்துக்கொண்டு குரல் ஒருவழியாக மிகச்சிரமமாகப் பேசிக்கொண்டிருந்தேன். அந்த கோரத்தை பொருட்படுத்தாமல் அவர்கள் என் பேச்சையும் கேட்டார்கள்.( கொஞ்சம் அவர்கள் பேசுவதையும் நான் கேட்டேன்)
கட்டுரை வாசித்தவர்களில் சந்தித்து பேசமுடிந்த அவர்கள்
‘வெளி’ ரங்கராஜன் , அமரந்த்தா, ரவிசுப்ரமணியன், அம்பை , லிவிங் ஸ்மைல்
நெறியாளுகை செய்யதவர்களில் இருவர் எங்கள் பகுதியிலிருந்து வந்திருந்தார்கள் முதன் முறையாக அவர்களிடமும் பேசும் வாய்ப்பு அமைந்தது.
திரு டாக்டர் எஸ். பாலசுப்ரமணியன் மற்றும் திரு நாக. வேணுகோபால்.
அனைத்து எழுத்தாளர்களையும் குழுவாக மேடையில் படமெடுக்கும் போது என்னையும் அழைத்து ஒரு இடமளித்தார்கள். ஒரு கணம் தயங்கி பின் ஓடிப்போய் ஓரத்தில் நின்று கொண்டேன்.புகைப்படம் பின்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.
கலாம் அவர்கள் வெளியிட்டு வைக்க கருத்தரங்க மலர் ‘ இதுவரை , இன்று , இனி...’ கைகளில் கிடைத்துவிட்டது.
சலுகை விலையில் அன்று 100 ரூபாய்க்கு கிடைத்தது. புத்தகத்தில் 150 ரூ எனப்போட்டிருக்கிறது. விநியோடம் கிழக்கு பதிப்பகம் என இருக்கிறது. வெளியூரிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வாங்க விரும்புவோருக்கு சென்று சேரும் வகையை அவர்கள் தெரியப்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.
நிகழ்வின் பேச்சுக்கள் குறித்து என் சிறு குறிப்புகள்.
தமிழில் கோட்பாட்டு எழுத்துக்கள் பற்றிய திரு ப்ரேம் அவர்களின் விரிவான கட்டுரைப்பற்றிய பேச்சு சுவாரசியமானதாக சிந்திக்க வைப்பதாக இருந்தது. ஒரு கோட்பாடு தன்னை காலத்திற்கும் நிகழும் சூழலுக்கும் ஏற்ப புதுப்பித்துக் கொள்ளாதபோது அது நம்பிக்கை என்ற நிலைய அடைந்து பின் தொன்ம வடிவம் பெற்று இறுகி அடிமைகொள்ளும் கட்டளையில் ஒன்றாக மாறிவிடும். என்று கூறி கோட்பாடுகளை தொடர்ந்து புதுப்பித்தல் அவசியம் என வலியுறுத்திப் பேசினார்.
நாஞ்சில் நாடன் அவர்களின் நாவல்கள் குறித்த கட்டுரை வாசிப்பிலிருந்து புதிய வாசகர்களுக்கு நல்லதொரு தொகுப்பு. பேச்சின் (கட்டுரையின்) நடுநடுவே நகைச்சுவை தூவி வைத்திருந்தார்.
“ஒருமலரை அனுபவிக்க வடிவம் வண்ணம் அழகு வாசனை போதாதா..? தாவர பேரினப்பெயர் ,தாவர இயல்பு வளரியல்பு இலை மஞ்சரி புல்லிவட்டம் அல்லிவட்டம் சூலகம் கனி விதை இத்தனை தகவல்களும் தேவைதானா என்று அடுக்கினார்”
(அப்படியே தான் நான் குழம்புவேன். படித்தால் அன்று ரசித்து அன்றே மறந்தும் போகும் எனக்கு எழுதிய எழுத்தாளர்களைப்பற்றிய் விரல் நுனியில் வைத்துக்கொண்டு இருப்பவர்களும் அதனை அக்குவேறு ஆணிவேறாக அலசுபவர்கள் ஆச்சரியமும் கலவரமும் ஒரு சேரத்தருகிறார்கள்.)
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் வர இயலாத நிலையில் அவருடைய கட்டுரை திரு ஷாஜகான் அவர்களின் தெளிவான உச்சரிப்பில் வாசிக்கப்பட்டது. சிறுகதைகள் இன்று இணையத்தில் தான் அதிகம் பரிட்சிக்கப்படுகிறது என்றும் கவிதை போல கட்டுரை போல இளைஞர்கள் சிறுகதையை முயற்சிக்கவில்லை என்றும் தற்போதைய சிறுகதைகள் ஆய்வு செய்யப்படாமல் விமர்சிக்கப்படாமல் மற்ற மொழியிலிருந்து அதிகம் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றது என்று இன்றைய தேவைகள் முன் வைத்திருக்கிற கட்டுரையாக இருந்தது.
இந்த முதல் அமர்வின் நெறியாளுகை செய்த முனைவர் சுசீலா அம்மா சிறப்பாக அவர்களையும் அவர்கள் தலைப்புகளை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்றார்கள்.
- மற்றவர்கள் அமர்வுகள் பற்றிய என் நினைவுகளை அடுத்த பதிவில் பதிகிறேன்.
முதல் நாள் நிகழ்வு பற்றி திரு வீரமணி அவர்களின் பதிவு
1. இலக்கியா ச.வீரமணி அவர்களின் பதிவு
2.கருத்தரங்க மலர் வெளியீட்டு நிகழ்வில் கலாம் அவர்களின் உரைப்பற்றி பென்னேஸ்வரன் அவர்களின் கட்டுரை
December 4, 2010
வானவில் இற்றைகள்
சபரியின் வகுப்பில் டிக்சனரி செய்யராங்க.. தினமும் 5 புது வார்ட் எழுதவேண்டும். இன்று ஜி யில் தொடங்குவது. நான் அவனுக்கு ஒலியின் நீளம் புரியட்டும் என்று ஈ ஈ என்று சொன்னதும்..
டபுள் ஈ யா
ஆமாம்
அப்ப டபுள் ஈ ந்னு சொல்றதுக்கென்ன ?
:(
-----------------------------------------------------------
’பேபி என்று என்னைச் சொல்லாதே’ என்று அக்கா சொன்னாலும், தம்பி அக்காவை நோ பேபி , கம் பேபி என்று போனமாதங்களில் அழைத்துக்கொண்டிருந்தார்.
ஏண்டா இனி அவ தான் பேபியா நீ இல்லையா.. நீ அப்ப அண்ணா
இனி அவளைத்தான் கொஞ்சனும் வீட்டில் எல்லாரும்..ஒகேயா?
ஓகே
ஒரு ஆறுவருசம் அவளை தனியாக ராணி மாதிரி பார்த்தாச்சு .. இப்ப ஆறுவருசம் ஒன்னைப்பாத்தாச்சு திரும்ப அவ டேர்ன் போலயே..?
எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மகளின் முகம் பளிச் பளிச்
ஏக்கம்?
------------------------
மகள் சிறுவயதில் 11 மணி வரைகூட புத்தகமும் ரைம்ஸும் படிப்பாள் என்று சொல்லி இருக்கிறேனில்லயா . நம்மையும் படித்துக்காட்டச்சொல்லி நச்சரிப்பாள். மகனை உக்காரவைக்கப் பாடு படவேண்டும். அதற்காகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
‘இவன் அப்படியே உல்டா உன்னை மாதிரி இல்லை ‘
மகள்: ’ அம்மா அப்ப இவன் பெரிசானதும் நல்லாப் படிப்பானோ’
அப்பா: அப்ப நீ ஒத்துக்கிறியா இப்ப சரியாப் படிக்கிறதில்லன்னு :)
மகள் :அவ்
-----------------------------------------
வாரம் ஒரு விசயம் பற்றி எடுத்துகொண்டு வகுப்பின் நடுவில் நின்று பேசவேண்டும் என்பது சபரிக்கு வகுப்பில் ஒரு பயிற்சி முறை.
போனவாரத்தில் மைசெல்ஃப் பற்றிப் பேசவேண்டும். தயார் செய்த நான்கு வரிகளை பயிற்சி எடுக்க விருப்பமே இல்லை. அவ்வப்போது விளையாட்டின் நடுவே பயிற்சி எடுத்தாலும் அவை அத்தனை போதாது என்று தெரிந்தே இருந்தது. ஆனால் அவனைப் போட்டு பயமுறுத்தும் எண்ணமும் இல்லை. புதன் அன்று சரியாகச் சொல்ல இயலவில்லை. டீச்சர் ‘நோ வெரிகுட்’ என்று சொல்லிவிட்டார்கள் என்று வருத்தப்பட்டான். மீண்டும் நாளை சொல்லலாம் என்றார்கள் இன்று பயிற்சி கொடு என்று அவனேக் கேட்டுக்கொண்டான். :)
இரண்டாவது வரியில் இருந்த ஒரு புது வார்த்தை சொல்ல வராமல் போகவே மற்ற வரிகளைச் சொல்ல தயக்கம் இருந்திருக்கிறது. பிறகு தயார் செய்த எந்த வரியும் அடுத்த வரிக்கு முன்போ பின்போ அல்லது சொல்லாமல் விட்டாலோ பொருள் குற்றம் வரப்போறதே இல்லை. அவ்ளோ சிம்பிள் என்று அவனுக்கு தைரியம் குடுத்தபின் ..வெரிகுட் வியாழன் கிடைத்துவிட்டது.
இந்த வாரம் ’மை மதர் ‘ இதற்கும் பயிற்சியின் போது சுணக்கம் இல்லாமல் பயிற்சி எடுத்துக்கொண்டதோடு இரண்டு முறை சொல்லிப்பார் என்றால் 3 மூன்று முறை என்று உற்சாகமாகவும் இருந்தான்.
மற்ற பையன்கள் பேசியது புரிந்ததா என்ன பேசினார்கள் என்ற கேள்விக்கு பதில்
அவங்க எல்லாம் முஷ்கில் முஷ்கிலா ப் பேசினாங்க.. :)
முஷ்கில் - கஷ்டமான
அடுத்தவாரம் தலைப்பு . என் பள்ளிக்கூடம்
--------------------------------------------
மகளுக்காக ஃபார்ம்வில் விளையாட ஆரம்பித்தேன். இன்னுமா உனக்கு அதுல ஆர்வம் வரலை என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். சின்னதாக எனக்கு ஆர்வம் வந்ததை கண்டுகொண்டாள் ஒரு நாள். குட் என்று பாராட்டினாள். எனக்கு அவளே கற்றுக்கொடுத்தாள். அடுத்த லெவலுக்கு நான் முன்னேறும்போதெல்லாம் ‘வாவ்’ குட் அம்மா என்று பாராட்டுகிறாள். அவளின் பாராட்டுதலுக்காகவாவது நான் அடுத்தடுத்த லெவலுக்குப் போகவேண்டும் எனத்தோன்றுகிறது.
----------------------------------
வீ கேம் அம்மா பரிசளித்திருந்தார்கள். அரைமணி நேரம் அதற்கு ஒதுக்கப்படும். டென்னிஸ் விளையாடுவதில் வீட்டில் எல்லாரும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம். தனக்காக உருவாக்கப்பட்ட கேரக்டரில் மட்டும் தான் விளையாடுவார் தம்பி. பௌலிங் மற்றும் டென்னிஸில் அவர் தான் வெற்றி பெறுகிறார்.
--------------------------
சபரி முடிந்தவரை எழுத்துக்கூட்டி கதை புத்தகங்களை வாசிக்கமுடிகிறது.
ஒரு பல் விழுந்துவிட்டது. தான் பெரியவனாகிவிட்டதாக பெருமிதம் கொண்டான்.தன் பிறந்தநாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்
-----------------------------------
மகளின் பள்ளியில் வால்ட்விட்மேனின் கவிதையை பாடலாக இசையமைத்துப் பாடச்சொல்லி இருந்தார்கள். அவளுடைய தளத்தில் அனுபவத்தை பதிவு செய்திருந்தாள்.
யூ ட்யூபில் அப்பாடலை வரிகள் கீழே தெரியும்படி தமிழ்பிரியன் வடிவமைத்ததை இங்கே காணலாம் (கேட்கலாம்). க்ளாஸிக்ன்னு போட்டிருக்கீங்களேன்னு கேட்டா சினிமான்னாலும் எங்கூர் சினிமால்லா க்ளாசிக் லிஸ்ட்ன்னுட்டார் தமிழ்பிரியன்.
நன்றி தமிழ்பிரியன்.
November 20, 2010
தமிழ் 2010 கருத்தரங்கம் - தில்லி
November 15, 2010
வியல் * விருதுகள்
சிலரைத் தொடர்ந்து கொண்டே - அறிந்துகொண்டும்
அறிந்துகொண்டே புரிந்துகொண்டும்
பலவும் புரிந்துகொண்டே - கற்றுக்கொண்டும்
சிறுமுயற்சியின் பயணம் ஐந்தாம் ஆண்டில் நுழைகின்றது.
இந்த வருட தொடக்கத்தை சில சக பதிவாளர்களிடம் கலந்துரையாடித் தொடங்குகிறேன். விடுபட்டவர்களைத் தொடர்புகொள்ள கால அவகாசம் கிட்டவில்லை என்பதற்கு வருந்துகிறேன். பதிவின் நீளத்திற்கு மன்னிக்கவும்.
பதிலளித்துள்ளவர்கள் : Jyothi Vallaboju(telugu blogger), சுசீலாம்மா ,ரோகிணி , ஹுசனைம்மா , கபீஷ், விக்னேஷ்வரி , சுமஜ்லா , தீபாகோவிந்த், புனிதா ,சித்ரா, அன்புடன் அருணா, முல்லை, ராமலக்ஷ்மி , ஆதி , உயிரோடை லாவண்யா , கோமதி அரசு,மங்கை, துளசி கோபால்
*********************************************
Q : Jyothi you connect with the world thorugh blog .. what r the things you learn from the fellow bloggers.
I have now settled as a successful blogger, and freelance writer from a simply and shy home maker four years back. I have learnt and gained a lot from blogging. Many of my co- bloggers helped me, supported me and encouraged me to improve my writing, presenting the issue and learning the technical process in blogging.. I never knew what and how to write four years back. But reading and writing blogs had earned me good name and love from thousands of readers around the world. So I am called as Jyotakka in Telugu blog industry.. Now I am writing for different print media and also giving cookery programmes in various TV channels All this happened only be-cos of my blogging and my friends on net.. So I always say... nothing is impossible if we really are sincere and dedicated .. We can learn a lot from internet just sitting at home with minimum educational qualification..
*********************************
இணையத்தில் வியத்தலுக்குரிய செயல்களைச் செய்யும் ஒவ்வொரு வரையும் பெருமைப்படுத்தி இப்பொன் விருதினை வழங்குகிறேன். இங்கு பதிலளித்தவர்களுக்கும் எனக்கு பதிவுகளில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் என் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இவ் “ வியல் ’* விருதினை வழங்குகிறேன். நேர்மறை எண்ணங்களைப் பரப்ப வாழ்த்துகிறேன். Jyothi you too please accept this viyal award . (viyal )means gold. please spread the positive thoughts.
*******************************
***************************************
• பணிஓய்விற்கு பிறகு இணையத்தில் நுழைந்து பலருக்கும் இலக்கிய இன்பத்தை பகிர்ந்தளிக்கும் சுசீலாம்மா ப்ளாக் பற்றி தனது கருத்தாக கூறுகிறார்கள்.
‘இணையம் தரும் இளம் நண்பர் கூட்டம்...
மீட்டுத் தருகிறது என் இளமை நாட்களை!”
*****************************************
•பதிவர் ரோகிணி
கேள்வி: ப்ரஃபஷனல் வேலையில் இருக்கும் (பல் டாக்டர்) உங்களைப்போன்றவர்கள், வேலை சம்பந்தமான பதிவிடும் போது அதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது?
ப்ரொஃபசனலாக வேலைகள் பற்றி பதிவெழுதும் போது இரண்டு விசயங்கள் ..
நாம் ஒரு நல்ல விசயத்தைச் செய்கிறோம் என்கிற திருப் தியும்
கேள்விகள் எழும்போது அதனை விளக்க நல்ல ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.
எனக்கு தெரிந்தவகையில் சின்சியராக எழுதப்பட்ட உடல்நலம்பற்றிய பதிவுகள் நல்ல வரவேற்பு கிடைக்கிறது மக்களுக்கு நல்ல விசயங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது.
ஆனால் ஒருவிசயம் உண்மை.. எழுதுபவர் அடிக்கடி பதிவிடுபவராக அல்லது பரவலாக அறியப்பட்டவரா இல்லாமல் போனால் பதிவுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில்லை .
எழுதுபவர் மற்றும் பதிவு சாராம்சம் இரண்டும் 50- 50 என்ற வகையில் ஒரு பதிவு அனைவரையும் அடைய வாய்ப்புகள் உள்ளது .
********************************************
ட்ரங்க்பெட்டிய திறந்து கதை சொல்லும் ஹுசைனம்மா
கேள்வி..: நீங்கள் பதிவெழுதுவதைப்பற்றி உங்கள் நண்பர்களிடம் சொல்வீர்களா? என்ன சொல்லுவீர்கள் அது பற்றி? நல்லா கேன்வாஸ் செய்து எத்தனை பேரை எழுத வைத்திருப்பீர்கள்?
என் நண்பர்கள் யாருக்கும் நான் இப்படியொரு பிளாக் எழுதுகிறேன் என்று இதுவரைச் சொல்லவில்லை, ஒரே ஒரு தோழியைத் தவிர (அவ இந்தப் பக்கமே வரமாட்டான்னு நிச்சயமாத் தெரியும்!!). ஆனா, எதிர்பாராத விதமா ஒரு கல்லூரித் தோழன் என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிச்சதுல அது நான்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சுட்டாப்ல!! ஆக்சுவலி, அவர் மனைவிதான் (ஒரே ஒரு முறை பார்த்தது அவரை) பதிவில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களை வைத்து நானாக இருக்குமோ என்று கேட்டாராம்.
என் தங்காச்சி இப்ப பிளாக் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கா - நீயே எழுதும்போது நான் எழுதக்கூடாதான்னு கேக்கிறா!! (வாரிசு அரசியல்!!)
கேள்வி: என்றைக்காச்சும் எழுதுகிற விசயத்தில் குறிப்பிடப்பட்ட ஆள் அதை படிக்க நேர்ந்தால் என்று நீங்க சிந்திப்பதுண்டா.. அனானிமஸா அதாவது புனைப்பெயரில் எழுதுவதே கண்டுபிடிக்கப்படும் போது ..இதை சிந்திச்சுத்தானே ஆகனும்.. அப்ப எழுதுவதில் கவனமெடுத்துப்பீர்களா.
பதில்: நான் பிளாக் எழுதுவது என்னவர் மற்றும் தங்கைகள் குடும்பத்தினருக்குத் தெரியும். நண்பர்களுக்குத்தான் அவ்வளவாகத் தெரியாது. நிச்சயமா நான் எழுதும் விஷயம் இன்றில்லைன்னாலும் என்றாவது ஒருநாள் பிறருக்கும் தெரியவரும்; அன்று, நான் எழுதியதை வாசிப்பவர் குறித்து ஒருவேளை நான் எழுதியிருந்தால், அது அவரைக் காயப்படுத்தக்கூடாது என்றும், இதனால் எங்கள் உறவு/நட்பில் விரிசல் ஏற்படுதல் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டுதான் பிளாக் எழுதவே ஆரம்பித்தேன். எனக்கு வலையுலகத்தைவிட நிஜ உலகம்தான் முக்கியம்!! இதனாலேயே நிறையக் ‘கதைகள்’ என்னால் இன்னும் எழுதப்படாமலேயே இருக்கின்றன!!
*************************************************
பதிவை மறைச்சிட்டாலும் பதிவுகளை வாசிப்பதை விடாத கபீஷ்
கேள்வி : நீங்க பதிவெழுதினால் (சோம்பேறித்தனப்படாமல் உ.த ரேஞ்சுக்கு எழுத முடிந்தால் ) எது பற்றியெல்லாம் எழுத ஆசை? இன்னும் பெண்கள் எழுதவந்தால் நல்லதா ?கெட்டதா? விவசாயம், மதம், ஸிவிக் ஸென்ஸ்
கண்டிப்பா நல்லது.
இப்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் :Manifest your Destiny, by Wayne Dyer(இருக்கிர ஊர்ல லைப்ரரில இருக்கற தமிழ் புக்
எல்லாம் முடிச்சாச்சு அதான் ஆங்கிலம்)
எப்ப ப்ளாக் படிப்பீங்க? எப்ப புக் படிப்பீங்க?
எந்த மூட் ல
?
வெட்டியா இருக்கும்போதெல்லாம் ப்ளாக் படிப்பேன். எப்போ வெட்டியா இருக்கேன்னு கேக்கப்டாது. ப்ளாக் போரடிச்சா புக் வாசிப்பேன்.
********************************************
கேள்வி : விக்னேஷ்வரி ஒருவரியில் ப்ளாக் பத்தி சொல்லுங்கன்னா என்ன சொல்வீங்க ?
”நேரம் திருடும், எண்ணம் பகிரும், நண்பர்கள் குழுமும் அக எழுத்துருக்களின் நம் பக்கம்”
****************************************
கேள்வி: பொதுவான இணையவெளியில் எழுதவந்தபின் அதன் நன்மை தீமைகளை எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்? பயன்பெறுகிறீர்கள்? என்று சொல்லுங்கள் சுமஜ்லா.
பதிவு எழுதும் போது, நம்முடைய எல்லாப்பதிவுகளும் சிறந்த பதிவென கொள்ளமுடியாது. நமக்கே ஓரளவுக்கு புரியும். ஆனாலும், சில நல்ல பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படாத போது சிறு வருத்தம் தான் மனதிற்குள் தோன்றும். உதாரணமாக, அயல்நாட்டு தீபாவளி என்று நான் எழுதிய கவிதையை மிகவும் ரசித்து எழுதினேன். ஏனோ, அது அவ்வளவு வரவேற்பு பெறவில்லை. ஒரு வேளை நான் எழுத வந்த ஆரம்பத்தில் இதை எழுதியதால் யாருக்கும் தெரியவில்லையோ என்னவோ என்று விட்டு விட்டேன். பிறகு அந்த வருட தீபாவளியின் போது இதை மறுபதிப்பு செய்தேன். நான் முதலும் கடைசியுமாக மறுபதிப்பு செய்தது, இது ஒன்று தான். அப்போதும், அவ்வளவாக, இதை யாரும் ரசிக்கவில்லை. நம்முடைய ரசனையும், அடுத்தவருடைய ரசனையும் எப்போதும் ஒன்று போல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.
பொதுவாக, நான் என் வலையில் எழுதுவது, ஆங்காங்கே பல டைரிகளில், பல துண்டு காகிதங்களில் சிதறிக் கிடக்கும் என் ஆக்கங்களை ஒரே இடத்தில் சேர்க்க வேண்டும் என்று தான். சில சமயங்கள், என் வலைப்பூவை பிரைவேட் சர்குலேசனுக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாமா என்று கூட நினைப்பது உண்டு.
இன்னொரு விஷயம், ஓரளவு பதிவுலகைப் புரிந்து கொண்ட பிறகு, நான் பின்னூட்டத்துக்காக மட்டும் எழுதுவதை விட்டு விட்டேன். ஆனாலும், மனதைத் தாக்கி, உள்ளத்தைக் காயப்படுத்தும் விதமாக வரும் பின்னூட்டங்கள் எனக்கு பதிவுலகின் மேல் ஒரு வெறுப்பு ஏற்படுத்தி விட்டது என்னவோ உண்மை தான். சிலருடைய உண்மை முகங்களை அறியக் கண்ட போது, சற்று அதிர்ச்சியாகக் கூட இருந்தது.
பதிவுலகால் நான் பெற்ற பயன், நான் எழுதிய புத்தகம்.. என்னை ஊக்குவித்த, என் எழுத்து பிழையுறும் போது தலையில் கொட்டி, என் எழுத்து இகழேல் என்று நான் கேட்டபோது, என் எழுத்துக்களுக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனம் தந்த என்னருமை நண்பர்கள் நான் சம்பாதித்த சொத்துக்கள். நன்றி நண்பர்களே!
என் பணியின் நிமித்தம் நான் ஆங்கிலத்தில் நிறைய எழுதிக் கொண்டிருக்கின்றேன். என் எழுத்தார்வம் ஓரளவு இதன் மூலம் நிறைவேறி வருவதாலும், நேரமின்மையாலும் நான் பதிவிடுவதில்லை
***************************************
• தீபாகோவிந்த்
இணையத்தில் ப்ளாகின் மூலம் அடைஞ்ச நன்மை பற்றி சொல்லுங்களேன்ப்பா?
பொழுதுபோக்கா ஆரம்பிச்ச ப்ளாக்கை பார்த்து (மக்கள் படிச்சு), "எங்க வலைதளத்துக்காக எழுதறீங்களா" ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. இதுக்கு நல்லதா ஒரு சன்மான தொகையும் கிடைச்சுது. அதுக்கப்புறம் வந்த " பொறி’" தான் - இணையதள சஹாயி ன்னு சொல்லர Virtual Assistance ல் முழுமூச்சோட செயல்பட ஆரம்பிச்சேன்.இன்னைக்கு வருமானம் வர அளவுக்கு எனக்குன்னு ஒரு பாதையை நானே வகுத்துக்கிட்டேன். இது பிளாகரானதாலே தான் எனக்கு சாத்தியம் ஆச்சு.
*****************************
• கேள்வி : புனிதா தற்போது அதிகம் பதிவெழுதலைன்னாலும் விட்டு விலகாமல் இருக்கீங்க.. ப்ளாக் எழுத வந்தது பற்றியும் வலையுலக நட்பு பற்றியும் சொல்லுங்களேன்..
வலையுலகில் எனது பயணம் ஒரு விபத்து ஆனாலும் அழகிய விபத்து.. பல்கலைக்கழக நூலக இணையத்தில் தகவல் சேமிப்பில் ஈடுபட்டிருந்தப்போது பிண்ணனி பாடகி சின்மயியின் வலைப்பக்கம் கண்ணில் பட்டது... அந்தப் பக்கத்தில் இருந்த ஏதோதோ விசையை ஆர்வக்கோளாறில் தட்ட எனக்கென்று ஒரு வலைப்பக்கம் உருவானது... முதலில் ஏதும் புரியவில்லை...ஆனாலும் கவிதை எழுத மட்டுமே இயல்பாய் எழுத வந்தது எனலாம்..இதுவரைக்கும் கவிதை எழுதிய அனுபவமே இல்லாத என்னையும் எழுதத் தூண்டியது இந்த வலையுலகம். வலையுலகில் இதுவரையில் எதை பெற்றேனோ இல்லையோ நிறைய நல்லுள்ளங்களை நட்பாய் பெற்றிருக்கிறேன்..வலையுலக நட்பால் இழந்ததை விட பெற்றது அதிகம்.. அதிலும் முக்கியமாய் வலையுலக நண்பர்கள் என்னுள் ஏற்படுத்தியுள்ள மாற்றம் ..நேசம்... என் வாழ்வில் எல்லை வரை தொடரும்..இவ்வேளையில் இறைவனுக்கு நன்றி... தாயாகி தந்தையுமாய் எனைத் தாங்கி நேசிக்கும் அந்த அன்புள்ளங்களுக்கும் நன்றி.
4 வருட நிறைவை எய்தும் சிறுமுயற்சியின் உரிமையாளர் முத்துலெட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகள். அன்பே சிவம் என்பதை போல் அன்பால் வலையுலகை ஆள்வோம் :)
****************************************
சித்ரா நீங்க ப்ளாக் நிறைய வாசிக்கிறீங்க.. இந்த பதிவுகள் வாசிப்பதால் என்ன நன்மை ? எதாச்சும் கத்துக்கிட்டன்னு சொல்வீங்களா? மீன்ஸ் இது ஒரு நல்ல வாசிப்பனுபவம் இது வாழ்க்கைக்கு எதாச்சும் உதவுதுங்கறமாதிரி.
ஒரே நாளில், "திருக்குறள்" , "பொன்னியின் செல்வன்" , "மங்கையர் மலர்", "குமுதம்", "விகடன்", "பயணக் கட்டுரை" , "நக்கீரன்", "கல்லூரி ஆண்டு மலர்" , "தின மலர்", "சினிமா எக்ஸ்பிரஸ்", "தொழில் நுட்ப மலர்" வாசிப்பதால் என்ன நன்மை? இவற்றில் இருந்து வாழ்க்கைக்கு உதவும் என்கிற விஷயங்கள் என்ன இருக்கிறது? ம்ம்ம்ம்..... ஒரே நாளில், பல தரப்பட்ட பதிவுகள்............ இது ஒரு Variety Show மாதிரி. நல்ல விஷயங்களை எடுத்து கொள்கிறேன் - புதிய தகவல்கள் தெரிந்து கொள்கிறேன் - ஒரு விஷயத்தை குறித்த, பலரது பல்வேறு கருத்துக்களை அறிந்து கொள்கிறேன் - சிறந்த நகைச்சுவைக்கு, மனம் விட்டு சிரிக்கிறேன் - அருமையான கவிஞர்களை , எழுத்தாளர்களை அடையாளம் காண்கிறேன் - தேவை இல்லாத, வேண்டாத விஷயங்களை தவிர்க்கவும் பழகி கொள்கிறேன்.
கேள்வி: எப்படி ? என்று மீண்டும் அவர்களை தொணதொணத்தேன்..
I just focus on the matters that I am interested in. வாசித்து விட்டு புலம்புவதில் அர்த்தம் இல்லையே .... ஒவ்வொருவர் ப்லாக்கும் அவங்க territory. அவர்களுக்கு சரி எனப்படும் விஷயங்களை எழுத்தில் கொண்டு வருகிறார்கள் . அதை வாசிப்பதும் ஒதுக்குவதும் , நமது உரிமை தானே! யாரும் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த முடியாதே!
********************************************
அன்புடன் அருணா
கேள்வி : பதிவுகளை எழுதுவதற்கு உங்களுக்கு எது போன்ற நேரம் வசதிப்படுகிறது? நீங்கள் பதிவெழுதுவதை உங்கள் குழ்ந்தைகள் வாசிப்பார்களா? அவர்களுடைய பாராட்டுதல்களைப்பற்றி பகிருங்களேன்..
எழுதுவது அநேகமாக இரவுகளில்தான்..கொஞ்சம் அமைதியான நேரமாதலால்!!!!
குழந்தைகள் நான் ப்ளாக் பற்றி ஏதாவது வாயைத் திறந்தாலே "போச்சுரா"என்று கத்துவார்கள்.பெட்டர் ஹாஃப் "ம்ம்ம் ஆரம்பிச்சாச்சா!" அப்படீன்னு அலுத்துக்குவாங்க! ஏதாவது ஒன்றைப் பார்த்து அட நல்லாருக்கே அப்படீன்னு சொன்னாலே உங்க ப்ளாக்லே போட்டுருவீங்களே அப்படீன்னு சொல்லிக் கலாய்ச்சிருவாங்க!இதுலே பாராட்டுக்கு எங்கே போறது????
நான் : அங்கயும் அதானா கதை. பட் .. அவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் அவங்க நம்மை கேலி செய்வதுமே ஒரு ஆரோக்கியமான விசயம் தானே வெல்டன் **********************************************
சித்திரக்கூடம் முல்லை அவர்களிடம் கேள்வி
கேள்வி : நீங்கள் பதிவெழுதுவதைப்பற்றி உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து சிலர் எழுதவந்ததையும் நான் அறிவேன். ப்ளாக் உலகில் எழுதுவதற்கு எப்படி அவர்களை ஊக்கப்படுத்துவீர்கள்? பதிவுகள் எழுதத்தொடங்கியபின் உங்கள் வாசிப்பு தளம் மாறுபட்டதாக மாறியிருந்தால் அதைனைப்பற்றியும் பகிர்ந்துகொள்ளுங்களேன்..
முதலில், ஐந்தாம் வருடத்திற்கு வாழ்த்துகள் முத்து.
ப்ளாக் உலகில் எழுதுவதற்கு எப்படி அவர்களை ஊக்கப்படுத்துவீர்கள்?
நல்லவேளை, இந்தக் கேள்வியை என்கிட்டே கேட்டீங்க...(என்கிட்டே கேக்கிறதுக்கு பதில் அவங்கிட்டே கேட்டிருந்தா?! ) அவங்களும் இதைப் படிக்க சான்ஸ் இருக்கிறதாலே சீன் போடாம நானே உண்மைய சொல்றேன்..:-) .என் ப்லாக் முகவரியை கொடுத்து ’படிங்க படிங்க’ன்னு டார்ச்சர் பண்ணுவேன்..அப்புறம் கமெண்ட் போடுங்கன்னு இன்னொரு டார்ச்சர். கொஞ்ச நாள்லே தாங்க முடியாம அவங்களே ப்லாக்கிங் ஆரம்பிச்சுட்டாங்க! இன்னும் ஒருசிலர் இருக்காங்க...என்னோட ப்லாக்கை ஓபன் பண்ணினாலே Hit எடுத்துக்கிட்டு ஓடி வருவாங்க...:-)
மத்தபடி, தொடர்பதிவுக்கு அழைக்கிறதுதான் ஊக்கம்னு தோணுது.
பதிவுகள் எழுதத்தொடங்கியபின் உங்கள் வாசிப்பு தளம் மாறுபட்டதாக மாறியிருந்தால் அதைனைப்பற்றியும் பகிர்ந்துகொள்ளுங்களேன்..
நீங்க கேட்டிருக்கிற வாசிப்பு தளம்...வாசிக்கறதெல்லாம்...ஹிஹி-தான்.
அதுவும் இல்லாம, ஆன்லைன்லே படிச்சு படிச்சு...இப்போல்லாம் அதிகபட்சமா மூணு ஸ்க்ரோல்தான்.(சில பதிவுகள்/இடுகைகள் விதிவிலக்கு.) அதைத்தாண்டி வாசிக்க எனக்கு பொறுமை இருக்கிறதில்லை. இந்த அழகுலே புத்தகங்களை எல்லாம்...ஹூம்... ஆனா, எப்போ நான் சிஸ்டம் முன்னாடி இருந்தாலும் தமிழ்மணத்திற்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. அது இல்லேன்னா, என்னோட கண்ணாடியையே இழந்த மாதிரி இருக்கும் - தட்டு தடுமாறிதான் வேலையே நடக்கும்.
ஆனா, என்ன மாறியிருக்குன்னா...முன்னெல்லாம், ஆன்லைனிலே ரொம்ப வெளிப்படுத்திக்க மாட்டேன்.ஒரு சைலனட் அப்சர்வர்.பின்னூட்டங்கள் இடுவது கூட தவிர்க்க இயலாத நேரங்களில்தான். ஆனா, இப்போ என்னோட கருத்துகளை, எண்ணங்களை வெளிப்படுத்தறேன். படிச்சதை பகிர்ந்துக்கறேன். பதிவுலகம் எனக்கு அறிமுகமானப்போ (2005-2006)பெரும்பாலும் கவிதை, கதைன்னுதான் நிறைய பேரு எழுதுவாங்க. அப்படிதான் ப்லாக்லே எழுதணுமோன்னு லேசா தயக்கம் இருந்தது உண்மை. அந்த தயக்கத்தை உடைச்சதுலே பப்புவுக்கு முக்கிய பங்கிருக்கு.
******************************
முத்துச்சரம் ராமலக்ஷ்மியிடம் கேள்வி: நீங்க... கவிதையிலும் கதைகளிலும் ஒருவித நேர்மறை எண்ணங்களை விதைக்கறீங்களே.(பல பின்னூட்டங்களிலு ம் கூட ) அந்த விதைகளின் பலன்கள் எப்படி இருக்குமென்று நினைக்கிறீர்கள்?
பொதுவாக பார்க்கையில் , ஒரு ஊரில் இருக்கும் ஆயிரம் பேரில் ஒருவன் தவறானவனாக இருந்தால் அவன் செய்தியாகிறான். நல்லவராய் மற்ற 999 பேரும் இருந்தாலும் கவனிக்கப் படாமல்தான் போகின்றனர். உலக இயல்பு இது. தினம் நாம் எதிர் கொள்ளும் செய்திகள் பெரும்பாலும் எதிர்மறையாகவே உள்ளன. அவை ஒரு அலையாக எதிர்மறை செயல்பாட்டுக்கும் வித்திடுகின்றன. நேர்மறை எழுத்தால் மட்டும் உலகம் திருந்தி விடாது என்பது உண்மை என்றாலும் அதன் தேவையும் அவசியமானது. பெருக்கெடுத்தபடி இருக்கும் எதிர்மறை அலைகளுக்கு அணை போட சிறு சிறு துளியாக (அவை ஒன்று சேர்ந்து பெருவெள்ளமாகும் எனும் நம்பிக்கையோடு) நேர்மறை எண்ணங்களை எழுத்தில் விதைக்கும் வெகு சிலரில் ஒருவராக இருக்க விருப்பம்.
கேள்வி: நேர்மறை எண்ணங்களுக்கு உங்களுக்கு ரோல் மாடல் யாரு?
அம்மாவும் கணவரும்
**************************************
உயிரோடை லாவண்யா
ப்ளாக் பற்றி ஒரு வரியில் சொல்லுங்க ..
ப்ளாக் கடவுள் மாதிரி, நம்பி நல்லது செய்யனும் நினைக்கிறவங்களுக்கு நல்லது மட்டும் தான் செய்யும்.
*********************************************
பெயரில் ஆதி வலையுலகுக்கு புதுசு வலைப்பூ பற்றி என்ன சொல்றாங்கன்னா
அவரவர் எழுத்துத் திறமையை வெளிப்படுத்தும்
பலதரப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளும்
தனிப்பட்ட முறையில் ஆத்ம திருப்தி தரும்
ஒரு கருவி (தளம்)”
********************************************
திருமதி பக்கங்கள் கோமதி அரசு
வாழ்க்கைக் கல்வியை கற்றுக் கொடுத்த எனக்கு வலைக் கல்வியை கற்றுக் கொடுத்தாய். அதனால் பெற்ற நன்மைகள் மனமகிழ்ச்சி,அன்பான வலை உலக நட்புகள்.
என் அனுபவங்களையும்,பகிர்ந்து கொள்ள முடிகிறது.மற்றவர்களிடம் உள்ள அனுபவங்களையும்,படிக்க முடிகிறது,எத்தனை திறமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று வியந்து போகிறேன்.
********************************************
பதிவர் மங்கை
கேள்வி:
சமூகப்பிரச்சனைகளை உடனுக்குடன் அலசி ஆராயும் வேகத்தில் ப்ளாக் உலகத்தில் எல்லாருமே அடுத்தவரை சுட்டுவிரல் சுட்டுவது போல சிலசமயம் எழுதுவதைப்பற்றி என்ன சொல்றீங்க..? அவர்களை மட்டும் அறிவு ஜீவிகளாக பாவித்து சில சமயம் எழுதும்போது சமூகப்பிரச்சனை பேசப்படுதா அவர்க்ளுடைய அறிவார்ந்த மனம் மட்டும் வெளிப்படுகிறதா என்று கூட
தோன்றும் அளவுக்கு?
ஒரு முறை கிருஷ்ண்ர் யுதிர்ஷ்டரை அழைத்து உங்களை விட மோசமான எண்ணங்களையுடைய ஒருவரை தேடிப்பார்த்து அழைத்து வரமாறு கூறினார். துரியோதனனைப் பார்த்து உன்னை விட புத்திசாலியான ஒரு மன்னனைத் தேடி கண்டுபிடித்து அழைத்து வரவும் என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார். சிறுது நேரத்தில் யுதிஷ்டர் திரும்பி வந்து, என்னை விட மோசமான எண்ணங்களையுடைவர் யாரும் இல்லை என்று கூறினார். துரியோதனனோ என்னை விட புத்திசாலியான மன்னன் இந்த உலகத்தில் இல்லை என்று கூறீனான். தெளிவான மனநிலையில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை ஆராய்வதால் அதைபற்றிய ஒரு விழிப்புணர்வு இருக்கும்.
என்னைப் பொருத்த வரையில், என்னைக் கடந்து செல்லும் நிகழ்வுகளை எழுதும் போது அந்தப் பிரச்சனைக்குண்டான தீர்வை எழுதி இருக்கிறேனா என்று பார்த்தால், பல முறை பிரச்சனைகளை மட்டுமே ஒரு செய்தியாக எழுதியிருக்கிறேன் என்று சொல்லலாம். நான் பகிர்ந்து கொண்ட விஷ்யங்கள் பெரும்பாலும் வெளியே வராத, அல்லது என் தொழிலில் நான் எதிர்கொள்ளும் சவால்களை சார்ந்தே இருக்கும்.
'சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராயும் வேகத்தில்' என்று நீங்க குறிபிட்டிருக்கீங்க... அப்படி உண்மையான நோக்கத்தோடு காரண காரணிகளை அலசி ஆராய்ந்தால் மற்றவர்களுக்கு அது ஒரு நல்ல விழிப்புணர்வுப் பதிவாக இருக்கும். ஆராய்ந்து எழுதும் போது இன்னும் பல விஷயங்கள் வெளியே வரும். அதுவும் ஒரு இச்சமுதாயத்திற்கு தேவையான ஒன்று தான்.
சமுதாய பிரச்சனைகளை எழுதும் போது அது சார்ந்த கருத்துக்கள் பெரும்பாலும் அவர்களின் அனுபவம், சூழ்நிலை, கேள்விஞானம் போன்றவைகளை பொருத்து மாறுபடும். நீங்கள் சொன்னது போல் தங்களை அறிவுஜீவிகளாக காட்டிக் கொள்பவர்களிடம் ஒரு தன்னலம் மட்டுமே இருக்கும். அங்கே சமுதாய நோக்கோ, உள்ளுணர்வோ இருக்காது. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். சமுதாய பிரச்சனைகள் மட்டுமல்ல, எதிலும் தங்களின் கருத்துக்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும், தங்களின் எண்ணங்களும் அறிவும் மற்றவர்களைக் காட்டிலும் உயர்வானது என்று காட்டிக்கொள்ளும் ஆர்வத்துடன் எழுததத்தான் செய்கிறார்கள். இவர்களை புறந்தள்ளிவிட்டு போக வேண்டியது தான். அந்தப் பிரச்சனைக்குரிய சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்ளும் போது, அவர்களின் மனநிலை, அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை பார்த்தால் புரிந்து விடும்.
Many of us believe that wrongs aren't wrong if it's done by nice people like ourselves.
****************************************
வலையுலகில் எனக்கு ஒரு ரோல் மாடல் துளசி அவங்க என்ன சொல்றாங்கன்னா..
“நம்ம கயலுக்கு இப்ப நாலு வயசு முடிஞ்சு அஞ்சு ஆரம்பிக்குதுல்லே......... நம்ம வாழ்த்து(க்)களைச் சொல்லாம இருக்க முடியுமா? இனிய வாழ்த்து(க்)கள் உங்கள் சிறு முயற்சிக்கு:-)
இந்த ப்ளொக் உலகம் மட்டும் இல்லைன்னா இப்படி உலகத்துலே எங்கெங்கோ இருக்கும் நம் மக்கள்ஸ் கிட்டே ஒரு தொடர்பும் நட்புணர்வும் வந்துருக்குமா?
வலை தந்த கொடைன்னு சொல்லிக்கலாம். அந்தக் காலத்துலே பேனா நண்பர்கள்ன்னு நட்பு வச்சுருந்தோம். ஆடிக்கொன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு கடிதம் வரும். நாமும் பதில் போட அதே அமாவாசைக்குக் காத்திருப்போம். இப்போ பாருங்க.......... என்ன கொழம்பு வச்சேன்னு ஒரு பதிவு போட்டாப் போதும். அட! இந்தக் கொழம்பு வச்சு ரொம்ப நாளாச்சேன்னு நாமும் மறுநாளைக்கு வச்சுறமாட்டோமா?
எல்லாமே உடனுக்குடன் வலைப்பதிவு மூலமாப் பதிஞ்சு பதில் வந்து, பதிலுக்குப் பதில் போட்டுன்னு......எந்நேரமும் படுபிஸியாக் கிடக்கோம். லோகமந்தா ஸ்பீடே காதா? அன்னி ஃபாஸ்டே பாஸ்ட்டு:-))))
நம்ம கருத்துக்கள், அனுபவம், இன்னபிற ஐட்டங்கள் எல்லாத்தையும் சேமிச்சு வச்சுக்கும் கிடங்கு ஒன்னு இருக்கட்டுமேன்னு ஆரம்பிச்சதுதான் இந்த வலைப்பதிவுகள். முக்கியமா என்னப்போல தொலைதூர தேசங்களில் வசிப்பவர்களுக்கு தனிமை உணர்ச்சி எல்லாம் போயே போயிந்தி. இட்ஸ் கான்!!
முக்கியமாக இப்பெல்லாம் நானே (!!!!) எதாவது பயணம் போகணுமுன்னா நம்ம மக்கள்ஸ் என்ன எழுதி இருக்காங்கன்னு பார்த்துவச்சு 'ஹோம் ஒர்க்' செஞ்சுக்கிட்டுபோறேன்னா பாருங்களேன்!
முந்தாநாள் என்னன்னா........... 'மெக்டொனால்ட்ஸ்'லே குளிர் பானம் ஒன்னு வாங்கிக்கிட்டு உறிஞ்சிக் குடிக்கும் முன் ஸ்ட்ராவை உள்ளே உத்து உத்துப் பார்த்தேன். ஏன்? அதுக்கு முதல்நாள்தானே இன்னொரு வலைத்தோழி 'ஸ்ட்ராவுக்குள்ளே பூச்சி முட்டை போட்டு வச்சுருக்கு(ம்) கவனமாப் பார்த்துட்டுக் குடிங்க மக்களே'ன்னு சொல்லிட்டுப் போனாங்க!
இந்த ப்ளொக் நட்பு மட்டும் இல்லைன்னா நான் அப்படியே குடிச்சுருக்கமாட்டேனா???
என்னைப் பொறுத்தவரை இந்த ப்ளொக்கர் என்ற பதவியும் பட்டமும் நல்லாத்தான் இருக்கு.
உலகெங்கும் நமக்கு நண்பர்கள் கிடைச்சுருக்காங்க. நட்பைப் போற்றுவோம். பாராட்டுவோம். நல்ல நண்பர்களா இருப்போம். இப்போதைக்கு இதைவிட வேறென்ன வேனும்?
வாழ்க பதிவுலகம்! வளர்க நட்பு!!”
-----------------------------------------------------------------
குறிப்பு : வியலுக்கான பொருள் கீழ்கண்ட இடங்களிலிருந்து பெறப்பட்டது
நன்றி..
1. வியல் என்ற சொல் பொன்னையும் குறிக்கும். வியலன்>வியாழன் என்பதும் பொன்னிற Jupiter யைக் குறிப்பது தான்.
2.வியல் - அகலம் : காடு : பெருமை : விரிவு : மிகுதி : பொன் : மரத்தட்டு : பலதிறப்படுகை
November 2, 2010
நாங்களும் பேட்டி கொடுத்திருக்கோம்ல!!!
கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் முத்துலெட்சுமி-கயல்விழி
பேச்சாற்றலில் புகழ்பெற்ற நம் முத்துலெட்சுமி தான் இன்றைக்கு நம்முடன் கஞ்சி குடிக்க வந்துள்ளார். அவரை நானும் அணிலும் மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்கள் கேள்விகளை கேட்டு குடைந்து இருக்கிறார்கள், பார்க்கலாம் முத்து கேள்விகளுக்கு எப்படி குறைந்த வார்த்தைகளில் பதில் சொல்லுகிறார் என்று…:) வாயை புடுங்கற ரவுண்டு :- கவிதா:- வாங்க முத்து, எப்படி இருக்கீங்க..?! உங்கள் பதிவுகளை படித்த போது கவனித்தேன், பதிவெழுத வந்த மிக குறுகிய காலத்திலேயே நீங்கள் தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆகி இருக்கிறீர்கள். இதன் ரகசியம் என்ன? (இப்படி ஒரு கேள்வியை நாகை சிவாவிற்கு பிறகு உங்களிடம் மட்டுமே கேட்கிறேன்)
வீரமங்கை கவிதாவிற்கு வணக்கம். இருங்க கொஞ்சம் கஞ்சி குடிச்சிட்டுப்பேசறேன். எனக்கு கேப்பக்கஞ்சி ரொம்பப் பிடிக்கும். அதுவும் எங்கம்மா அதுல கோதுமை, பாதாம் இன்னுமெல்லாமோ போட்டு ஸ்பெஷலா அரைச்சுத் தருவாங்க.. க்க்குக்கும் . இந்த நட்சத்திர மேட்டர் பத்தி எனக்கே இப்பத்தான் தெரியும். இத்தனை குறைந்தகாலத்தில் யாரும் வரலையா என்ன? ஆனா எனக்கு என்னவோ லேட்டாத்தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சதா உணர்வு.. J நான் அடிக்கடி சொல்லுவேன் நான் எழுத வந்தபோது நாகை சிவா நட்சத்திரமாகப்பார்த்தேன். எழுத ஆரம்பித்த உடனேயே எப்படா நம்மளை நட்சத்திரமாக்கூப்பிடுவாங்கன்னு இருந்தேன்.
தெகாஜி :- நீங்கள் வலைப்பதிவுகளுக்கு வந்ததின் மூலமா ஏதாவது நன்மைகள் அடைந்திருக்கிறதா உணரச் செய்ய முடிகிறதா? அப்படியெனில், அது போன்றவைகளில்னு கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா, ப்ளீஸ்?
முன் காலத்தில் பேனா நட்பு பேசப்பட்டது போலத்தான். முகம் தெரியாத ஆனால் மிக பலநாட்களாக பழகிய உணர்வை ஒவ்வொரு பதிவரிடமும் காண்கிறோம். நட்புகள் மிகப்பெரிய நன்மை. இதுதவிர நான் எத்தனையோ கற்றிருக்கிறேன். இணையத்தின் பயனை யாராலும் முற்றிலும் அனுபவிக்கமுடியாது. அது ஒரு கடல் போன்றது. அதில் சில துளிகளை எனக்கு புரியவைத்தது இந்த பதிவர் நட்புக்கள் தான். அதன் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் என் நண்பர்களுக்கும் நான் உதவ முடிகிறது. கற்றுக்கொள்வது என்பது தான் எனக்கு ஒரு போதை. அதற்கு பெருந்தீனி இங்கே இருக்கிறது. சர்வேசன் புகைப்பட ப்போட்டி எனக்கே என்னுடைய புகைப்படக்கலை ஆர்வத்தைக்காட்டியது. அன்புடன் குழும காட்சிக்கவிதை போட்டி ஒரு புதிய முயற்சி. இன்றையபெற்றோர்களும் அவர்களின் குழந்தைவளர்ப்பும் பற்றி எழுதும்போதும் கற்றுக்கொள்கிறேன். தற்போது "நான் ஆதவன்" என்கிற பதிவரின் பதிவில் அனிமேசன்களைப் பார்த்து அவர் உதவியுடன் சில வரைதலை பழகிவருகிறேன். முன்பே சொன்னதுபோல என் கோப உணர்வை குறைக்கவும் உதவி இருக்கிறது... ஒவ்வொரு வரின் நியாயம் படிக்கும் போது பலவிசயங்கள் புரியவந்திருக்கிறது.
சிபி :- மாயவரத்துல பிறந்தீங்க, மத்த ஊரையெல்லாம் கூட சொந்த ஊர் போல பாவிக்கிறீங்களே எப்படி?
அந்த ஊரெல்லாம் சண்டைக்கும் வராது அது எப்படி நீ சொல்லலாம்ன்னு அந்த தைரியம் தான்..:) (ஊரைப்பற்றிய ) இதுக்கு ஒரு தனிபதிவே போட்டிருக்கேன் . என் மாமனாரைப்பற்றி எழுதி இருக்கிறேன். இன்னும் என் சொந்த ஊராக இந்தியாவில் இருக்கிற ஊர்களைத்தான் சொல்கிறேன் என்பதில் தான் வருத்தம் எனக்கு. யாதும் ஊரே யாவரும் கேளீர் .
சென்ஷி :- பதிவு எழுதனும்னு முடிவு செஞ்சப்புறம் எதுக்கு இப்படி ஒரு சமூக அக்கறை பதிவு? ரொம்ப நல்லகேள்வி..இந்த பதிவை அடிக்கடி நீயே மீள்வாசிப்புக் கொண்டுவருவது பெருமைப்படவேண்டிய விசயம். எனக்கு வகைகள் மேகத்தில் செய்திவிமர்சனம் என்பதற்கு ஒன்றிரண்டாவது தேறினால் பரவாயில்லையே என்று நினைத்தபோது கிடைத்த பதிவு இது .
முல்லை : புத்தகங்கள் படிக்கும் ஆர்வமுண்டா, சமீபத்தில் (கடந்த மூன்று மாதங்களுக்குள்) படித்த புத்தகம் எது?
புத்தகங்கள் படிப்பது எக்கசக்கமான ஆர்வம் உண்டு. இப்போது இணையத்தில் படிப்பதால் குறைந்திருக்கிறது என்றாலும். தமிழ்சங்கத்துல இருந்து கணவர் புத்தகங்களை எடுத்து வந்து படிக்கத்தருவார்கள் . சமீபத்தில் படிச்சதுன்னா தென்கச்சியின் சுவையான தகவல்கள் 100 புத்தகம் சொல்லலாம். சிவசங்கரியின் நெருஞ்சிமுள்.. இப்ப படித்துக்கொண்டிருப்பது சத்தியஞானசபை பற்றிய புத்தகம். வள்ளலாரின் சபை பற்றிய விவரங்கள் இருக்கிறது.
கவிதா: மெளனம் என்ற வார்த்தையின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? அதனை நீங்கள் ரசித்து இருக்கிறீர்களா?
ம் தெரியும் அதன் வலிமையைத் தாங்கும் சக்தி எனக்கு இருப்பதாக தெரியவில்லை. எங்கம்மா வாரம் ஒரு நாள் மௌனவிரதம் இருப்பார்கள். அவர்கள் மெடிட்டேசன் மற்றும் பல பயிற்சிகள் மேற்கொள்வதைப்போல இதுவும் ஒரு வித பயிற்சி தான் என்பார்கள். அன்று சக்தி சேமிக்கப்படுகிறது . நானும் பலநாட்களாக அப்படி இருக்க முயற்சித்தாலும் அதற்கு வாய்ப்பு அமையவில்லை. பொதுவாக அன்றைய நாட்களில் ஜீன்ஸ் பட அம்மா மாதிரி உம் கொட்டுதலும் கூடாது. எழுதிக்காமித்தலும் கூடாது என்பார்கள். மௌனம் என்றால் மனமும் கூட மௌனமாக இருக்கவேண்டும். நான் ஏறக்குறைய மௌனம் தான் இருக்கிறேன். குழந்தைகள் கணவர் பள்ளிக்குப் போனபின் வீடு அமைதியாகத்தான் இருக்கும். நானென்ன தனியாகவா பேசிக்கமுடியும். வெறும் டைப்பிங்க் தான். ஆனால் அதன் மூலம் நான் பேசிவிடுவதால் அதை முழு மௌனமாகக் கொள்ள முடியாது. சும்மா இருப்பது மிக பெரிய தவம். அதனை செய்யுமளவுக்கு நான் பக்குவி ஆகலை.
G3 : ப்ளாக் உலகமே உங்களை முத்து'அக்கான்னு கூப்பிடுதே.. நீங்க ஏன் உங்க ஞாபகமா ப்ளாக் உலக மக்களு்க்கு ஆளுக்கொரு முத்து கொடுக்க கூடாது? (உங்க அன்பு அளவுக்கு முத்து சைஸ் இருந்தா போதும், ஒரிஜினல் முத்து ஒன்லி அக்ஸப்டட்)
ஜி3 என் அன்பு அளவுக்குன்னு நீ சொல்லிட்டதால நீயே எனக்கு ஒரு சான்ஸ் குடுத்துட்ட.. அந்த அளவுக்கு ஒரிஜினல் முத்து எங்காவது உருவாகினால் அது செய்தியில் வந்தால் நான் எல்லாருக்கும் குடுக்க சம்மதமே.. ( ஹப்பாடா என் வீட்டுக்காரங்க பர்ஸ் தப்பிச்சுச்சு)
ஜியா : நீங்க ஏன் லட்சுமி, முத்துலட்சுமி, கயல்விழி முத்துலட்சுமின்னு ஒவ்வொரு அவதாரமா எடுத்துட்டு வர்றீங்க? இடைக்கால லட்சுமிகள், முத்துலட்சுமிகளிடமிருந்து தனித்து நிக்கனும்னு கயல்விழினு முன்னால போட்டுக்கிட்டீங்க. இன்னொரு கயல்விழி முத்துலட்சுமின்னு வேற யாராவது வந்தா, என்ன பேரு வச்சுக்குவீங்க? ஐயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் மாதிரி, தில்லி, சாந்த்னி சவுக்னு அட்ரஸ அட்டாச் பண்ணிப்பீங்களா?
இனி பெயரை மாற்றமாட்டேன் என்று நினைக்கிறேன்..ஜி...:)
முல்லை:- பேச்சுப் போட்டிகளில்/விவாத/பட்டிமன்றங்களில் ஆர்வமுடன் பங்கேற்றதுண்டா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அல்லது அதையும் தாண்டி பொது மேடைகளில்? சுவையான நிகழ்வுகள்?
இல்லவே இல்லைப்பா... நான் போட்டிகளில் கலந்துகொண்டதே இல்லை.. இங்க வந்தப்பறம் தான் ஒரு முறை சிந்தாநதியின் விவாதப்போட்டியில் கலந்துகிட்டேன். மத்தபடி நான் என் குழுவில் பேசிக்கிட்டே இருப்பேன் அதாவது ஜாலியா அரட்டையா... அவ்வளவுதான் மேடை ஏறுரதுங்கறது என்னப் பொருத்தவரை பயங்கரமான விசயம். ஒரே ஒரு முறை ஒரு நாடகத்திற்கு பின்னிருந்து குரல் கொடுக்கவேண்டும். காட்சி பற்றிய விவரங்களுக்கு. அதற்கும் கூட நான் மேடையின் மறைவான இடத்தில் மைக்கை வைத்து தான் பேசினேன்.. :)
சென்ஷி :- புதிய பதிவர்களை எப்படி ஊக்குவிக்காலம்னு நீங்க நினைக்கறீங்க..?! புதியபதிவர்களை எப்பவும் போல பின்னூட்டம் போட்டுத்தான் ... அதே சமயம் வித்தியாசமான முயற்சிகளைஅவங்க செய்கிற போது அவங்களைப்பற்றி நம் நண்பர்களுக்கும் சொல்லி படிக்கத் தூண்டுவது மேலும் நன்மை தரும். புதுபதிவர்களுக்கு தனிமடலிட்டு அந்த வித்தியாசமான முயற்சியை தொடரும்படி கேட்டுக்கொள்ளலாம்.. அவர்களின் தனித்திறமையை பாராட்டலாம்.. ஒவ்வொரு மனிதனுக்கும் ஊக்கம் என்பது தன்னுள்ளே இருந்து வருவதைவிட பாராட்டாக வருவது பலன் தரும்
ஜியா : எல்லாத்துக்கிட்டையும் கேள்வி கேக்குற கவிதா+அனிதா உங்க கைல மாட்டுனா, நறுக்குன்னு நாலு கேள்வி கேக்கனும்? என்ன கேப்பீங்க?? ;))
நாகேஷ் மாதிரி இல்லை எனக்கு கேள்வியே அதிகம் கேக்கத்தெரியாது. யாரவது வந்து என்னிடம் எங்க வீட்டுக்கு வாடகைக்கு ஆள் வேணும் தெரிஞ்சால் சொல்லுங்கன்னு சொல்லி இருப்பாங்க.. சரின்னுடுவேன். தவிர .. எத்தனை வாடகை .. என்ன லீஸ் எதிர்பார்க்கறீங்களான்னு அவங்களைக் கேட்டு தெரிஞ்சு வச்சிக்க எல்லாம் தெரியாது. ஒரு கேள்வியே கேக்கத்தெரியாத என்னை அதுவும் நறுக்குன்னு வேற .... நாலு கேள்வியா.. ? சரி ஒன்னே ஒன்னு தான்... நீங்க அந்நியன் மாதிரி ஸ்பிலிட் பெர்சானலிட்டியா உண்மையில்??
ராப் : .சில ஆண்கள், ஒரு வரம்பையும் மீறி பெண்களை பொதுமைப்படுத்தி கீழ்த்தரமான நக்கலில் இறங்கறாங்களே அதப் பார்த்தா ஏதாவது தோனுமா உங்களுக்கு? சில என்று நீயே சொல்லிவிட்டாய்.. தப்பித்துக்கொண்டாய் இல்லாவிட்டால் அதுக்கு ஒரு பெரிய கும்பலே ஓடிவந்திருப்பார்கள்.(பதிவுகளில் தானே கேட்டே) நிச்சயமாக காது மடல் சூடாகி கோவம் வரும். எழுந்து போய் தண்ணீர் குடிச்சிட்டு வந்து அடுத்த பதிவுக்கு போயிடுவேன். நாமும் பொதுமைப்படுத்தி பேசினால் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லையே.. நம்மால் முடிந்தது அடுத்த ஜெனரேசனில் அப்படி எண்ணம் கொள்ளாமல் பிள்ளைகளை வளர்ப்பது தான்.
ராயல் ராம் : - பேசமா இருக்கிறது? அமைதியா இருக்கிறது? சும்மா இருக்கிறது? சத்தம் போடாமே இருக்கிறது? தொணதொணக்காமே இருக்கிறது? இப்பிடியெல்லாம் யாராவது சொல்லிருக்காங்களா? அப்பிடின்னா என்னான்னு அர்த்தம் தெரியுமா??
அதெல்லாம் எங்க வாத்தியாருங்க டீச்சருங்க சொல்லி இருக்காங்க.. ஒரே ஒரு ப்ரண்ட் மட்டும் உன் வாயடைக்கறமாதிரி ஒருத்தன் புருசனா வரனும்டின்னு சொல்லி இருக்கா... ஆனா அவங்க ஆபீஸ் வேலையா எதாச்சும் இருக்கறப்ப மட்டும் தான் ... சொல்வாங்க.. கொஞ்ச நேரம் பேசாம இருன்னு..
சிபி : மொக்கை எதிர்ப்பு நிலைல இருந்த நீங்க எப்ப மொக்கை ஆதரவு நிலைக்கு வந்தீங்க? ஏன்?
மொக்கை எதிர்ப்பு நிலையில் இருந்ததாக நினைவில்லை சிபி. என் பதிவில் நீங்க டீ குடித்து நடத்திய பின்னூட்டக் கும்மியை நிறுத்த சொன்னதால் சொல்கிறீர்கள் போல. அதற்கு பதில் போட்டு மாளவில்லை என்பதால் சொன்னது அது . நான் மற்றவர்கள் பதிவில் போய் கும்மிப்பின்னூட்டங்கள் போடுவதில் மறுப்பேதும் இல்லை.
மங்கை:- வட இந்தியாவில் உள்ள மக்களின் கண்ணோட்டத்திற்கும், தென் இந்தியாவில் உள்ள மக்களின் கண்ணோட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்கிறீர்களா?
நான் கவனித்தவரை இங்கே குழந்தைகளை மிகத் தன்னம்பிக்கையோடு வளர்கிறார்கள். அவர்களும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் செய்கிறார்கள். நகரங்களில் எல்லாமே ஒரு வித எட்டி நின்று புன்னகைத்து சுதந்திரமாக இருக்கவிடும் பண்பு இருக்கிறதோ என்னவோ.. நான் வளர்ந்த சிறு ஊருக்கு இந்த மெட்ரோ நகரம் மிக வித்தியாசமானது தான்.
ஜியா : கூட சில நண்பர்கள் இருந்தாலே எங்களால எழுத முடியறதில்ல... ஆனா, வீட்ல குட்டீஸ வச்சிக்கிட்டே, சிறு முயற்சி, புகைப்படம்னு தொடர்ந்து கலந்துக்கட்டி அடிக்கறீங்களே? (இப்பவும் அப்படித்தானே எழுதிட்டு இருக்கீங்க? ஏன்னா, நான் பதிவு பக்கம் வந்து லைட்டா ஒரு ஆறு மாசம் ஆகுது:)) அது எப்படி முடியுது?
சிலசமயம் குழந்தைகளின் குறும்புகள் ரசிக்கும்படியே இருக்கும். சிலசமயம் கோவம் வந்து நான் அதை கொட்டினால் அவர்களுக்கு அது சங்கடமாகி போகும்.. இங்கே எழுத உட்கார்ந்தால் அல்லது படிக்க உட்கார்ந்தால் வேறு உலகத்தில் நுழைந்ததுபோலாகி அவை கூலாகிவிடும். இதனால் நன்மைதானே.
கவிதா: ஒரு பெண் தன் கணவர், குழந்தைகளின் விருப்பத்திற்கும், விருப்பத்தை கேட்டும் நடந்து கொளவ்து பெண் அடிமைத்தனம் அல்லது அந்த பெண் அவர்களை சார்ந்து இருக்கிறாள் என்று சொல்லிவிட முடியுமா?
இருபக்கமும் கேட்டு கலந்தாலோசித்து நடக்கும் பட்சத்தில் அது ஒரு அழகான விசயம். பெண் மட்டும் கேட்டு நடந்துகொள்கிறாள் என்றால் அவளோட அன்பும் , அட்ஜஸ்ட் செய்து போகிற தன்மையும் தெரியவருகிறது. ஆனால் அப்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று கட்டளை இருந்தால் அங்கே பெண் அடிமைத்தனம் இருக்கின்றதோ என்று தோன்றுகிறது..
ரவுண்டு கட்டி கேட்ட கேள்விகள் கவிதா : உங்கள் தாத்தாவிடம் நீங்களும் நாங்களும் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு விஷயம்?
விடாத கடவுள் சாதனை..... எல்லோரிடத்திலும் கனிவு
ராப் : .என்னைய பார்த்தா அடுத்த நிமிஷம் என்ன கேப்பீங்க? என் கையால செய்த பிரியாணிய சாப்பிடறயா இல்லன்னா வரியா சரவணாலயோ ஆனந்தபவன்லயோ போய் சாப்பிட்டுட்டுவரலாம்ன்னு நீ என்ன சொல்வே "குட் ஐடியாக்கா.." அப்படின்னு ரைட்..?
ராயல் ராம் : தலைநகரின் தலை சிறந்த தமிழ் பேச்சாளர்'னு சொல்லி சிலை வைக்கிறப்போ அதுவும் பேசிட்டு இருக்கிறமாதிரி தான் வைக்கனுமா??? நிச்சயமா வைக்கமாட்டாங்க அதனால் இப்படி ஒரு சந்தேகம் வரவே வேண்டாம்.. இந்த பேச்சாளர் பட்டமே நண்பர்கள் சும்மா போட்டுவிட்ட பட்டம் தானே..
கவிதா:- சிறந்த பதிவர்கள் –எழுத்தில், மொக்கையில், நகைசுவையில்- மொக்கைக்கு – சென்ஷி , ராப், நகைச்சுவைக்கு - அபிஅப்பா, குசும்பன், சின்னப்பையன், எழுத்துக்கு - பாலைத்திணை காயத்ரி, செல்வநாயகி குறிப்பு: யாரும் தவறாக நினைக்கவேண்டாம். எனக்கு சட்டென்று நினைவுக்குவந்தவர்கள் இவர்க்ள் தான்
சிபி :- நேர்ல பார்க்காத வரை ரொம்ப புத்திசாலி/சாமார்த்தியசாலின்னு எல்லாரையும் நம்ப வைக்கிறீங்களே எப்படி? செண்ட்ரல் ரயில்வெஸ்டேஷனுக்கு வர முன்னாடியே இந்த குசும்பன் சிபி ஜி3 குழுவினர் ப்ளானோடதான் வந்தாங்க.. மூவரும் மாத்தி மாத்தி பேசி என்னை முழிக்கவிட்டாங்க. அப்ப கண்டுபிடிச்ச உண்மைதான் நான் சாமர்த்தியசாலி இல்லைன்னு அதை இங்க விளம்பரம் செய்துட்டாங்க... :) புத்திசாலின்னு எப்பவுமே நான் சொல்லிக்கிட்டதே இல்லை. என்னோடது வெறும் சிறுமுயற்சி என்கிற தன்னடக்கத்தை சிலர் தப்பா புரிஞ்சுகிட்டாங்களோ என்னவோ.. ?
ராப் : அதெப்படி எப்பவும் எல்லாத்தையும் கூலாவே எடுத்துக்கறீங்க? அனுபவம் தான். பொதுவா நான் எப்போதுமே சட்டென்று கோபப்பட்டு எதிராடுவது தான் வழக்கம். இப்போது மிகக்குறைந்திருக்கிறது. கோபத்தால் எனக்கே பூமாராங் மாதிரி திரும்ப அடிபட்டு ... இப்ப கூலா இருக்க பழகிவருகிறேன்.
G3 - மூச்சு விடாம பேசறீங்களே.எப்போதிலிருந்து இப்படி? சின்னவயசிலேர்ந்தே இப்படித்தான். சாப்பாடு கூட வேண்டாம் தண்ணீர்( H 2 O) குடிச்சே பேசுவாளே என்று எனக்கு புகழ் உண்டு.
கவிதா:- உங்களின் பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது. குப்பையை எங்கே போட்டீர்கள்?
மங்கை: - பெண் சுதந்திரம் என்று எதை சொல்லுவீர்கள்? தளையாக எதையும் உணராமல் பெண் காரியங்களை இயல்பாக செய்வது தான். எதை செய்தாலும் யாராவது பெண் என்பதால் மட்டும் அந்த செயலை செய்ய தடை விதித்தால் அங்கே தான் ப்ரச்சனை வருகிறது.
ராயல் ராம் : Delhi Non-stop FM இப்பிடின்னு யாராவது பட்டபேரு வைச்சிருக்காங்களா??? அதான் இப்ப வச்சிட்டீங்களே!
முத்துலெட்சுமி'யின் தத்துவம் : நல்லதொரு மாற்றத்தினைக்காண மாற்றத்தின் முதல்படியா நீங்களே இருங்கள்... மகாத்மா காந்தி
-----------------------------------------
அங்கு வந்திருந்த பின்னூட்டங்களைக் காண க்ளிக் செய்யவும்.
October 20, 2010
நிலவொளியோடும் தீப ஒளியோடும் கங்கை
புகைப்படம் எடுக்கிறோம் என்று தெரிந்தும் மிக பந்தாவாக அந்த பக்கம் இந்த பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.
ரிஷிகேஷ் ஆரத்தி நடப்பது பரமார்த்த ஆசிரமத்தில் என்பதால் அங்கு சென்றோம். கங்கைக்கரையில் படித்துறைக்கு எதிரில் நீருக்குள் ஒரு மேடை அமைத்து அதில் பெரிய சிவன் தவமியற்றும் காட்சி..
மாலை நேரத்திற்கு பிறகு சிவனின் முடியில் இருந்து கங்கை விழுகிறாள். குறிப்பிட்ட நேரம் வரை அந்த படித்துறைக்கு செல்ல முடியாது என காவலுக்கு இருந்தவர் சொன்னதால் அதற்கு எதிர்புறமிருந்த பரமார்த்த ஆசிரமப் பூங்காவில் அமர்ந்திருந்தோம். பூங்கா மிக அழகாக பரமாரிக்கப்படுகிறது. ஆங்காங்கே சில சிலைகள் கதை சொல்கின்றன. தினமும் சத்சங்கம் உண்டு போல.. நாங்கள் சென்றபோது தான் அது முடிந்தது. சத்சங்கம் செய்ய பெரிய ஹால் இருக்கிறது. பாலாஜி மற்றும் சில சாமி சன்னதிகள் பார்த்த நினைவு.
படித்துறைக்கு நுழைய அனுமதி கிடைத்ததும் நாங்கள் படிகளுக்கு பிறகு இருந்த சமதளத்தில் அமர்ந்திருந்தோம். கூட்டம் வரத் தொடங்கும் முன் எங்களைப் போலவே காத்திருந்த இன்னோரு குடும்பத்தினரை அழைத்து கங்கைக்கு பூஜை செய்யத்தொடங்கினார் ஒரு காவி உடையணிந்த குரு ஒருவர். அக்குடும்பத்தினர் எங்களையும் அழைக்கவே நானும் குழந்தைகளும் அதில் கலந்து கொண்டோம். அவர் மந்திரங்களைச் சொல்லி நம் கைகளில் மலர் கொடுத்து பூஜை செய்யும்படி பணித்தார்.
ஒரு வெளிநாட்டுப்பெண் சிவனுக்கு முன்பு படித்துறை கடைசிப்படியில் அமர்ந்து சிறிதுநேரம் த்யானம் செய்தாள்.
பிறகு கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சேரத்தொடங்கியது . வானில் இருள் கவியத்தொடங்கியது கூடவே குளிரும் வந்துவிட்டது .. கங்கைபூஜை செய்த குருவின் மேற்பார்வையில் காவி உடையணிந்து வந்த சிறுவர்கள் சமதளத்தில் வரிசையாக உட்காரவைக்கப்பட்டார்கள்.
அப்போது பூஜ்யஸ்வாமி ஒருவர் வந்தார் .. இவர்களை எல்லாம் ஆஸ்தா போன்ற தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம்.. பிறகு பாடல்கள் பாடினார்கள்.. கங்கா ஆரத்தியின் (போட்டோ கேலரி பரமார்த் தளம்)போது சிறு சிறு தட்டுகளில் தீபம் வந்தது.
அதைகொண்டு மக்களும் ஆரத்தி எடுக்கலாம். நாம் எடுத்துவிட்டு அருகிலிருப்பவருக்கும் அதை கொடுத்து அவர்களை ஆரத்தி எடுக்க செய்யலாம்.
ப்ரதம சிஷ்யை வெளிநாட்டுக்காரங்க போல பாட்டும் ஆரத்தியும் பக்தியுமா இருந்தாங்க..
முழுநிலா இரவில் ராம் ஜூலாவில் நடந்து கங்கையை கடந்தது அருமையான அனுபவம் . ஷேர் ஆட்டோ பிடித்துக்கொண்டு கோவிலூர் மடம் வந்து சேர்ந்தோம். டீவி இல்லாத புதுவருடப்பிறப்பின் இரவு. அங்கே ஏற்கனவே சொல்லியிருந்தேனே நம்ம சாய் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் பான் ஃபயர் செய்ய தயாரிப்பில் இருந்தார்கள். இன்னோரு பக்கம் புதுவருட பிறப்புக்கான சத்சங்க் ஒன்றும் ஒரு அறையில் ஏற்பாடாகி இருந்தது. இரவெல்லாம் முழித்திருக்கப்போவதால் இரவு உணவு தாமதமாக தயார் செய்ய திட்டம் போலும். நாங்களும் காத்திருந்து உணவு மணி அடித்ததும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டோம். 12 மணிக்கு வெடிச்சத்தமும் தொலைபேசி அழைப்புகளும் புத்தாண்டு வாழ்த்துகளை வழங்கியது. . (தொடரும்)
(படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி பார்க்கலாம்)
பிற்சேர்க்கை: கங்கையில் வெள்ளப்பெருக்கு நேர்ந்த போது சிவ்ஜி அடித்து செல்லப்பட்டது நான் அறியாதது. குழந்தைகள் கொடுக்கின்ற கொஞ்ச நேரத்தில் நியூஸ் பார்க்கும்போது ஆரத்தி நடந்த இடமும் சிவனும் வெள்ளத்தில் பாதி மூழ்கியது தெரியும்.. இப்போது பின்னூட்டத்தில் ஸ்வாமி ஓம்கார் சொன்னபின் தான் தேடியதில் இந்த வீடியோ கிடைத்தது..
October 18, 2010
வானவில் இற்றைகள் *
தூங்குவதற்கு முன்பு சில நாள் கலந்துரையாடல் நடக்கும். அப்போது குட்டிபையனுக்கு விதவிதமான கேள்விகள் தோன்றும்.. பெரியவளுக்கு விதவிதமான கதைகள் கேட்பதில் விருப்பமிருந்தது ஒருகாலத்தில்.
கேள்வி: அம்மா நீ பூடி(வயதானவள்) ஆனதும் கூட சமைச்சுத்தருவியா எனக்கு ?
ம் ஆமாடா ஏன்?
கேள்வி : அக்காவும் சமைப்பாளா?
ஏண்டா அவள் சமைக்கனும்.. என்று கேட்டுவிட்டு பின், சரிதான் அவளுக்கும் உனக்கும் சேர்த்தே தான் சொல்லித்தருவேன் சமைக்க.. ஒருநாள் நீ ஒருநாள் அவள் சரியா?
கேள்வி: அப்ப நாம மூணுபேரும் சமைக்க அப்பா மட்டும் சாப்பிடுவாங்களா?
அட அவங்களுக்கும் சிலதெல்லாம் சமைக்கத்தெரியுமே அதெல்லாம் அவங்களை செய்ய சொல்லலாமேடா..
கேள்வி: அப்ப நாம நாலு பேருமே சமைச்சா யாரு சாப்பிடுவது..
நாம தான் ..மாத்தி மாத்தி சாப்பிட்டுக்கலாம் வேணா யாரையாச்சும் கூப்பிட்டு சாப்பாடு குடுக்கலாம்..
ம் சரி..கொர் கொர்
-----------------------
கேள்வி: அம்மா ராத்திரி பல் தேய்க்கும் போது மூக்கில் தண்ணி ஏறிடுச்சு ..அந்த தண்ணி எங்க போகும்?
ம் தொண்டை கிட்ட சாப்பாடு போற பைப் கூட ஒரு கனெக்சன் இருக்கு அது வயிற்றுக்குள்ள போயிடும்..
கேள்வி: அய்யோ வாஷ்பேசின் தண்ணி அழுக்குத்தண்ணி அதை குடிக்கக்கூடாதுன்னியே? இப்ப என்ன ஆகும் ? :(
அதெல்லாம் ஒன்னும் ஆகாது ..இன்னிக்குத்தான் பால் , சாப்பாடு எல்லாம் நல்லா சாப்பிட்டியே அதனால் உள்ள ரத்தத்துல இருக்கிற ஃபைட்டர் செல் எல்லாம் சண்டைபோட்டு கிருமிய கொன்னுடும்
ஓ அப்ப சரி கொர் கொர்..
-------------------------
டைக்வாண்டோவில் சேர்ந்து ஒருவருடத்திற்குள் மஞ்சள் மற்றும் பச்சை பெல்ட் கள் வாங்கி விட்டார்.. ஒயிட் பெல்ட் ஆரம்பநிலைக்கானது.
கேள்வி: அம்மா அக்காக்கும் ஆசையா இருக்காம் டைக்வாண்டோ..அப்ப அவ ஒயிட் பெல்ட் ஆகிடுவாளா?
ஆமா ஒயிட் பெல்ட் இப்பத்தானே சேரப்போகிறா..
நான் க்ரீன் பெல்ட(பெருமையுடன்)..சொல்லித்தருவேன் அக்காக்கு..
அக்காவைப்பார்த்து தம்பி பாடவும் ஆடவும் விரும்பியது போக ..தம்பியைப்பார்த்து அக்காவுக்கு இந்த ஆசையோ அல்லது அடிவிழும் வேகம் பார்த்து தன்னை தற்காத்துக்கொள்ளவோ :)
------------------------------
பள்ளியில் விட்டுவந்த நோட்காக ஒரே அழுகை..அதில் ஹிந்தி வீட்டுப்பாடம் இருந்ததாம்..டீச்சர் மேல் ஓவர் மரியாதையும் பயமும் அழுகைக்கு காரணம்.. அவன் அழுவதை சகிக்காத போது இத்தனை ஒழுக்கமாக இருக்கனுமா என்று வருந்தினேன்.
----------------------------
பக்கத்துவீட்டு தோழன் துருவ், இவன் வாங்கிய பொம்மையைக் காட்டி அவன் ஒன்று வாங்கி இருப்பான். அதைக்காட்டி நம்மை வாங்கித்தர சொல்லி இவன்... (டீலிங்க் நல்லா இருக்கே..)
பொம்மையிலிருந்து இப்ப சினிமாவிற்கும் இடம்பெயர்ந்துவிட்டது இந்த டீலிங்க்..
ரோபோ எந்திரன் குட்டிப்பையன் பார்த்தான்.
பதிலுக்கு தோழன் இராமாயன் போகிறான். மீண்டும் கண்ணீர் விட்டு அழுகை.. ஓ இந்த பட்ஜெட் கட்டுபடியாகாதப்பா..:)
October 13, 2010
சங்கச்சுடரில் அறிமுகம்
October 9, 2010
கதையூர் போயிருக்கீங்களா..?
From golu 2010 |
இதுதாங்க கதையூர் (ஸ்டோரி லேண்ட்) இது ஒரு டீம் ஒர்க் . மகள் அவளுடைய தோழி மற்றும் நான்.
பொம்மைகள் உதவி : குட்டிப்பையன்.
From golu 2010 |
கதைபுத்தகத்திலிருந்து காட்சிகள் :
ஷெர்க் , கோட்டை , ஜேக் அண்ட் தெ பீன்ஸ்டாக் ,மோக்ளி ஜங்கிள் புக் ,ஜிஞ்சர் ப்ரெட் மேனும் அவனைதுரத்தும் மாடு ,குதிரை சாப்பிடக்காத்திருக்கும் நரி, கிணத்துக்குள் விழுந்த சிங்கம், ஸ்லீப்பிங்க் ப்யூட்டி,
From golu 2010 |
From golu 2010 |
ஐஸ் ஏஜ் அணில், மெர்மெய்ட் , சிந்துபாத்தோட கப்பல் (சிந்துபாத் காணோம் )
From golu 2010 |
கார்டூன் கேரக்டர்கள்:
ஜன்னல் வரிசையில் முதலில், கார்ஸ் (அனிமேசன் பட ஹீரோ) ,பவர்பஃப் கேர்ள், பிக்காச்சோ, பென் டென் , பாப்தெ பில்டர் , ஸ்பைடர் மேன், பவர் ரேஞ்சர்ஸ்..
பிக்காசா ஆல்பத்தில் ( http://picasaweb.google.co.in/muthuletchumi/Golu2010?feat=directlink )
கடைசிபடத்தில் பெரியவங்களுக்கு கைக்குட்டை டவல் குழந்தைகளுக்கு தலைக்கு வைக்க க்ளிப்ஸ் இருக்கு எடுத்துக்கோங்க.. மஞ்சள் குங்குமமும் வெத்தலைபாக்கும் போட்டுத்தர மகள் கையால் செய்த நியூஸ் பேப்பர் கவர்கள் கூடவே இருக்கு..
From golu 2010 |
நவராத்திரிக்கு வந்ததற்கு நன்றி நன்றி நன்றி.
September 29, 2010
பம் பம் போலே -நீல்கண்ட்
இரண்டு பெண்கள் வேறொரு மாநிலத்திலிருந்து வந்திருந்தார்கள். கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருத்தியின் அப்பா ராம்தேவ் ஆசிரமத்தில் நடக்கும் யோகவகுப்புக்கு பணம் கட்டி இருப்பதாகவும் அவர் வேறொரு ரயிலில் வருவார் என்றும் இவர்கள் ஹாஸ்டலிலிருந்து வந்து அவர்களுடன் இணைந்துகொள்ள இருப்பதாகவும் சொன்னார்கள். ஆஸ்தா டீவியில் காண்பிக்கும் பெரும் கூட்டம் கூட்டமாக நடக்கும் யோக வகுப்புக்களுக்கு இப்படித்தான் எங்கெங்கிருந்தோ வருகிறார்கள் போலும்..
ரிஷிகேஷில் இறங்கும்போது சற்று கதிரொளியால் கதகதப்பைப் பெற்றோம். ஷேர் ஆட்டோவில் தங்குமிடம் சென்றோம். ரிஷிகேஷ் யோகா வகுப்புக்களுக்கு ப்ரசித்தி பெற்ற இடம். பார்க்குமிடமெல்லாம் சுருட்டிவைக்கப்பட்ட யோகா விரிப்பு நீட்டிக்கொண்டிருக்கும் பெரிய முதுகுப்பையுடன் யாராவது ஒரு வெளிநாட்டு பயணியை எதிர்படுகிறோம்.
ஹரித்வாரைப்போன்ற ஆராவாரங்கள் கொஞ்சம் ரிஷிகேஷில் குறைவு அதனாலேயே முன்பே வடக்குவாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன் ரிஷிகேஷிலேயே நீங்கள் தங்கலாமே என்று அறிவுறுத்தினார். ஆனால் முதல் முறை என்பதால் ஹரித்வாரிலும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் நாங்கள் ஹரித்வாரில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டோம். ரிஷிகேஷில் திருக்கோவிலூர் மடத்தைச் சேர்ந்த தங்குமிடத்தைப் பற்றியும் கூறி இருந்தார்.
மடத்தின் பொறுப்பை மேற்கொள்ளும் ஆச்சி எப்போதும் பிசியாகவே இருந்தார். எங்களுக்கு அறையின் சாவியைத்தந்தார். கல்லூரியின் ஹாஸ்டல் போல.. அறை எளிமையாக ஆனால் வசதிக்குறைவு ஏதுமின்றி இருந்தது. குளித்து உடைமாற்றி வந்தபோது உணவுக்கூடத்தில் கூட்டமாக இருந்தது. மடம் ஊருக்கு வெளியே இருப்பதால் இங்கேயே உணவருந்தவேண்டும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு கூட்டமா என்று பார்த்தோம். நல்ல இட்லியும் மெதுமெதுவடையும் கேசரியும் மணக்கும் சாம்பரும் கிடைத்தது. பின்பு தான் தெரிந்தது வந்திருக்கும் கூட்டம் தில்லியைச்சேர்ந்த சாயி மன்றத்தினர் என்றும் அவர்கள் வருடப்பிறப்பை இங்கே கொண்டாடுவது வழக்கமென்றும்... அவர்கள் கூடவே அழைத்து வந்திருக்கும் சமையல்காரர்கள் புண்ணியத்தில் தான் இந்த உணவு வரிசைகள். மற்ற நேரத்தில் மடத்தைச் சேர்ந்த சமையல்காரரின் சுமாரான சாப்பாடு கண்டிப்பாக உண்டு தான்.
மடத்திலிருந்து சற்று தூரம் நடந்து முக்கிய சாலையை அடைந்த பின் ஷேர் ஆட்டோ கிடைக்கிறது அதில் ஏறி நாங்கள் லஷ்மண் ஜூலா சென்றோம். அதன் அக்கரையில் நீல்கண்ட் செல்லும் வண்டிகள் கிடைக்குமென்று ஆச்சி எங்களுக்கு சொல்லி இருந்தார்கள். லஷ்மண் ஜூலாவிற்கு ஒரு இடத்தில் இறக்கிவிடுகிறார் ஆட்டோக்காரர் .
(படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கியும் பார்க்கலாம்)
அங்கிருந்து குறுகிய ,கடைகள் நிறைந்த ஒரு இறக்கப்பாதையில் இறங்கி நடந்தோம். வழியில் ஓரிடத்திலிருந்து எடுத்த படம் தான் மேலே இருப்பது. ஜூலா என்றால் ஊஞ்சல் என்று அர்த்தம். கங்கைக்கரையின் மிக உயரமான இரண்டு புறத்தையும் இணைக்கும் அந்த தொங்குபாலம் மிக அற்புதமான ஒன்று தான்.
மறுகரையில் இருக்கும் அந்த கோயில் பல அடுக்குகளாக அழகாக காட்சி தருகிறது. நாங்கள் அதற்குள் நுழையவில்லை.
மறுகரையில் ஜீப்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. பேருந்துகளைப்போல அவை லக்ஷ்மன் ஜூலாவிலிருந்து நீல்கண்ட் சென்று திரும்புகின்றன. போகும் போதே நாம் தலைக்கு 90 ரூ என்று நினைக்கிறேன் பேசிக்கொண்டால் இருந்து அழைத்து வந்துவிடுகிறார்கள்..
போகும் வழியெல்லம் கங்கையின் பேரழகையும் மலையழகையும் என்னால் வார்த்தைகளில் அடக்க இயலாது. ஜீப்பின் ஓரத்தில் அமர்ந்தபடி ஒரு கையால் பேலன்ஸ் செய்துகொண்டு மறுகையால் எடுத்த படங்கள் இவை. ஹரித்வாரும் ரிஷிகெஷும் அப்போது கும்பமேளா தயாரிப்பில் இருந்தது. கரையோரங்களில் முக்கிய ப்ரமுகர்களும் சாதுக்களும் தங்க டெண்ட்கள் கட்டப்பட்டிருந்தது. பார்க்கவே ஆசையாக இருந்தது.
வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் வெளியூர்க்கார வண்டி ஓட்டிகள் தான் மிக ஆபத்தானவர்கள். வேகம் குறையாமல் வருவது மலைப்பாதையில் எதிர்படும் வாகனங்களுக்கு வழிவிடும் வழிமுறையும் தெரியாமல் திகில் ஏற்படுத்துகிறார்கள்.
நீல்கண்ட் சிவன் கோயில் . நேரம் ஆக ஆக கோயிலின் வெகுதூரத்திலேயே பார்க்கிங் செய்யவேண்டிய நிலை. கொஞ்ச தூரம் நடக்க்வேண்டியதானது.
ஆரஞ்சும் மஞ்சளுமான பூக்கள் கொண்டு செய்திருந்த அலங்காரம் கண்ணைப்பறித்தது. வெளிப்பகுதியில் ஒரு சின்னக்குழந்தை சிவன் பளிங்கில் சாய்ந்தவாக்கில் படுத்திருக்கிறார்.
கோயிலின் உள்ளே செல்ல சன்னிதிக்கு சில படிகள் கீழே இறங்கி நடக்கவேண்டி இருந்தது. எல்லாரும் கைகளில் பால் மற்றும் தண்ணீர் அபிசேகத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். ப்ளாஸ்டிக் டம்ளர் தண்ணீர் விற்கிறது.
பம் பம் போலே பம் பம் போலே என்று உணர்ச்சி அலைகளுடன் சென்று அந்த சிறிய லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
ரிஷிகேஷ் ஆரத்தியை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.